செய்திகள்

தமிழ்த்தேசிய இனத்தின் இருப்பும், ஒன்றிணைந்த தமிழர் அரசியல் செயற்பாட்டின் தேவையும்

ஒரு இனக்குழுமம் தனது தொடர்ச்சியான நிலைத்திருத்தலினை உறுதிப்படுத்தக்கொள்ள வேண்டுமாயின் தூர சிந்தனையுடன் கூடிய குறுங்கால மற்றும் நீண்டகாலத் தந்திரோபாயங்களை வகுத்து செயற்படுத்தல் அவசியம். அது அரசியல் செயற்பாடாக இருக்கலாம், சமூகம் சார்ந்த செயற்பாடாக இருக்கலாம், கலை கலாச்சாரம் சார்ந்த முன்னெடுப்பதற்காக இருக்கலாம். அல்லது பொருளாதாரம் சார்ந்த செயற்பாடுகளாக இருக்கலாம். இவற்றில் எந்த விடயமாக இருப்பினும் அவ் இனக்குழுமம் சார்ந்த தலைமைகள் பொருத்தமான குறுங்கால மற்றும் நீண்டகால தந்திரோபாயங்களை வகுத்து திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்டு வருதல் அவசியம். எந்தவொரு இனக் குழுமம் இந்த விடயத்தை செய்யத் தவறுகின்றதோ அந்த இனக்குழுமத்தின் தொடர்ச்சியான நிலைத்திருத்தல் என்பது கேள்விக்குள்ளாக்கப்பட்டு அழிவடையும் அல்லது பின்தள்ளப்படும் நிலைமைக்கு இட்டுச் செல்லலாம்.

இலங்கையின் தமிழ்த்தேசிய இனம் மேற்சொன்ன கோட்பாட்டிற்கு அதி முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியத்திற்குள் தள்ளப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள தமிழ் சமுகத்தைப் பொறுத்தவரையில் தூர சிந்தனையுடன் கூடிய அரசியல் செயற்பாட்டினது தேவை மிக உயர்ந்தளவில் காணப்படுகிறது எனலாம். ஏனெனில் நாட்டின் முழு அதிகாரங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள பெரும்பான்மை சிங்கள மக்களிடமிருந்தும் சிங்கள ஆட்சியாளர்களுடன் கைகோர்த்து மிக வேகமாக பெருகிவருகின்ற சிறுபான்மை முஸ்லீம் மக்களிடமிருந்தும் தமது இருப்பை பாதுகாத்துக்கொள்ள வேண்டிய மிகவும் இக்கட்டான ஓர் நிலையில் தமிழ்த்தேசிய இனம் காணப்படுகின்றது. உதாரணமாக கிழக்கு மாகாணத்தை எடுத்துக் கொண்டால் பெரும்பான்மை இனக் குழுமமாக விளங்கிய தமிழ்த்தேசிய இனம் இரண்டாவது இனக்குழுமமாக பின்தள்ளப்படுகின்ற ஓர் நிலமை உருவாகியுள்ளது.

இதற்குப் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் காலத்துக்குக் காலம் தமிழ்த்தேசிய இனத்துக்கு தலைமைதாங்கிய அரசியல் தலைவர்களது தூரநோக்கற்ற சிந்தனைகளையும் செயற்பாடுகளுமே மிக முக்கிய காரணம் எனலாம். கிழக்கு மாகாணத்தைப் போன்று ஒட்டுமொத்த இலங்கையிலும் தமிழ்த்தேசிய இனத்தினது இருப்பும் அதன் நிலையும் கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகின்றது என்பதே முகத்தில் அறைந்து கொள்ளும் யதார்த்த நிலையாகும். சுதந்திரத்துக்குப் பின்னரான காலப்பகுதியில் தமிழ்த்தேசிய இனம் சமூக பொருளாதார அரசியல் ரீதியாக பின்தள்ளப்பட்டு வந்துள்ளது என்பதை புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. தற்போது எழுந்துள்ள கேள்வி என்னவென்றால் இத்தகைய பின்னோக்கித் தள்ளப்படும் நிலமையை தடுத்து நிறுத்தி தமிழ்த்தேசிய இனத்தை முன்னகர்த்தக் கூடிய தூரசிந்தனையையும் நீண்டகால தந்திரோபாயங்களையும் தமிழ்த்தேசிய தலமைகள் கொண்டுள்ளனவா என்பதே ஆகும்.

இலங்கையைப் பொருத்தவரையில் தமிழ்த்தேசிய இனம் மூன்று பிராந்தியங்களில் பிரிந்தும் செறிந்தும் வாழ்கின்றது. நாட்டின் வடக்குக் கிழக்குப் பிராந்தியம், மலையகம் மற்றும் தலைநகர் கொழும்பு அதனை அண்டிய பிறநகர்பகுதிகளுமே அந்த மூன்று பிராந்தியம் ஆகும். ஆனால் இங்குள்ள சிக்கல் நிலமை என்னவென்றால் இம்மூன்று பிராந்தியங்களில் வாழும் தமிழ் சமூகத்திற்கு வௌ;வேறு அரசியல் தலமைத்துவங்கள் காணப்படுவதுடன் அம் மூன்று அரசியல் தலமைத்துவங்களுக்கும் இடையில் பெரிய அளவிலான ஒருங்கிணைப்புக்கள் காணப்படவில்லை என்பதே ஆகும். இதன் காரணமாக இலங்கையின் தமிழ்த்தேசிய இனம் ஒரு மைய அரசியல் புள்ளியால் ஒருங்கிணைக்கப்படவில்லை என்பதுடன் தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் பலம் சிதறுண்டும் காணப்படுகின்றது. இந்நிலமை தமிழ்த்தேசிய இனத்திற்கும் அதன் இருப்பிற்கும் பல்வேறு பாதக நிலமையைத் தோற்றுவித்துள்ளது.

குறிப்பாக வடக்குக் கிழக்குப் பிராந்தியத்தில் வாழ்கின்ற தமிழ் மக்களுடைய நலன்சார்ந்த விடயங்களை கவனிப்பவர்களாகவும் அரசியல் தலமைகளாகவும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் செயற்பட்டு வருகின்றனர். இவர்கள் வடக்குக் கிழக்கு வாழ் தமிழ் மக்களுடைய உரிமைகள் மற்றும் அரசியல் அபிலாஷைகள் தொடர்பில் அதிகம் அக்கறை செலுத்தி வருகின்ற அதேவேளை வடக்குக் கிழக்கிற்கு வெளியே மலையகம் மற்றும் மேல்மாகாணத்தில் உள்ள தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளைப் பற்றி அதிக அக்கறை காட்டாதவர்களாக அல்லது மௌனப்போக்கினைக் கடைப்பிடிப்பவர்களாக காணப்படுகின்றனர். இதேபோல மலையகத்தில் வாழ்கின்ற தமிழ் மக்களின் நலன்சார்ந்த விடயங்களைக் கவனிப்பவர்களாகவும் மலையக மக்களின் அரசியல் தலைமைகளாகவும் செயற்பட்டு வருகின்ற இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மலையக மக்கள் முன்னணி மற்றும் ஏனைய கட்சிகள் மலையகத்தில் வாழ்கின்ற தமிழர்களுடைய பிரச்சினைகளில் மட்டுமே அக்கறை கொண்டவர்களாக காட்டிக்கொள்கின்ற அதேநேரம் நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழ்கின்ற தமிழ்மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அதிகம் அலட்டிக்கொள்ளாதவர்களாக அல்லது மௌனப்போக்கினைக் கடைப்பிடிப்பவர்களாக காணப்படுகின்றனர்.

மேல்மாகாண தமிழ் அரசியல் செயற்பாட்டைப் பொறுத்தவரையில் மனோகணேசன் தலைமையிலான மேல்மாகண மக்கள் முன்னணி தலைநகர் கொழும்பு வாழ் தமிழ் மக்களுக்கான அரசியல் தலைமைத்துவத்தை வழங்கி வருகின்றனர். மேற்சொன்ன இரண்டு பிராந்தியங்களின் அரசியல் தலைமைத்துவத்தைப் போல் அல்லாது மேல்மாகாண அரசியல் தலைமைத்துவம் ஏனைய இரண்டு பகுதிகளுடனும் ஓர் ஒருங்கிணைவுடன் செயற்பட்டு வருவதைக் காணக்கூடியதாக இருப்பினும் அவ் ஒருங்கிணைவின் தன்மை என்பது மிகவும் மேலெழுந்தவாரியான ஒன்றாகவே காணப்படுகின்றது. அதுமட்டுமல்லாமல் இது மனோகணேசன் என்கின்ற ஓர் அரசியல்வாதியின் தனிமனித ஆளுமைத்தன்மை என்பதுடன் அவ் ஒருங்கிணைந்த செயற்பாடு நிறுவனமயம்படுத்தப்படவில்லை என்பதே யதார்த்தமாகும்.

இவ்வாறு தமிழ் அரசியல் தலைமைகள் பிராந்திய அடிப்படையில் வௌ;வேறாக பிரிந்து காணப்படுவதால் தமிழ்த்தேசிய இனக்குழுமம் தொடர்பாக ஓர் ஒருங்கிணைந்த அரசியல் செயற்பாட்டு களம் தோற்றம் பெற்றிருக்கவில்லை. இதனால் தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாஷைகள் மற்றும் ஏனைய விடயங்கள் ஓர் ஒருங்கிணைந்த அடிப்படையில் வலுவாக முன்னெடுத்துச் செல்லப்படாத ஒர் போக்குக் காணப்படுவதுடன் இலங்கையின் ஏனைய இனக்குழுமத்துடன் ஒப்பிடுகையில் தமிழ்த்தேசிய இனத்தினை சமூகப்பொருளாதார அரசியல் அடிப்படையில் பின்நோக்கித் தள்ளுவதற்கும் இது ஓர் வலுவான காரணமாக அமைந்துள்ளது எனலாம்.

மாறிவரும் இலங்கை மற்றும் சர்வதேச சூழல்களுக்கு ஏற்ப தமிழர்கள் தமது அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கு நீண்டதொரு அரசியல் பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கின்ற நிலமையின் கீழ் தான் தமிழ்த்தேசிய இனத்திற்கான தூரசிந்தனையுடன் கூடிய நீண்டகால தந்திரோபாய அரசியல் முன்னகர்வுகளில் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதாவது பிராந்தியங்களின் அடிப்படையில் சிதறுண்டு கிடக்கின்ற தமிழ் அரசியல் தலமைகள் மற்றும் அதன் செயற்பாடுகள் ஒருங்கிணைக்கப்பட்டு ஓர் ஒருங்கிணைந்த தமிழர் அரசியல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவேண்டியுள்ளது. இத்தகைய செயற்பாடுகள் தமிழர்களது அரசியல் பலத்தை அதிகரிப்பதுடன் நீண்டகால அடிப்படையில் தமிழர் தேசிய இனக்குழுமத்தை தற்போதைய பின்னடைவு நிலையிலிருந்து மீண்டுச்செல்வதற்கும் உதவுவதாக அமையும். ஆனால் இங்கு கூட்டிக்காட்டப்படவேண்டிய விடயம் யாதெனில் இதற்கான எந்தவொரு முன்னெடுப்புக்களும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்பதுடன் அண்மைய எதிர்காலத்தில் இப்படியான ஒரு முன்னெடுப்பு மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் எவையும் தென்படவில்லை என்பதுவுமாகும்.

வடக்குக் கிழக்கு தமிழ் அரசியல் பிரதிநிதித்துவத்தை வழங்கி வருகின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அங்குள்ள முஸ்லிம் அரசியல் கட்சிகளை அரவணைத்து செல்வதற்குக் காட்டுகின்ற அக்கறையில் பத்தில் ஒரு பங்கிற்குக் கூட ஏனைய பிரதேசங்களிலுள்ள தமிழ் அரசியல் கட்சிகளை அரவணைத்து அவர்களுடன் ஒரு இணக்கப்பாட்டு அல்லது ஒருங்கிணைந்த அரசியலை மேற்கொள்வதற்கு அக்கறைகாட்டுவதில்லை. அதேபோல ஏனைய பிரதேச அரசியல் தலைவர்களும் இவ்விடயத்தில் அதிக அக்கறையுடையவர்களாக தெரியவில்லை என்பதுவும் உண்மையே. ஆயினும் மேல்மாகாண மக்கள் முன்னணி தலைவர் மனோகணேசன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் போன்ற தலைவர்கள் இவற்றிலிருந்து விதிவிலக்காக பரந்த அளவில் தமிழ்த்தேசிய இனம் என்ற அடிப்படையில் தமது கருத்துக்களை முன்வைத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்க விடயம். ஆனால் இவ்வாறான சிந்தனை கொண்ட தலைவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என்பதுடன் இவர்களது செயற்பாடுகளும் பெரிய அளவில் காத்திரம் வாய்ந்ததாக அமைந்திருக்கவில்லை என்பதுவுமே யதார்த்தமாகும்.

ஆக தமிழ்த்தேசிய இனத்தை நிலைநிறுத்திக்கொள்வதற்கும் அவர்களது அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்குமான நீண்டதொரு பயணத்தை மேற்கொள்வதற்கும் பல்வேறு பிராந்தியங்களின் பிரிந்துள்ள தமிழ்த்தேசிய அரசியல் தலைமைகளை ஒன்றிணைக்க வேண்டிய தேவை எம்முன்னே உள்ளது. ஆனால் அதற்கான சிந்தனை மாற்றமும் காத்திரமாக நடவடிக்கையும் இன்னமும் ஏற்கடவில்லை என்பது புலனாகின்றது. இந்நிலையில் தமிழ்த்தேசிய நலனில் அக்கறைகொண்டவர்கள் மற்றும் தமிழ்த் தலைமைகள் இவ்வாறாக பிராந்திய அளவில் பிரிந்துள்ள தமிழ் அரசியல் தலைமைகளை ஒன்றிணைக்க முன்வருவார்களா? அதற்கான தூரசிந்தனையும் செயற்திறனுமுள்ள சமூகத் தலைவர்கள் எம்மிடையே உள்ளார்களா? என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாததாகின்றது.

– சதுர்வேதி