செய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு இவ்வருட இறுதிக்குள் தீர்வு: மன்னார் ஆயரிடம் ஜனாதிபதி

தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படும் என தம்மைச் சந்தித்த மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப்பிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கின்றார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் இன்று சந்தித்தார்.  இந்தச் சந்திப்பின் போது கைதிகளின் விவகாரம் உட்பட பல பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டது.

இந்தச் சந்திப்பின் போதே ஜனாதிபதி மேற்படி உறுதிமொழியை மன்னார் ஆயரிடம் வழங்கினார் எனத் தெரியவந்திருக்கின்றது. ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் மகஸின் சிறைச்சாலைக்குச் சென்ற மன்னார் ஆயர் அங்கு 120 தமிழ் அரசியல் கைதிகளைச் சந்தித்து உரையாடினார். பின்னர் வெலிக்கடைச் சிறைக்குச் சென்று அங்குள்ள 5 பெண் அரசியல் கைதிகளையும் சந்தித்து உரையாடினார்.

அரசின் 100 நாள் வேலைத் திட்டத்துக்குள் கைதிகள் விடுதலை செய்யப்படுவது சாத்தியமாகாது. எனினும் இந்த வருட முடிவுக்குள் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்வதற்கான உரிய நடவடிக்கைகளை ஜனாதிபதி மைத்திரிபால மேற்கொள்வார் என்று மன்னார் ஆயரிடம் தெரிவித்தார் எனத் தெரியவருகின்றது.