செய்திகள்

தமிழர்களுக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்த தந்தை செல்வா போன்ற தலைவனை இதுவரை நாம் கண்டதில்லை (படங்கள்)

தமிழர்களின் வாழ்வு தான் தன்னுடைய வாழ்வு எனத் தன் வாழ்வையே தமிழர்களுக்காக அர்ப்பணித்த தந்தை செல்வா போன்ற தலைவனை இதுவரை நாம் கண்டதில்லை.

இவ்வாறு புகழாரம் சூட்டினார் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் விரிவுரையாளர் ச.லலீசன்.

தந்தை செல்வாநாயகத்தின் 38 ஆவது நினைவு தினம் யாழ்.நகரிலுள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் அண்மையில் இடம்பெற்ற போது கலந்து கொண்டு நினைவுப் பேருரை ஆற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாம் இன்று தமிழ்த் தேசியம்,ஈழம் என்று வாழ்கிறோம் என்றால் தனக்கென வாழாது தான் சார்ந்த இனத்துக்காக வாழ்ந்து சென்ற தந்தை செல்வா எனும் ஒரு பெரிய மனிதர் தான் காரணம்.

ஒரு சிறிய தீவிலே சிறுபான்மையாகவுள்ள தமிழினத்தை உலகம் தெரிந்து கொண்டுள்ளது என்றால் அதற்கும் காரணம் தந்தை செல்வா தான்.

அந்தளவுக்குத் தந்தை செல்வா அவர்கள் தமிழினத்தின் விடுதலைக்கும், விடிவுக்குமாகத் தனது வாழ்நாள் முழுவதுமாகப் போராடியவர். எமது இனத்திற்காக இதுவரை யாரும் அகிம்சை வழியில் போராடவில்லை.

சிறுபான்மை இனமொன்று வெற்றியடைய வேண்டுமானால் ஒற்றுமை அவசியம்.நாம் சாதி ,மத பேதங்களால் பிரிந்து கிடந்தால் எமக்கு எப்போதும் விடிவு கிடைக்காது. இத்தகைய பிரிவுகளால் தமிழ்ச் சாதி என்றும் உருப்படப் போவதில்லை.

பிரிந்து கிடக்கும் எமது சமுதாயத்தை ஒன்றிணைப்பது என்பது காலத்தின் கட்டாயமாகும். பல பிளவுகளால் பிளவுபட்டுள்ள எமது சமுதாயத்தைத் தந்தையின் பெயரால் நாம் ஒன்றிணைக்க வேண்டும்.

தந்தை செல்வாவினை அச்சாணியாகக் கொண்ட தமிழ்த் தேசியம் எனும் தேரை நகர்த்த வேண்டுமென்றால் அத் தேருக்குக் கீழ் நாமனைவரும் ஒன்றிணைய வேண்டும். அதன் மூலமே தமிழ்த் தேசியம் எனும் தேரைச் சரியான வழியில் கொண்டு செல்ல முடியும் என்றார்.

யாழ்.நகர் நிருபர்-

IMG_2512

IMG_2511