செய்திகள்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அதிகாரங்களை பகிர்ந்து கொள்ள முன்வர வேண்டும்: அரசியலில் இருந்து ஒதுங்கிய ஆனந்தசங்கரி ஆவேசம்

அதிகாரங்களை பகிர்ந்து கொள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முன்வர வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,

அதிகார பரவலாக்கலையும், ஜனநாயகத்தையும் இலங்கை அரசிடம் கோரி நிற்கும் நாம் நமக்கு கிடைக்கும் அதிகாரங்களை பகிர்ந்து கொள்ளவும், ஜனநாயக வழிமுறைகளை மேற்கோள்ளவும் பழகிக் கொள்ள வேண்டும்.

கிழக்கு மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளின் உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். அக்கட்சிகளின் தலைவர்களையோ, உறுப்பினர்களையோ கலந்து ஆலோசிக்காமல் தமிழரசுக் கட்சி மட்டும் தனது உறுப்பினர்களை அமைச்சர்களாக தெரிவு செய்வதென்பது மீண்டும் மீண்டும் தமிழ் மக்களை படுகுழிக்குள் தள்ளுவது போன்றதொன்றாகும்.

இதே போன்று தான் பல விடுதலை அமைப்புக்களால் முன்னெடுக்கப்பட்ட விடுதலைப்போராட்டம், பின்னர் தமிழரசுக் கட்சி இப்போது நடக்கின்ற ஆணவப் போக்கைப் போன்று, விடுதலைப் புலிகளாலும் மேற்கோள்ளப்பட்டு தாங்கள் தான் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்று கூறி, ஏனைய அமைப்புகளின் தலைவர்களை அழித்து விட்டு கடைசியில் தமிழ் மக்களை முள்ளிவாய்க்;காலில் பலிகொடுத்ததுதான் அதன் விளைவாக அமைந்தது.

இது அவர்களின் ஆணவப்போக்கு. ஆணவம் அழிவிற்கு வழிவகுக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். அதே போன்று தமிழரசுக் கட்சியும், அதன் தலைவர்களும் இவ்வளவு அனர்த்தங்களையும், உயிர் இழப்புகளையும் தமிழ் மக்கள் அனுபவித்து, வேதனையின் விளிம்பில் துவண்டு கொண்டிருக்கின்ற நேரத்திலும் இவ்வாறான போக்கையே தொடர்ந்தும் கடைப்பிடிக்கின்றார்கள்.

ஏனைய கட்சிகளின் உறுப்பினர்ளை தங்கள் பக்கம் சேர்த்துக் கொண்டு தாங்கள்தான் பலமான கட்சி என்று ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி உலகிற்கு ஜனநாயகம் என்ற போலி வேடத்தை காட்டிக் கொண்டிருக்கின்றார்கள். இலங்கை அரசு மீது சர்வதேச விசாரனை வேண்டும் என்று ஒரு சாராரும் வேண்டாம் என்று ஒரு சாரரரும் அறிக்கை விட்டுக் கொண்டு தமிழ் மக்களை குழப்பத்திற்கு ஆளாக்கி குளிர்காய நினைக்கின்றார்கள்.

கடந்த சில ஆண்டுகளாகவே தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் இதை வழக்கமாகவே கொண்டுள்ளார்கள். தங்களின் பதவி சுகத்திற்காக தமிழ் மக்களை பலிக்கடாய் ஆக்குகின்றார்கள். தொடந்து இந்த நிலை நீடித்தால் தமிழ் மக்களின் எதிர் காலம் கேள்விக்குறியாகிவிடும்.

எனவே தமிழரசுக் கட்சியின் ஆணவப்போக்கையும் அதன் தான் தோன்றித்தனத்தையும் இனிமேலும் பொறுத்துகொள்ளாமல் ஒரு முடிவு எடுக்க வேண்டிய தருணம் இது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து, தமிழ் தலைவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, ஒரு ஜனநாயக அமைப்பை உருவாக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. புத்தி ஜீவிகளும், தமிழ்த் தலைவர்களும், ஜனநாயகத்தை விரும்பும் அனைத்து மக்களும் ஒன்று சேர்வோம் ஒரு புதிய அணியை உருவாக்குவோம். – இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.