செய்திகள்

தமிழ்க் கூட்டமைப்பு பலமாக இல்லாதிருந்தால் எமது நிலங்கள் சிங்களவரிடம் இருந்திருக்கும்: அரியநேத்திரன் தெரிவிப்பு

ஒரு தாயகத்தில் வாழக்கூடிய மக்கள் தன்னாட்சி அதிகாரம் அற்று சுதந்திரம் அற்று அங்குள்ள பெரும்பான்மை இனத்தவரின் கீழ் அடிமைகளாக இருக்காமல் அதனை அறுத்தெறிந்து ஒரு இனத்திற்குத் தேவையான உரிமையைப் பெறும் அரசியலே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அரசியல் பயணமாகுமென பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கூறினார்.

மட்டக்களப்பு எருவில், கண்ணகி மகாவித்தியாலயத்தின் வருடாந்த மெய்வல்லுனர் இல்ல விளையாட்டுப் போட்டியின் போது அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் –

இன்று புதிய அசராங்கம் இந்த நாட்டை பொறுப்பெடுத்து ஆட்சி செய்து வருகின்றதே தவிர, தமிழ் மக்களுக்கான எந்த மாற்றமும் இதுவரை நிகழவில்லை. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் ஆட்சியை மாற்றுவது மாத்திரம் நமது கடமையல்ல. 65 வருடகாலமாக தமிழர்கள் பட்ட துன்ப துயரங்களுக்கு இறுதித் தீர்வு காண்பதே எமது நீண்டநாள் இலக்கு என்பதனை யாரும் மறந்துவிடக் கூடாது.

வெறுமனே அரசாங்கத்தில் போய் சேர்ந்து கொண்டு அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்டு வாய்மூடி மௌனிகளாக இருப்பதற்கு நாங்கள் தயாரில்லை. எமது மக்கள் கூட்டமைப்பு இன்று நேற்றல்ல பல வருடகாலங்களாக ஒருமித்து பலப்படுத்தி வருகின்றார்கள்.

தமிழ்மக்கள் கூட்டமைப்பிற்கு வாக்களிக்காமல் இருந்திருந்தால் எமது எல்லைக் கிராமங்கள் எங்களிடமிருந்து பெரும்பான்மை இனத்தவர்களினால் மிக இலகுவாக பறிக்கப்படடிருக்கும்.

இன்று நாங்கள் சகவலற்றையும் இழந்து நிலமற்றவர்களாகப் போயிருப்போம். ஒரு துர்ப்பாக்கிய நிலை உருவாகியிருக்கும். கூட்டமைப்பானது இணைந்த வட கிழக்கில் எங்களுக்குரிய உரிமையைத் தான் கேட்டு நிற்கின்றோம். அந்த உரிமையை தரும் வரை எமது போராட்டம் தொடர்ந்து கொண்டு தான் இருக்ணும்.

நாட்டிலே புதிய ஆட்சி வந்துவிட்டது. தற்போது புலனாய்வாளர்கள் புதிய செயற்பாட்டில் மீண்டும் இறங்கியிருக்கின்றார்கள். ஒரு பாடசாலைக்குச் சென்று அங்குள்ள ஆசிரியரை அழைத்து உமது உறவுகள் எந்த நாட்டில் வசித்து வருகின்றார்கள் என்ற விளக்கத்தினை கேட்டிருக்கிறார்கள். இப்படியான பல வேலைத்திட்டங்களில் இலங்கை புலனாய்வாளர்கள் இன்றும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறு இவர்களது கெடுபிடி தொடர்ந்து கொண்டுதான் செல்கின்றது. இது தான் புதிய ஆட்சியின் பலன் என்று தெரிவித்தார்.