செய்திகள்

தமிழ் அரசியல்வாதிகளும், தமிழ் ஊடகவியலாளர்களும் உறவுக்கார பங்காளிகள்: மனோ கணேசன்

தமிழ் அரசியல்வாதிகளும், தமிழ் ஊடகவியலாளர்களும் உறவுக்கார பங்காளிகள். இந்த உறவிலே நட்பு, அன்பு, பற்று, பாச உணர்வுகள் இருக்கும். அதேபோல் கோபம், சண்டை, வருத்த உணர்வுகளும் இருக்கும். இதை நான் இன உணர்வை அடிப்படையாக கொண்டு செயற்படும் தமிழ் ஊடகவியலாளர்களிடையிலும், தமிழ் அரசியல்வாதிகளிடையிலும் காண்கிறேன். தலை நிமிர்ந்து செயற்படும் ஊடகவியாலாளர், அரசியலர் மத்தியில் இந்த உணர்வு பரிமாற்றங்கள் சகஜம். இதன்மூலம் இவர்கள் இயங்குகிறார்கள் என்பது உறுதிபடுத்தப்படுகிறது.

கொழும்பில் இருந்தே மிகப்பெரும்பாலான தமிழ் ஊடக நிறுவனங்கள், தம் நாடு தழுவிய பணிகளை முன்னெடுக்கின்றன. எனவே ஜனநாயக தேர்தல்களில், கொழும்பில் வாழும் தமிழ் மக்களின் பேரதிக வாக்குகளை பெற்றுள்ள கட்சியின் தலைவன் என்ற முறையில் நான் பெருமையடைகின்றேன். அதுமட்டுமல்லாமல், நமது நாட்டு ஊடக சமூக பரப்பிலே நமது தமிழ் ஊடகவியலார்கள் சந்தித்துள்ள சவால்களை நான் நேரடியாக அறிவேன். இங்குள்ள தமிழ் ஊடக நண்பர்கள் எந்தளவுக்கு தமிழ் சமூகத்தின் முன்னெடுப்புகளுக்கு திரைமறைவில் நின்று பங்களிப்புக்களை வழங்கியுள்ளார்கள் என்பதையும் நான் நேரடியாக அறிவேன் என தேசிய நிறைவேற்று சபை உறுப்பினரும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் நடத்திய விருது விழாவிலே சிறப்பு அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

இங்கே உரையாற்றிய விழாக்குழு தலைவர் ஒரு கருத்தை சொன்னார். ஒரு காலத்தில் தமிழ் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தல் துன்பங்களை சந்தித்த போது, பெரும்பான்மை இன ஊடகவியலாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த தேசிய ஊடக அமைப்புகள் உதவிக்கு வரவில்லை. அதனாலேயே தாம் இந்த தமிழ் ஊடகவியலாளர் அமைப்பை கட்டியெழுப்பும் முடிவுக்கு கூட்டாக வந்தோம் என்று சொன்னார். பெரும்பான்மை இனத்தை சேர்ந்த சில ஊடக நண்பர்கள் தனிப்பட்ட முறையில், தமிழ் ஊடகவியலாளரின் பிரத்தியேக பிரச்சினைகளை கண்டுக் கொண்டார்களே தவிர அமைப்புரீதியாக, தேசிய ஊடக அமைப்புகள் தமக்கு உதவிடவில்லை என்று சொன்னார். இந்த தகவல் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. ஏனெனில் இது நூறு விகித உண்மை என்று எனக்கு நன்கு புரிகிறது.

இப்போது நாடு முழுக்க தேர்தல் முறை மாற்றம் பற்றி பேசப்படுகிறது. இந்த மாற்றங்களை ஏற்படுத்தி, தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் சிறு கட்சிகளை, பெரும்பான்மை கட்சிகளை அண்டி வாழும் சூழலை ஏற்படுத்த முயல்கிறார்கள். இது பற்றி வினா எழுப்பினால், இனரீதியான கட்சிகளை கைவிட்டு தமிழ், முஸ்லிம் மக்கள் பெரும்பான்மை கட்சிகளுடன் இணையும் நோக்கில் இனி எதிர்காலத்தில் செயற்பட வேண்டும் என எமக்கு உபதேசம் செய்கிறார்கள்.

பெரும்பான்மை கட்சிகள், சிங்கள தேசியத்தை மாத்திரம் முன்னெடுப்பதை கைவிட்டு, இலங்கை தேசியம் என்ற கொள்கையை முன்னெடுத்தால் நாம் ஏன் இனரீதியான கட்சிகளை முன்னெடுக்கின்றோம்? இங்கே எங்கே, சிறிலங்காவும், சுதந்திரமும், ஐக்கியமும், தேசியமும் இருக்கின்றன? இல்லவே இல்லை. எனவேதான் எமக்கு உபதேசம் செய்வதை நிறுத்தி விட்டு நீங்கள் மாறுங்கள் என பெரும்பான்மை கட்சிகளிடம் சொல்கிறோம். தேர்தல் காலங்களில் நடைமுறையில் இருக்கும் தேர்தல் சட்டங்களின் காரணமாக பெரும்பான்மை கட்சிகளுடன் கூட்டு சேர்கிறோம். மற்றபடி எங்கள் தனித்துவத்தை பேணிக்கொள்கிறோம்.

அதேபோல்தான் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியமும், பெரும்பான்மை தேசிய ஊடக அமைப்புகளுடன் சேர்ந்து பொது பிரச்சினைகளில் செயற்படுகிறது. அதேவேளை தம் தனித்துவத்தையும் பேணிக்கொள்கிறது. இந்த அடிப்படையில்தான் முஸ்லிம் மீடியா போரம் என்ற அமைப்பும் இருக்கிறது. அதனால்தான் சொல்கிறேன், நீங்களும், நாங்களும் சொந்தக்கார பங்காளிகள்.