செய்திகள்

தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டமைக்காக தாக்குதல் நடத்தப்பட்டமையை மட்டு தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி கண்டனம்

தேசிய நல்லிணக்கம் என்று கூறும் வேளையில், கிழக்குப் பல்கலைக் கழகத்தில் தேசிய கீதம் தமிழில் இசைக்கப்பட்டமைக்கு எதிராக அரச உத்தியோகத்தரை, சிங்கள மாணவர்கள் தாக்கியமை வேதனைக்குரியது என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணி விடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக் கழகத்தில் விதாதாவள நிலையமும் செங்கலடிப் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய கண்காட்சியின் இறுதி நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டதற்காக பிரதேச செயலக உத்தியோகத்தர் தாக்கப்பட்டமை தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக இளைஞர் அணியினர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தில் ஓரளவுக்கேனும் ஜனநாயகம் துளிர்விடுகின்ற சந்தர்ப்பத்தில் அதன் ஒரு அம்சமாக இலங்கையின் தேசிய கீதம் நாட்டினுடைய அரச கரும மொழிகளில் ஒன்றாகிய தமிழிலும் இசைக்கப்படுவது பொருத்தமானது எனவும், அது தமிழ் பகுதிகளில் தமிழில் இசைக்கப்படுவதை அரசும், அமைச்சர்களும் அனுமதித்தனர்.

இவ்வேளையில், இளைய பெரும்பான்மை கல்விச் சமுதாயம் அதுவும் பட்டப்படிப்புக்களை மேற்கொள்ளும் கல்வி சமுதாயம் இவ்வாறு காட்டுமிராண்டித் தனமாக செயற்படுவதன் மூலம் மீண்டும் ஒரு இன வன்முறைக்கு இட்டுச் செல்லக் கூடிய சந்தர்ப்பத்தை வேண்டும் என்றே உருவாக்குகின்றார்களா என மனதில் சந்தேகம் எண்ணத் தோன்றுகின்றது.

ஏனெனில், மாணவர்கள் விரைவாக உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள். இதன் காரணமாக மோதல் அதிகரிக்கக் கூடிய சந்தர்ப்பம் உண்டு. இருந்தும் அங்கு சம்பந்தப்பட்ட நேரத்தில் அமைதி ஏற்பட்டமை வரவேற்கத்தக்கது. கிழக்குப் பல்கலைக் கழகத்தில் விதாதாவள நிலையமும் செங்கலடிப் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய கண்காட்சி நிகழ்விலே நாட்டினுடைய தேசிய கீதம் தமிழிலிலே இசைக்கப்பட்டிருந்தது.

அதேவேளை, பிற்பகல் வேளையில் சிங்கள மொழியிலும் இசைக்கப்பட்டதாக நாம் அறிந்தோம். இது இவ்வாறு இருக்க அருவருக்கத் தக்க முறையில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த நூறு மாணவர்கள் அங்கு பணியை முடித்து திரும்பிக் கொண்டிருந்த செங்கலடி பிரதேச செயலக உத்தியோகத்தர் பத்தக்குட்டி சுமன் என்பவரை தாக்கி இருப்பது இனநல்லிணத்துக்கு ஒரு சவாலாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை.

இது பல்கலைக் கழக சூழலிலும் ஒரு பீதி நிலையை உருவாக்கும். கல்வி பயிலுகின்ற சமுதாயத்தினர் கல்வியோடு சேர்த்து ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்க வேண்டியது மீண்டும் ஒரு முறை இச்செயற்பாட்டின் மூலம் உறுதிப்படுத்தப்படுகின்றது. எனவே ஒரு நாட்டிலே நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக வாழவேண்டுமென்றால் விட்டுக் கொடுப்புக்களும் புரிந்துணர்தலும் இதுபோன்ற கசப்புக்கள் களையப்பட வேண்டும். அதுவும் கல்விக் கூடங்களில் இவ்வாறான செயற்பாடுகள் முற்றாக அகற்றப்பட வேண்டும்.

இந்த நடவடிக்கைக்கு உரிய விசாரணை மேற்கொண்டு நீதியை நிலைநாட்டும் படி சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் வேண்டுகின்றோம் என தமது கண்டன அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.