செய்திகள்

தமிழ்நாடு காவல்துறை அதிகாரியின் மனித நேயம்

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர் பேட்டை அருகே உள்ள பாலி கிராமத்தை சேர்ந்தவர் ராஜ். இவரது மனைவி மங்கம்மாள். இவர்களது மகன் மணிகண்டன். நான்காம் வகுப்பு வரை படித்த மணிகண்டனை அவரது தந்தை தொழுதூர் கிராமத்தில் ஆடு, மேய்ப்பவர்களிடம் 6 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுள்ளார். படிப்பில் ஆர்வம் கொண்ட மணிகண்டன், அங்கிருந்து தப்பி பெரம்பலூர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தான். மணிகண்டனின் சோக கதையைக் கேட்ட சப்-இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன், அவனை படிக்க வைத்தார்.

பெரம்பலூர் காவல் நிலையத்தில் அவர் பணியாற்றி காலக்கட்டத்தில் அங்கு செல்லப் பிள்ளையாக மணிகண்டன் திகழ்ந்தான். அதோடு படிப்பிலும் படுசுட்டியாகவும் அவர் விளங்கினார். இதனிடையே, சிவசுப்பிரமணியனுக்கு இன்ஸ்பெக்டர் பதவி உயர்வும் கிடைத்தது. பின்னர், பெரம்பலூர் காவல் நிலையத்திலிருந்து மாவட்ட குற்றப்பிரிவுக்கு சிவசுப்பிரமணியன் இடமாற்றம் செய்யப்பட்டார். இதனால், தனியார் பள்ளி விடுதியில் மணிகண்டனை சேர்த்து அதற்குரிய கட்டணத்தையும் தனது சொந்தப் பணத்தில் சிவசுப்பிரமணியன் செலுத்தினார். இப்போது மணிகண்டன், விடுதியில் தங்கியிருந்து படித்து வருகிறான்.

காவல்துறையில் நல்லவர்களை அரிதாகவே பார்க்க முடியும். பொதுவாக நல்லவர்களுக்கு சோதனை அதிகம் வரும். அதைப் போல தான் சிவசுப்பிரமணியனுக்கும் சோதனை வந்ததாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

சிவசுப்பிரமணியன் சிறைக்கு சென்றுள்ள நிலையில் மணிகண்டனுக்குடன் போலீஸ் சீருடையிலிருக்கும் சிவசுப்பிரமணியனின் புகைப்படம் வாட்ஸ் அப்பில் வேகமாக பரவி வருகிறது.

இதுகுறித்து பெரம்பலூர் காவல் நிலைய வட்டாரங்கள் கூறுகையில், ”இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் நல்ல மனிதர். அவர் மாவட்ட குற்றப்பிரிவில் பணியாற்றினார். கடந்த 2006 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த ராமசந்திரனை திருட்டு வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தார் சிவசுப்பிரமணியன். சிறையில் அடைக்கப்பட்ட ராமசந்திரன் அக்டோபர் 20 ஆம் தேதி இறந்து விட்டார். காவல் நிலைய லாக் அப்பில் இருந்தபோது சிவசுப்பிரமணியன் உள்பட 3 பேர் ராமசந்திரனை தாக்கியதில் இறந்தாக புகார் கூறப்பட்டது.

இது தொடர்பான வழக்கு திருச்சி கே.கே.நகர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி உமாமகேஸ்வரி, இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் உள்பட மூன்று பேருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டணையும், 5 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இப்போது, சிவசுப்பிரமணியன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மணிகண்டனைப் போல ஏராளமானவர்களுக்கு சிவசுப்பிரமணியன் பல்வேறு வகையில் உதவிகளை செய்துள்ளார். ஒரு பெண்ணையும் தத்து எடுத்தும் வளர்த்து வந்தார். அவரால் பயன் அடைந்தவர்கள் இப்போது சோகத்திலிருக்கிறார்கள்” என்றனர்.

சிவசுப்பிரமணியனின் செல்போனுக்கு தொடர்பு கொண்டோம். அதில் பேசிய ஒரு பெண், ”எல்லாவற்றையும் ஆண்டவன் பார்த்துக் கொண்டு இருக்கிறான். தர்மம் வெல்லும்” என்று கூறிய அவரால் தொடர்ந்து பேச முடியவில்லை.