செய்திகள்

தமிழரசுக் கட்சி வேட்பாளராக முன்னாள் போராளி? திருமலையில் விண்ணப்பம்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர், இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட விண்ணப்பித்துள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. ரூபன் என அழைக்கப்படும் அமிர்தலிங்கம் ரவீந்திரா என்பவரே இவ்வாறு விண்ணப்பித்துள்ளார்.

2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்ட பின்னர், முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களை இணைத்துக் கொள்வதை, இலங்கைத் தமிழரசுக் கட்சி தவிர்த்து வருகின்றது.

மேலும் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவருக்கு ரூபன் அனுப்பி வைத்துள்ள விண்ணப்பத்தில், இளம் போராளியாக தான் மட்டக்களப்பு சிறையில் இருந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இவர் 1987ஆம் ஆண்டு இந்திய இலங்கை உடன்படிக்கையின் பின்னர் விடுதலைப் புலிகளின் வடக்கு – கிழக்கு இடைக்கால நிர்வாக சபையில் அங்கம் வகித்தவர் எனவும் 1990ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவுடன் பேச்சு நடத்திய விடுதலைப் புலிகளின் குழுவில் தானும் உள்ளடங்கியிருந்ததாகவும் கூறியுள்ளார்.