செய்திகள்

தமிழர்கள் சிங்களமும் – சிங்களவர்கள் தமிழும் கற்பதை வலியுறுத்தும் கல்விக் கொள்கை அவசியம்: டக்ளஸ்

இம் மாதத்தில் புதிய கல்விக் கொள்கையை வெளியிடவுள்ளதாக பிரதமர் ரணில் விக்சிரமசிங்ஹ அவர்கள் தெரிவித்துள்ளார். எமது நாட்டைப் பொறுத்த வரையில் தேசிய நல்லிணக்கமானது அர்த்தமிக்கதாகக் கட்டியெழுப்பப்பட வேண்டியது மிகவும் அவசியமாகவுள்ளது. இதனூடாகவே நாம் எமது பல்வேறு பிரச்சினைகளை நிரந்தரமாகத் தீர்த்துக் கொள்ள முடியும். இந்த நிலையில், தமிழ் மாணவர்கள் சிங்கள மொழியையும், சிங்கள மாணவர்கள் தமிழ் மொழியையும் கற்பது அவசியமாக்கப்பட்ட கல்விக் கொள்கையே எமது நாட்டுக்கு உகந்தது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், மொழிப் பிரச்சினையானது எமது நாட்டில் பல்வேறு சிக்கல்களுக்கு காரணமாகியுள்ளது. பேரூந்துகளில் பயணஞ் செய்வது முதற்கொண்டு, அரச அலுவலகங்கள், நீதி மன்றங்கள் உட்பட்ட பல்வேறு இடங்களிலும் மொழிப் பிரச்சினை காரணமாக எமது மக்கள் பல்வேறு இடையூறுகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

ஆணைக்குழுக்கள் மற்றும் பொது மக்கள் பிரச்சினைகள் சார்ந்து அரசு அமைக்கும் பல்வேறு குழுக்களிடம் எமது மக்கள் தங்களது பிரச்சினைகளைக் கூறவும், அவற்றை அதிகாரிகள் விளங்கிக் கொள்ளவும் மொழிப் பிரச்சினையானது பெரும் தடையாகவே உள்ளது.

எமது நாட்டில் அர்த்தப்பூர்வமான தேசிய நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமானால் இரு தரப்பு மக்களும் இரு தரப்பு மக்களினதும் உணர்வுகளைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். மக்களிடையே அவ்வாறான புரிதல்கள் இன்றிய நிலையில், மொழி தெரியாத அதிகாரிகளால் – அரசியல்வாதிகளால் மாத்திரம் தேசிய நல்லிணக்கம் தொடர்பான விடயங்களை மக்களுள் திணித்து அதன் மூலமாக அர்த்தமுள்ள தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது.

எனவே, எமது புதிய கல்விக் கொள்கையானது, இவ்விடயங்களை உள்வாங்கிய நிலையில் இரு மொழிக் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தியதாக அமைய வேண்டுமென செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

R-06