செய்திகள்

தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட காட்டருகே ‘புலி’ படப்பிடிப்பு

திருப்பதி வனப்பகுதியில் தமிழர்கள் சுட்டுக்கொல்லப் பட்ட காட்டருகே நடிகர் விஜய் நடித்து வரும் ‘புலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

`புலி ` படத்தின் கதாநாயகி ஸ்ருதி ஹாசன், விஜய் ஆகியோர் நடிக்கும் காட்சிகள், திருப்பதி சேஷாசலம் காட்டுப் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை படமாக்கப்பட்டுள்ளது. அதே நாளில் திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் ஆந்திர போலீஸ் நடத்திய என் கவுன்ட்டரில் தமிழகத்தைச் சேர்ந்த மரம் வெட்டும் தொழிலாளர்கள் 20 பேர் பலியாயினர்.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட அன்று மாலை படப்பிடிப்பை முடித்துக் கொண்டு திருப்பதிக்கு திரும்பி வந்து கொண்டிருந்த படப்படிப்பு குழுவினர், தலக்கோணம் பகுதி உள்ளிட்ட பல இடங்களில் தீவிர வாகன சோதனை நடப்பதை அறிந்து விசாரித்தனர்.

அப்போது படப்பிடிப்பு நடைபெற்ற இடத்திலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் என்கவுன்ட்டர் நடந்தது தெரியவந்தது. இதை அறிந்த நடிகர் விஜய் உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாயினர்.