செய்திகள்

தமிழ்நாட்டில் திரிபீடக எழுச்சியும் வீழ்ச்சியும்

மருத்துவர் சி. யமுனாநந்தா

பௌத்த வேதத்திற்குத் தமிழில் திரிபீடகம் என்ற பதம் உள்ளது. இதன் பொருள் மூன்று வகுப்புக்கள் என்பதாகும். வட இந்தியாவிலே புத்தபெருமான் அருளிய கருத்துக்கள் பாலிமொழியில் இருந்தன. இதனை புத்தபெருமான் நாற்பத்தைந்து வருடங்கள் போதித்தார். புத்தபெருமானுக்குப் பின்னரே அவருடைய போதனைகள் நூலுருவாகின. புத்தபெருமானுக்குப் பின் அவர்களது சீடர்கள் அதனை இரண்டு பகுதிகளாகத் தொகுத்தனர். பின்னர் மூன்று பகுதிகளாகத் தொகுக்கப்பட்டது. இவ்வாறே புத்தபெருமானின் போதனைகள் திரிபீடகம் எனலாயிற்று. புத்தபெருமான் தமது கருத்துக்களைச் சீடர்கள் மூலம் சங்கங்கள் அமைத்து உலகெங்கும் பரவுமாறு செய்தார். அந்தந்த நாடுகளில் அந்நாட்டு மொழிகளில் போதிக்குமாறு கூறியிருந்தார். தனியே பாலிமொழியில் இருந்தால் ஏனையவர்களிற்குத் தெரியாது அழிந்துவிடும் என்பதனால் பௌத்த சங்கத்தைச் சேர்ந்தவர்களால் வட இந்தியாவில் இருந்து தென்இந்தியா, இலங்கை, சுமாத்திரா, தாய்லாந்து, பர்மா, சீனா போன்ற நாடுகளிற்கு பௌத்தமதம் பரவியது. பௌத்தநெறி பரவுவதற்கு அரசர்களும் துணைநின்றனர். அவர்களின் முதன்மையானவன் அசோக மன்னன். இலங்கையில் கி. மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் தேரவாத பௌத்தம் நிலைபெற்றது. அசோக மன்னனால் பௌத்த கல்வெட்டுக்கள் பிராமி எழுத்தில் இந்தியா முழுவதும் பரவச் செய்யப்பட்டது. இவற்றைத் தமிழநாட்டிலும் இலங்கையிலும் காணலாம்.

தென்னிந்தியாவில் பௌத்தம் மேலோங்கி இருந்தமைக்குச் சான்றாக சங்க இலக்கியங்களும் தமிழ்மொழியில் பாலிமொழிச் சொற்களும் அமைந்து உள்ளன. இவை கி. பி. 2ம் நூற்றாண்டில் தமிழில் திரிபீடக எழுச்சி அமைந்ததைக் காட்டுகிறது. தமிழ் இலக்கியத்தில் பௌத்த தத்துவம் மணிமேகலையில் கூறப்பட்டுள்ளது.

‘பேதைமை செய்கை உணர்வே அருவுரு
வாயில் ஊறே நுகர்வே வேட்கை
பற்றே பவமே தோற்றம் வினைப்பயன்
இற்றென வகுத்த இயல்பீராறும்
பிறந்தோர் அறியில் பெரும்பேறு அறிகுவர்
அறியார் ஆயின் ஆழ் நரகறிகுவர்.’

மணிமேகலை : 24ம் காதை 105 – 110;  30ம் காதை 45 – 50

குண்டலகேச் காப்பியமும் பௌத்தத்தை தமிழில் இலக்கிய-மாக்கியது. வீரசோழிய உரை, நீலகேசி உரை என்பவற்றிலும் புத்தர் தோத்திரங்கள் உள்ளன.

கடைச்சங்கப்புலவர் இளம்போதியர், வீரசோழியம் எழுதிய புத்தமித்திரர், அறவண அடிகள், சீத்தலைச் சாத்தனார், மணிமேகலை, சங்கமித்திரர் எனப்பல தமிழ்பௌத்தர்கள் தமிழ்நாட்டு இலக்கிய ஆதாரங்களில் காணப்படுகின்றனர்.

தமிழ்நாட்டை ஆண்ட பல்லவ மன்னர்கள் பௌத்த தர்மத்தை ஆதரித்தனர். பௌத்தத்துறவிகள் மலைக்குகைகளிலேயே வாழ்ந்து வந்தனர். அவற்றுள் சில கழுகுமலை, திருப்பரங்குன்றம், திருமலை, கொள்ளிமலை, பொதிகைமலை என்பவவாகும். பௌத்தத்துறவிகளின் சங்கங்கள் பள்ளி என அழைக்கப்பட்டது. இதனையே இன்றும் கல்விச்சாலைகளைப் பள்ளி என அழைப்பர். இத்தகைய பள்ளிகள் அமைந்த இடங்களாக காஞ்சிபுரம், காவிரிப்பூம்பட்டணம், மதுரை, தஞ்சை, நாகப்பட்டணம் என்பன அமைந்திருந்தன.

பொதிகை மலையில் அடுத்து மலையநாட்டில் வாழ்ந்த வச்சிரபோதி (கி. பி. 661 – 730) என்ற பௌத்தத்துறவியே சீனத்தேசத்திலும், ஜப்பான் தேசத்திலும் பௌத்த (Zem Buddism) பரப்பினார்.

மதுரையில் அமைந்த பௌத்தப் பள்ளியினை நச்சினார்கினியர் மதுரைக் காஞ்சியில் குறிப்பிடுகின்றார்.

‘பூவினர் கையினர் தொழுவளர் பழிச்சிச்
சிறந்து புறங்காக்குங் கடவுட் பள்ளி.’

இவ்வாறாக தமிழகத்தில் பௌத்தம் சிறப்பாக கி. பி. 2ம் நூற்றாண்டுமுதல் கி. பி. 8ம் நூற்றாண்டுவரை அமைந்து இருந்தது. அதன்பின் பௌத்தம் மங்கி அழிவடைந்தது. தமிழகத்தின் தொடர்ச்சியாக இலங்கையின் வடகிழக்கு மாகாணங்களிலும் தமிழ் பௌத்தம் மங்கி சோழ அரசின் எழுச்சியுடனான சைவம் மேனோங்கி இருந்தது.

தமிழ்நாட்டில் சிறப்பாக இருந்த பௌத்தசமய வாழ்வு முற்றாக வீழ்ச்சியடையப் பல காரணங்கள் ஏதுவாக அமைந்தன. அவற்றில் முதன்மையானது வைதீகசமயத்தவரினதும் சைன சமயத்தவர்களதும் எதிர்ப்பாகும்.

சைவசமயத்தவர்கள் பௌத்தத்துறவிகளை வாதத்தில் வென்று தோற்றவர்களை சைவர்களாகவும் அதில் உடன்படாதவர்களை இலங்கைக்கு நாடு கடத்தியும் பௌத்தத்தை அகற்றினர்.

மாணிக்கவாசகர் பௌத்தர்களைச் சிதம்பரத்தில் வாதத்தில் வென்று அவர்களை இலங்கைக்கு அனுப்பினார். திருஞானசம்பந்தரும் பௌத்தர்களை வாதத்தில் வென்று அவர்களை சைவர்கள் ஆக்கினார். பௌத்த தத்துவத்தை மறுக்கும் சைவசித்தாந்தம், சிவஞானசித்தியாhரில் பரபக்கம் எனும் பகுதியில் அமைந்து உள்ளது. சைவர்களைப் போலவே சைனவசமயத்தவர்களும் பௌத்தத் துறவிகளை வாதத்தில் வென்று அவர்களை மக்களிடையே விலத்தி வைத்தனர். இதனை நீலகேசியில் 2 – 5ம் சருக்கத்தில் அதாவது குண்டலகேசி வாதச்சருக்கம், புத்தவாதச்சருக்கம் என்பவற்றில் காணலாம். பௌத்தத்தை வாதத்தில் வென்றது மட்டுமல்ல தமிழில் உள்ள பௌத்த இலக்கியங்களையும் அழித்து விட்டனர்.

சைவசமயத்தவர்களும் சைனசமயத்தவர்களும் இணைந்து பௌத்தசமயத்தை தமிழ்நாட்டில் வழக்கில் இல்லாது செய்தனர். பின் மூன்று நூற்றாண்டுகளில் சைனசமயமும் வழக்கில் இல்லாது போயினது. தமிழ்நாட்டில் இருந்த பௌத்தத் துறவிகளை கி. பி. 1266ம் ஆண்டில் இலங்கை மன்னன் பராக்கிரமபாகு மன்னன் இலங்கைக்கு வரவழைத்து பௌத்தத்தை அங்கு மேலும் மிளிர வைத்தான்.

தமிழர் தேசமெங்கும் பௌத்தம் வளர்ந்து அழிந்தது. இதனாலேயே இன்றைய வடகிழக்கில் காணப்படும் பௌத்தச் சின்னங்கள் பண்டைத் திரிபீடக எச்சங்களே ஆகும்.

பௌத்தர்கள் வாழும் தேசங்களில் குறிப்பாக இலங்கையில் சிங்களவர்கள் மத்தியிலும், தாய்லாந்து பௌத்தர்கள் மத்தியிலும் தமிழர் மீதான காழ்ப்பு உணர்வு ஏற்பட தமிழ்நாட்டில் பௌத்தம் அழிக்கப்பட்ட வரலாற்றுத் தன்மையுடனான கலாச்சாரமே காரணம். அதனாலேயே சிங்கள பௌத்த மக்கள் தமது பௌத்த மதத்திற்கு அரசின் பூரண அனுசரணையை பேணி வருகின்றனர். பண்டைய காலத்தில் இலங்கையில் பேசப்பட்ட ஆதித்திராவிட மொழியுடன் பாலிமொழியின் சேர்க்கையினாலேயே சிங்களமொழி உருவாகியது. ஆதித்திராவிடம் தமிழர்களுடன் ஒன்றியதாகவே அமைந்தது. கடந்த நூற்றாண்டுகால இலங்கையின் இனமத முரண்பாடுகளுக்கு வரலாறு, கலாச்சாரம், மொழியியல் குறித்த புரிதல் இன்மையே முதன்மைக் காரணம் ஆகும். அடுத்து இலங்கையின் வடகிழக்கில் உள்ள தொல்லியல் சான்றுகளுக்கான தவறான கற்பிதங்களும் இன முரண்பாடுகளை அதிகரிக்கும்.

தமிழ்நாட்டில் இந்துமதம் பௌத்தமதத்தை அழித்தபோதிலும் மக்களிடையே புத்தரை வழிபடும் இயல்பை மாற்றமுடியாது இருந்தது. இதனால் புத்தரை திருமாலின் அவதாரமாகவும், ஐயனாரின் அவதாரமாகவும் ஏற்று வழிபட்டனர். இவ்வாறு பௌத்தம் இந்து மதத்துடன் ஒன்றியது. பௌத்தர்கள் போதிமர வழிபாட்டை இந்துக்கள் அரச மரத்தில் விநாயகக் கடவுளாக வழிபடும் முறைக்கு மாற்றினர்.

பௌத்த வழிபாட்டு சிறு தெய்வங்களான மணிமேகலை, சம்பாபதி, தாராதேவி என்பவை முறையே காளி, பிடாரி, திரௌபதை அம்மன் என மாற்றம் பெற்றன பௌத்த கோயில்கள் விநாயகர் ஆலயங்களாக மாற்றப்பட்டன. இவ்வாறாக பௌத்த வழிபாட்டு முறைகள் இந்து மதத்திற்குள் உள்வாங்கப்பட்டன. பௌத்த மடங்கள் இந்து மடங்களாக மாற்றப்பட்டன. வைதீகமதத்தில் உயிர்க்கொலை வேள்விகளில் இருந்தது. புலால் உண்ணல் இருந்தது. இவை பௌத்தக் கோட்பாடுகளை உள்வாங்கி பின்னர் விலக்கப்பட்டன. சங்கம் அமைத்து தர்மபோதனை செய்தல் பௌத்தமதம் சார்ந்தது. இதனைப் பின்னர் இந்துமதம் உள்வாங்கி இந்து மடங்களையும், பீடங்களையும் அமைத்தனர். அத்வைத நெறியும் தமிழ்நாட்டில் பௌத்த நெறியில் இருந்து உருவாக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் பௌத்த வழமை இல்லாது போனமைக்கு பௌத்த மதத்தில் ஏற்பட்ட உட்பிளவும் ஓர் காரணமாகும். புத்தரின் கொள்கைகளை மட்டும் உடைய தேரவாதப் பௌத்தமும் புத்தருக்குப் பின்னான கால கொள்கைகளை உள்ளடக்கிய மகாயான பௌத்தமும் தமக்குள்ளே மோதிக் கொண்டனர். அதனால் பௌத்தம் தமிழ்நாட்டில் மேலும் வலுவிழந்தது.

தமிழ்நாட்டை ஆண்ட சோழ மன்னர்களின் எழுச்சி சைவத்தை வளர்ப்பதற்கு உறுதுணையாக நின்றதோடு பௌத்தமதத்தைப் பின்பற்றாது விடுவதற்கும் காரணம் ஆயிற்று. அரசன் எவ்வழி குடிகள் அவ்வழியே என தமிழ்நாட்டில் சைவம் மேன்மையுறப் பௌத்தம் தேய்வுற்றது. இதன்போது பன்னிரு திருமுறைகளின் எழுச்சியும், ஆழ்வார்பாடல்களும், பக்திப்பரவசமும் அதிகரித்தது. அதுவே தமிழர்களின் வாழ்வியலாகியது. பௌத்தத்துறவிகள் மலைக்குகைகளில் வாழ்ந்தமையாலும், அரசனின் ஆதரவு இன்மையாலும் மக்களிடையே திரிபீடகநெறி வீழ்ச்சி உற்றது.

உசாத்துணை நூல்கள்
1. பௌத்தமும் தமிழும், மயிலை சீனி வேங்கடசாமி, தையல் nளியீடு, சென்னை, 2008.

2. வீரசோழியம், பதிப்பு சி. வை. தாமோதரம்பிள்ளை, சென்னை, 1895.

3. நீலகேசி, மூலமும் உரையும், சாரதா பதிப்பகம், சென்னை, 2013.