செய்திகள்

தமிழ் அமைச்சர்களைப் புறக்கணித்த இலங்கை தோட்ட சேவையாளர் சங்கம்

இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் 95 ஆவது ஆண்டு விழாவில் மலையக தொழிற்சங்க தலைவர்களாக இருக்கும் மலையக தமிழ் அமைச்சர்களுக்கு அழைப்பும் மரியாதையும் வழங்காததையிட்டு, ஆண்டு விழா ஏற்பாட்டுக் குழுவினரின் செயற்பாடுகளுக்கு ஆட்சேபனை தெரிவிக்கின்றேன் என இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் பிரதி தலைவர் எஸ்.எஸ்.ஜெயகுமார் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இன்று (சனிக்கிழமை) கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடைபெறும் இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் 95 ஆவது ஆண்டு விழாவில் தொழில் அமைச்சர் ஜோன் செனவி­ரட்ன பிரதம அதிதியாகவும் பெருந்தோட்ட கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் நவீன் திஸாநாயக்க சிறப்பு அதிதியாகவும் கலந்து கொள்கின்றார்கள்.

இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் 95 ஆவது ஆண்டு விழா சம்பந்தமாக நடைபெற்ற நிர்வாக சபைக் கூட்டத்தில் மலையக தொழிற்சங்க தலைவர்களாக இருக்கும் தமிழ் அமைச்சர்களையும் விழாவிற்கு அழைத்து கௌரவிப்பதென தீர்மானம் எடுக்கப்பட்டது. ஆனால், விழாவிற்காக அழைப்பிதழில் பெரும்பான்மை அமைச்சர்களான ஜோன் செனவிரட்னவின் பெயரும், நவீன் திஸாநாயக்கவின் பெயரும் அச்சிடப்பட்டுள்ளது. ஆனால், மலையக தமிழ் அமைச்சர்களின் பெயர்கள் அச்சிடப்படவில்லை.

ஏற்கனவே எங்களது நிர்வாக சபையின் தீர்மானத்தின்படி சம்பந்தப்பட்ட மலையக தொழிற்சங்க தலைவர்களாக இருக்கும் மலையக தமிழ் அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆண்டு விழாவில் அவர்கள் கலந்துகொள்வதற்கான இணக்கமும் பெறப்பட்ட நிலையில் அவர்களின் பெயர்கள் ஆண்டு விழா அழைப்பிதழில் அச்சிடப்படாதது வேதனைக்குரிய விடயமாகும்- என்றார்.

N5