தமிழரின் வாக்குகளைப் பெறவே அரசு புலம்பெயர் தமிழர்களுடன் பேசுகிறது; சம்பிக்க
பொதுத்தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காகவே இந்த அரசாங்கம் புலம் பெயர் தமிழ் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானித்திருப்பதாகத் தெரிவிக்கும் ஜாதிக ஹெல உருமய கட்சி , விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆதரவான புலம் பெயர் அமைப்புகளுடன் பேச்சுவார்தை நடத்துவதற்கான மக்கள் ஆணை இவ்வரசாங்கத்துக்கு வழங்கப்படவில்லையென த்தெரிவித்துள்ளது.
பத்தரமுல்லையிலுள்ள ஜாதிக ஹெல உருமய கட்சித் தலைமை காரியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அக்கட்சியின் செயலாளரும் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது;
இலங்கையில் தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் விபரங்கள் வர்த்தமானி மூலமாக வெளியிடப்பட்டுள்ளன. அவ்வாறு தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதோ பேச்சுவார்த்தை நடத்துவதோ சட்டத்துக்குப் புறம்பான செயற்பாடாகும்.
அதுமட்டுமல்லாது தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆதரவான புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதனூடாக இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் ஏற்படுத்த முடியாது.
அத்துடன் இவ்வாறான பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கு முன் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் ‘ ஐக்கிய இலங்கை ’ என்ற கொள்கையினை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக அரசாங்கம் புலம் பெயர் தமிழ் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தீர்மானித்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்க விடயமாகும்.
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு வழங்கும், நாட்டில் பிளவினை ஏற்படுத்த விரும்பும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அதிகாரத்தை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கவில்லை எனத் தெரிவித்தார்.