செய்திகள்

தமிழரும் முஸ்லிம்களும் இணைந்து தமது உரிமைகளை பெறவேண்டும்: கிழக்கு முதல்வர்

கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லிம் மக்கள் பிரிந்துசெல்லாமல் ஒன்றுபட்டு எமது உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கான வழிவகைகளை மேற்கொள்ளவேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அகமட் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்ற காணி உறுதி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
இந்த நாட்டில் சமூகங்களிடையே நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் வகையில் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பல நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றார்.நல்லாட்சியை மேற்கொண்டுவருகின்றார்.அதன்அடிப்படையிலேயே கஸ்டங்களை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கு இந்த காணி உறுதிகள் வழங்கப்படுகின்றன.

கிழக்கு மாகாணத்தில் நாங்கள் புதிய ஆட்சியை கொண்டுவந்துள்ளோம்.எவ்வாறு மத்தியில் ஒரு கூட்டாட்சி நிலவுகின்றதோ அதனைவிட சிறந்த ஆட்சியை கிழக்கு மாகாணசபையில் நிறுவியுள்ளோம்.அதற்காக பங்களித்த தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு நன்றிசொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

நாங்கள் எல்லோரும் இணைந்து,இன,மத வேறுபாடுகளை மறந்து,கட்சி வேறுபாடுகளை மறந்து,பல விட்டுக்கொடுப்புகளை செய்து இணைந்து செயற்பட நாங்கள் இணைந்துள்ளோம்.இது கிழக்கு மாகாணத்து மக்களின் முன்னேற்றத்துக்காக வளர்ச்சிக்காக,அவர்களின் கண்ணீரை துடைப்பதற்காக இந்த இணைப்பினை தொடர்ந்து பேணுவோம்.அதற்காக எந்த விட்டுக்கொடுப்பினையும் செய்ய நாங்கள் தயாராகவிருக்கின்றோம்.

கிழக்கு மாகாணசபையினை பொறுத்தவரையில் அனைத்து கட்சிகளின் உறுப்பினர்களும் அங்கம் வகிக்கின்றனர்.கடந்து வந்த கஸ்டமான காலங்கள் நிவர்த்திசெய்யப்பட்டு சிறந்த தீர்வுகள் வழங்கப்படும்.
நாங்கள் மக்களின் தேவைகளை பூர்த்திசெய்வதற்காக அரசியலுக்கு வந்தவர்கள். அரசியல் அதிகாரம் மக்களின் துயரை துடைக்கும் பதவியே தவிர எமது சுயஇலாபங்களுக்காக எமது சுயகௌரவத்துக்கா வழங்கும் பதவி அல்ல.

கிழக்கு மாகாணசபை முன்னோடி மாகாணசபையாக,கிழக்கு மாகாணத்துக்கு மட்டுமன்றி இந்த நாட்டுக்கு முன்னோடியான மாகாணசபையாக ஆட்சி மலரும்.எந்தவித இனவேறுபாட்டுக்கும் அங்கு இடமில்லாமல்,அனைத்து இனத்துக்கும் சம அளவிலான பங்கீடுகள் வழங்கப்பட்டு சிறந்தமுறையில் நடாத்தப்படும்.

இவ்வாறான நல்லாட்சியில் மக்களும் தங்களும் தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை மறந்து ஒன்றுபடவேண்டும்.நாங்கள் எங்களுக்குள் இன முரண்பாடுகளை தொடர்ந்து முன்கொண்டு செல்லப்பட்டால் எமது அடிமட்டத்தில் நாங்கள் மாற்றத்தினை ஏற்படுத்தமுடியாது.

அரசியல் பிரதிநிதிகளாகிய நாங்கள் ஒற்றுமைப்பட எவ்வாறு எண்ணியுள்ளோமோ, அதுபோல் ஒன்றுபட மக்களும் முன்வரவேண்டும்.நாங்கள் இன்னொரு இனத்தினை குறைகூறும் கலாசாரத்தில் இருந்து மாறவேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்திலே தமிழ்,முஸ்லிம் சமூகங்கள் 98வீதம் உள்ளது.இந்த மாவட்டத்தில் இரண்டு இனங்களும் ஒற்றுமைப்படவேண்டிய காலகட்டமாகும்.கடந்த 30வருடமாக மறக்கமுடியாத பல துர்ப்பாக்கிய சம்பவங்களினால் நாங்கள் பிரிந்துநின்றோம்.

ஆனால் தொடர்ந்து நாங்கள் பிரிந்திருக்கமுடியாது. அரசியல்வாதிகள் ஒற்றுமைப்படுவதுபோன்று அதிகாரிகளும் பொதுமக்களும் ஒன்றுபடவேண்டிய காலம் தற்போது ஏற்பட்டுள்ளது.அவ்வாறு நாங்கள் ஒன்றுபட்டால் எங்களை யாராலும் பிரிக்கமுடியாது.அவ்வாறு ஒன்றுபடும்போது எங்களது உரிமைகளை யாராலும் தடுத்துநிறுத்தமுடியாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.

இவ்வாறான நிலையில் நாங்கள் பிரிந்துநிற்காமல் எங்களது உரிமைகளை எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம் என்பது தொடர்பில் சிந்தித்து செயற்படவேண்டும்.இந்த மாவட்டத்தில் முக்கிய பிரச்சினை இரண்டு இருக்கின்றது.மேய்ச்சல் தரைப்பிரச்சினை.இந்தப்பிரச்சினைக்கு அனைவரும் இணைந்து தீர்வினை கண்டேதீருவோம்.ஏனென்றால் இதனால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இனமுறுகல்கள் ஏற்பட்டுள்ளது.ஆகவே அனைவரும் இணைந்து இதற்கான தீர்வினை எடுத்தே தீருவோம்.

அதேபோன்று முறையான அனுமதியின்றி பயிர்ச்செய்கை நடாத்தப்படுகின்றது.இது தொடர்பில் நியாயமான முறையில் அவற்றினை சட்ட மூலமாக்குவதற்கான நடவடிக்கையினை எடுப்போம்.