செய்திகள்

தமிழர்களை உயிருடன் பிடித்து சென்று சுட்டுக்கொன்றது பொலிஸ்! பரபரப்புத் தகவல் அம்பலம்

இந்தியாவின் திருப்பதி அருகே ஆந்திர சிறப்பு காவல்படையினரால் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை முதல் நபராக கண்டித்த முன்னாள் எம்.பி. சிந்தா மோகன் வழங்கிய சிறப்பு பேட்டியில் அதிர்ச்சியளிக்கும் தகவல்களைக் கூறியுள்ளார்.

அதில் வயிற்றுப்பிழைப்பிற்காக வந்த தமிழர்களை நகர்ப்புறத்தில் வைத்து பிடித்துச்சென்று, நிராயுதபாணியாக நிற்கவைத்து, கைகளை கட்டி ஆந்திரா போலீஸ் சுட்டுக்கொன்றதாக சிந்தா மோகன் கூறினார். சுட்டுக்கொன்ற 20 பேரின் உடல்களையும் காட்டுக்குள் கொண்டு சென்று வீசியதாகவும் சிந்தா மோகன் கடும் குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் கிடக்கும் செம்மரங்கள் அனைத்தும் 5 வருடங்களுக்கு முன் வெட்டப்பட்டது என்றும், அவை குடோன்களில் இருந்து கொண்டு வரப்பட்டதற்கு அடையாளமாக பெயிண்ட் பூசப்பட்டிருந்ததாகவும், எண்களால் குறியீடு செய்யப்பட்டிருந்ததாகவும் சிந்தா மோகன் கூறினார்.

நேற்று மாலை 1 மணியளவில் தேசிய மனித உரிமை ஆணையாளராக உள்ள கே.ஜி.பாலகிருஷ்ணனை டெல்லி விமான நிலையத்தில் நேரில் சந்தித்து இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும் என்று தான் வலியுறுத்தியதாகவும், அதனையேற்று உடனடியான அவர் ஆந்திர டி.ஜி.பி.க்கு நோட்டீஸ் அனுப்பியதாகவும் சிந்தா மோகன் தெரிவித்தார். மேலும் வரும் 23-ந் தேதி ஐதராபாத்திற்கு நேரடியாக வந்து இச்சம்பவம் குறித்து பாலகிருஷ்ணன் விசாரிக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

தற்போது உயிரிழந்தவர்களின் உறவினர்கள், பலியானவர்கள் வைக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு வந்துள்ளதாகவும், தானும் அங்கு சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்த சிந்தா மோகன் தன்னால் இயன்ற அளவுக்கு அவர்களுக்கு உதவி செய்வதாகவும் உறுதியளித்தார்.

இறுதியாக அப்பாவி தமிழர்களை சுட்டுக்கொன்ற ஆந்திர பொலிசாரின் செயல் மிகப்பெரிய அநீதி என்று தெரிவித்துள்ள அவர், நீதி விசாரணை நடத்தி தவறு செய்த பொலிசாரை தண்டிக்க தொடர்ந்து போராடுவோம் என்று தெரிவித்தார்.