செய்திகள்

தமிழர் போராட்டங்களின் இலக்கு என்ன ?

யதீந்திரா

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையில் – என்னும் சுலோகத்தின் கீழ் இடம்பெறும் எதிர்ப்பு பேரணி, தமிழ்ச் சூழலில் கவனத்தை பெற்றிருக்கின்றது. குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் செயற்பாட்டாளர்கள் மத்தியில் ஒரு வகையான உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இலங்கை அதன் 73வது சுதந்திர தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கும் சூழலில்தான், வடக்கு கிழக்கில் இவ்வாறானதொரு எதிர்ப்பு பேரணி திட்டமிடப்பட்டிருக்கின்றது. அதே வேளை அடுத்த மாதம் இடம்பெறவுள்ள ஜெனிவா அமர்வு தொடர்பில் அனைவரது பார்வையும் திரும்பியிருக்கின்ற நிலையிலும்தான், இவ்வாறானதொரு நிகழ்வு இடம்பெற்றிருக்கின்றது.

நிகழ்வை திட்டமிட்டவர்கள் தருணம் பார்த்து நிகழ்வை ஒழுங்குசெய்திருக்கின்றனர். இந்த காலப்பகுதி அதிக கவனிப்பை பெறுவதற்கு உகந்த காலமென்று அவர் கணித்திருக்கக் கூடும். வழமையான எதிர்ப்பு நிகழ்வுகளுக்கும் இதற்குமிடையில் ஒரு வேறுபாடுண்டு. அதாவது வழமையாக இவ்வாறான செயற்பாடுகள் வடக்கில் திட்டமிடப்பட்டு, கிழக்கிற்கு நகர்த்தப்படுவதுண்டு. ஆனால் இந்த ஏற்பாடு கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வடக்கு நோக்கி நகர்த்தப்பட்டிருக்கின்றது. பொதுவாக ஒரு விமர்சனமுண்டு. அதாவது, அனைத்தும் வடக்கிலிருந்துதான் கிழக்கிற்கு இறக்குமதி செய்யப்படுகின்றது. இந்த நிகழ்வை திட்டமிட்டவர்கள் இத்தகைய விமர்சனத்தை தவிர்க்க எண்ணியிருக்கலாம். பொதுவாக இவ்வாறான எதிர்ப்பு நடவடிக்கைகள், சிவில் சமூகத்தின் ஏற்பாடாக காண்பித்துக் கொண்டாலும் கூட, தமிழ் அரசியல் கட்சிகளின் தலையீடுகளை தவிர்க்க முடிவதில்லை. வடக்கு கிழக்கில் இடம்பெறும் எந்தவொரு நடவடிக்கையின் போதும் அரசியல்வாதிகளை தவிர்க்கவும் முடியாது. ஏனெனில் இவ்வாறான செயற்பாடுகளை தனித்து செய்யக் கூடிய வல்லமையுடன் தமிழ் சிவில் சமூகம் இல்லை.

அடிப்படையில், சிவில் சமூகம் என்பது ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு குழுவையே குறிக்கும். அது ஒட்டுமொத்த மக்களை குறிப்பதல்ல. ஒரு குறிப்பிட்ட விடயத்திற்காக மக்களை அணிதிரட்டும் நோக்கங்கங்களுடன் இயங்கும் குழுக்களையே சிவில் சமூக அமைப்புக்கள் என்று வரையறுக்க முடியும். வடக்கு கிழக்கை பொறுத்தவரையில் அவ்வாறான அமைப்புக்கள் பலமாக இல்லை. உண்மையில் ஒழுங்குபடுத்தப்பட்ட வகையில் சிவில் சமூக அமைப்புக்கள் என்று கூறக் கூடிய நிலையில் எந்தவொரு அமைப்பும் இல்லை. சில தனிநபர்களும் அவர்களால் அழைக்கப்படுவவர்களுமே தங்களை சிவில் சமூக அமைப்புக்களாக அடையாளப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறானவர்கள் பெரும்பாலும் சில நடவடிக்கைகள் நிகழும்போதே தங்களை சிவில் சமூகமாக அடையாளப்படுத்துகின்றனர். இதன் காரணமாக, சிவில் சமூகங்களின் ஏற்பாடாக அடையாளப்படுத்தும் பேரணிகள் இறுதியில் தேர்தல் நோக்க அரசியல்வாதிகளுக்கான அணிதிரட்டலாகவே முடிவுறுவதுண்டு.

இதற்கு எழுக தமிழ் என்னும் சுலோகத்தின் கீழ் இடம்பெற்ற பேரணிகள் சிறந்த உதாரணம். எழுக தமிழ் சில கோரிக்கைகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும் கூட, இறுதியில் அது, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் விக்கினேஸ்வரன் ஆகியோரது அரசியல் வெற்றிக்கே பயன்படுத்தப்பட்டது. தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் பொத்துவில் தொடங்கி பொலிகண்டிவரையில் என்னும் எதிர்ப்பு பேரணியும் இவ்வாறான பலவீனங்களுடன்தான் நடந்திருக்கின்றது. எதிர்காலத்தில் இது போன்று எத்தனை பேரணிகள் இடம்பெற்றாலும் அவை அனைத்திலும் முன்னர் இடம்பெற்ற தவறுகளே மீளவும் இடம்பெறும். ஏனெனில் வடக்கு கிழக்கில் பெருமெடுப்பிலான மக்கள் திரள் அரசியலை மேற்கொள்ளக் கூடிய ஏதுநிலைகள் இல்லை. இதற்கு தமிழ் மத்தியதரவர்க்கத்தின் வாழ்க்கை முறையும் ஒரு காரணம். அதே வேளை ஒரு பலமான மத்தியதரவர்க்கம் ஏற்கனவே நாட்டைவிட்டு வெளியேறிவிட்டது. தற்போதிருக்கின்ற தமிழ் மத்தியதர வர்க்கத்தின் பிரதான தொழில் – அரச உத்தியோகம். இவ்வாறானதொரு மத்தியதரவர்க்கத்திலிருந்து வலுவான அரச எதிர்ப்பு அரசியலை எதிர்பார்க்கவே முடியாது. ஏனெனில் ஒரு கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை இடம்பெறுவதான கோசமொன்றுடன் அரச உத்தியோக மத்தியதரவர்க்கம் தன்னை இணைத்துக்கொள்ளாது. வடக்கு கிழக்கில் நடைபெறும் அரச எதிர்ப்பு நடவடிக்கைகளில் இந்தப் பலவீனத்தை தெளிவாகவே காணமுடியும். அடித்தள மக்களை பொறுத்தவரையில் அவர்களின் அன்றாட வாழ்க்கையே கேள்விக்குள்ளாகியிருக்கின்ற நிலையில், அரச எதிர்ப்பு நடவடிக்கைகளை நோக்கி அவர்களை அணிதிரட்ட முடியாது. இவ்வாறான பின்புலத்தில்தான் சில எதிர்ப்பு நடவடிக்கைகள் திட்டமிடப்படுகின்றன. அரசியல் கட்சிகளோடு ஏதோவொரு வகையில் தங்களை இணைத்திருப்பவர்களும் காணமாலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போன்றோரே இவ்வாறான பேரணிகளில் அதிகளவில் பங்குகொள்கின்றனர். இவ்வாறான நிகழ்வுகளில் தன்னியல்பாக சில இளைஞர்கள் தங்களை இணைத்துக்கொள்வதுமுண்டு.

இவ்வாறான பலவீனங்களை ஒரு புறமாக வைத்துவிட்டு இவ்வாறான எதிர்ப்பு நடவடிக்கைகளின் விளைவுகள் என்ன – என்று பார்ப்போம். பொத்துவில் தொடங்கி பொலிகண்டிவரையில் என்னும் சுலோகத்தின் கீழ், எதிர்ப்பு பேரணியொன்று இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போதுதான், இலங்கையின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் சுதந்திரதின அறிவிப்பும் வெளியாகியிருக்கின்றது. அதாவது, நான் ஒரு சிங்கள பௌத்த தலைவன். நான் ஒருபோதும் அதற்குமாறாக இயங்க மாட்டேன். நான் இந்த நாட்டை பௌத்த மத போதனைகளின் அடிப்படையில்தான் நிர்வகிப்பேன். இது மிகவும் தெளிவான செய்தி. அதாவது எந்தவொரு அழுத்தங்களுக்கும் எனது தலைமையிலிருக்கும் இந்த அரசாங்கம் இசைந்துகொடுக்காது. என்னை எவராலும் இறங்கிவர வைக்கவும் முடியாது என்பதையே கோட்டபாய அழுத்தம்திருத்தமாக தெரிவித்திருக்கின்றார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரின் காட்டமான அறிக்கை வெளிவந்திருக்கின்ற சூழலில்தான், நந்தசேன கோட்டபாய ராஜபக்ச இவ்வாறு சூழுரைத்திருக்கின்றார்.

எனவே இதிலிருந்து வடக்கு கிழக்கில் இடம்பெறும் எந்தவொரு எதிர்ப்பையும் அரசாங்கம் கண்டுகொள்ளப் போவதில்லை என்பது தெளிவு. அவ்வாறாயின் போராட்டங்கள் எதனை இலக்கு வைத்து இடம்பெறுகின்றன? இவ்வாறான போராட்டங்களை திட்டமிடுபவர்கள் இது தொடர்பில் சிந்திக்க வேண்டும். ஏனெனில் இவ்வாறான எதிர்ப்பு நடவடிக்கைகள் தென்பகுதியில் சிதறிக்கிடக்கும் சிங்கள கடும்போக்கு தரப்பினரை மேலும் அரசாங்கத்தின் ஆதரவாளர்களாக்குவதற்கு பயன்படுகின்றதா என்பதையும் ஆராய வேண்டும். ஏனெனில் ஆழமான பரீசீலனையின்றி வெறும் உற்சாக மனோநிலையில் இவ்வாறான செயற்பாடுளை திட்டமிடும் போது, அது எதிர்மறையான விளைவுகளையே தோற்றுவிக்கும். அதே வேளை இவ்வாறான விடயங்களை திட்டமிடுபவர்கள் வெறுமனே சிவில் சமூகமென்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் போது, இதன் வெளிப்படைத்தன்மை தொடர்பிலும் கேள்விகள் உண்டு.

இப்போது மட்டுமல்ல வடக்கு கிழக்கில் இடம்பெறும் எந்தவொரு எதிர்ப்பு நடவடிக்கைகளாலும் தென்னிலங்கையை இறங்கிவரச் செய்ய முடியாது. ஏனெனில், வடக்கு கிழக்கில் இடம்பெறும் புறக்கணிப்பு நடவடிக்கைகள், எதிர்ப்பு பேரணிகள் எவையுமே கொழும்மை நெருக்கடிக்குள்ளாக்காது. கொழும்மை நெருக்கடிக்குள் தள்ளாத எந்தவொரு போராட்டங்களையும் அரசாங்கம் கண்டுகொள்ளப் போவதில்லை. இதற்கு என்ன காரணம்? விடை சுலபமானது. வடக்கு கிழக்கு பகுதியென்பது ஒரு தொழில்துறைப்பகுதியல்ல (ஐனெரளவசயைட ணுழநெ). எனவே தொழில்துறைப் பகுதியல்லாத பகுதிகளில் புறக்கணிப்புக்களை மேற்கொள்வதால் மற்றும் வியாபார நடவடிக்கைகளை முடக்குவதால், நாட்டின் பிரதான வர்த்தக மையம் பாதிக்காது. உதாரணமாக, வடக்கு கிழக்கில் வர்த்தக நிலையங்களை மூடினால் வடக்கு கிழக்கிலுள்ள வியாபாரிகள்தான் பாதிக்கப்படுவர். கொழும்பின் பிரதான வர்த்தக மையத்திற்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது. இதன் காரணமாகத்தான் வடக்கு கிழக்கில் இடம்பெறும் எந்தவொரு புறக்கணிப்புகளையும் சிங்கள ஆளும்வர்க்கம் பெரிதாக எடுப்பதில்லை. சிங்கள ஆளும் வர்க்கத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த முடியாத புறக்கணிப்புக்களால் எவ்வித பயனுமில்லை. இதுதான் கடந்தகாலத்தில் நடந்திருக்கின்றது. இனியும் நடக்கும்.

ஒரு காலத்தில் மிதவாத அரசியலுக்கு தலைமைதாங்கிய தமிழ் தலைவர்கள் கொழும்பில் முகாமிட்டு, தங்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட வரலாறிருக்கின்றது. அதனை அவர்கள் உச்சளவில் மேற்கொள்ளாதுவிட்டாலும் கூட, அவ்வாறான செயற்பாடுகள் அன்றைய சூழலில் இடம்பெற்றிருக்கின்றது. இன்று புதுடில்லியில் இடம்பெறும் சீக்கியர்களின் போராடத்தால் ஏன் அரசாங்கம் திணருகின்றது? ஏனென்றால், அது இந்தியாவின் தலைநகரத்தில் இடம்பெறுகின்றது. அவர்களும் ஏதோவொரு மூலையில் தங்களை முடக்கிக்கொண்டிருந்தால், அந்தப் போராட்டம் இந்தளவு கவனத்தை பெற்றிருக்காது. அவர்களை தற்போது முழு உலகமும் நோக்கிக் கொண்டிருக்கின்றது. தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் அவர்களுடன் அணிசேர்ந்திருக்கும் சிவில் சமூகத்தரப்புக்களும் கொழும்பு நோக்கி நகர்வது தொடர்பில் சிந்திக்க வேண்டும். எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது, அதன் உடனடி மற்றும் நீண்டகால விளைவுகளை துல்லியமாக திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் தமிழ் மக்களின் பெயரால் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு நடவடிக்கைளின் விளைவுகளையும் கொழும்பே அறுவடை செய்யும். மேலும் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட இது போன்ற செயற்பாடுகளால் சிங்கள ஆளும் வர்க்கமானது, வடக்கு கிழக்கு நோக்கிய தனது நிகழ்ச்சிநிரலை இடைநிறுத்திக்கொள்ளவில்லை. முன்னர் எவை நடந்ததோ அதுவே தற்போதும் நடைபெறுகின்றது.