செய்திகள்

தமிழர் தாயகத்தில் மதுபாவனையும் சிறுவர் துஷ்பிரயோகங்களும் திட்டமிட்ட ரீதியில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன: வட மாகாண சபை உறுப்பினர் கஜதீபன்

இன்று எமது தாயகத்தில் என்றுமில்லாதவாறு மதுபாவனையும், சிறுவர் துஷ்பிரயோகங்களும் திட்டமிட்ட ரீதியில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.எமக்குத் தெரியாமலேயே இவற்றுக்கு அடிமையான நிலையில் இவற்றிலிருந்து மீள முடியாமல் செல்லும் வழியறியாது திணறிக் கொண்டிருக்கிறோம்.அண்மையில் எமது பிரதேசங்களில் நடைபெறும் சம்பவங்கள் இவற்றுக்கு உதாரணங்களாகக் காணப்படுகின்றன.இவற்றையெல்லாம் கட்டுப்படுத்தி எமது சிறார்களின் பாதுகாப்பை அனைவரும் சேர்ந்து உறுதிப்படுத்துவோம் என வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் தெரிவித்துள்ளார்.

யாழ்.மானிப்பாய் மெமோரியல் ஆங்கில பாடசாலையில் அண்மையில் இடம்பெற்ற சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வுக் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாம் எல்லோரும் நடந்த சம்பவங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றோம்.உண்மையிலேயே இவ்வாறான சம்பவங்கள் இன்னும் ஒரு தடவை இந்த மண்ணிலே நடந்துவிடக் கூடாது என்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் நாங்கள் உடனடியாகவே செயலில் இறங்க வேண்டிய அவசியமான அவசரமான காலகட்டமாக இது காணப்படுகிறது.அதனால் தான் பாடசாலைகளில் மிக அவசரமாக இவ்வாறான விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை மாணவர் மத்தியிலே ஏற்பாடு செய்து நடாத்தப்படுகின்றது.சிறுவர் நலன்சார்ந்த துறையிலே பாண்டித்தியம் பெற்ற அறிவார்ந்த அங்கீகரிக்கப்பட்டவர்களைக் கொண்டு இவ்வாறான செயற்திட்டங்களை நாங்கள் முன்னெடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்திருக்கின்றோம்.குறிப்பாக அண்மையில் வடமாகாணக் கல்வியமைச்சர் குருகுலராசா தலைமையிலே இடம்பெற்ற கல்வி அபிவிருத்திக் கூட்டத்திலும் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.மேற்படி தீர்மானத்துக்கமைவாக அனைத்துப் பாடசாலைகளும் இச் செயற்திட்டத்தில் இணைந்து கொள்வார்கள் என நான் நினைக்கின்றேன்.

அந்த வகையில் தான் இன்றைய தினம் மானிப்பாய் மெமோரியல் பாடசாலையில் இக்கருத்தரங்கு இடம்பெறுகிறது.இக் கருத்தரங்கில் பிரதேசத்துக்குப் பொறுப்பான காவல்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளமை சிறப்பானதாகும்.குற்றமொன்று இடம்பெற்ற பின்னர் நடவடிக்கைகள் மேற்கொள்வதிலும் பார்க்க அக்குற்றம் இடம்பெறாமல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வதே காவல்துறை அதிகாரிகளின் கடமையாகும்.இச் செயற்பாட்டில் காவல்துறை அதிகாரிகள் ஈடுபட வேண்டுமென இச் சந்தர்ப்பத்தில் வலியுறுத்த விரும்புகிறேன்.

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படுகின்ற போதைப் பொருள் பாக்கு விற்பனை,நவீன தொடர்பு சாதனங்களைத் தவறாகப் பயன்படுத்தும் போக்கு,சிறுவர்,சிறுமியர் மீதான தொந்தரவுகள் என்பவற்றைக் கண்டறிந்து களையெடுக்க வேண்டிய பாரிய பொறுப்பு பெற்றோர்கள்,பாடசாலை சமூகத்தினர் மற்றும் காவல்துறையினர் என அனைவருக்கும் உரியது.நாமனைவரும் எமது பொறுப்பை உணர்ந்து செயற்பட்டால் மாத்திரமே திட்டமிட்டுக் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இந்த அனர்த்தத்திலிருந்து எமது தாயகச் சிறார்களைக் காப்பாற்ற முடியும்.

இந்தச் செயற்திட்டத்தை நாம் பாடசாலை மட்டத்திலிருந்து ஆரம்பிப்பதன் காரணம் இந்த வயதிலிருப்பவர்களைத் தான் நன்மையோ,தீமையோ மிகவும் இலகுவாகப் பழக வைக்க முடியும்.ஆகவே தீமைகளிலிருந்து எமது எதிர்காலத் தலைமுறையைக் காப்பாற்றி நல்வழியில் நடைபோட வைக்க வேண்டுமானால் பாடசாலைகளே அதற்கான சிறந்த களங்கள் என நாம் கருதுகின்றோம்.இன்றைக்கும் எம்மிலிருக்கக் கூடிய நல்ல பழக்கவழக்கங்கள்; எதுவானாலும் அது பாடசாலைகளிலிருந்து கற்றுக் கொண்டவையேயாகும்.அதனால் தான் எமது இச் செயற்திட்டத்தை நாம் பாடசாலைகளிலிருந்து ஆரம்பித்துள்ளோம்.இன்றைய சீரழிவுச் செயற்பாடுகளும் பாடசாலைகளை நோக்கியே ஏவி விடப்பட்டுள்ளதும் இதற்கான காரணமாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் எறிபந்து போட்டியில் மாகாண மட்டத்தில் வெற்றி பெற்றுத் தேசிய மட்டத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட விளையாட்டு அணியில் இடம்பெற்ற வீரர்கள் நினைவுப் பரிசில் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் கஜதீபன்,பாடசாலை அதிபர் எஸ்.மாதவன்,பழைய மாணவர் சங்கத் தலைவர்,மானிப்பாய் காவல்துறையினர்,பாடசாலை ஆசிரியர்கள்,மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். யாழ்.நகர் நிருபர்-

20150529_122351 20150529_122422 20150529_123939