செய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலையில் அரசு தயக்கம்? சர்ச்சையை கிளப்பும் விக்னேஸ்வரன்

இலங்கைச் சிறைகளில் நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டிருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதில் புதிய அரசாங்கமும் தயக்கம் காட்டி வருவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருப்பது அரசியலில் சர்ச்சை ஒன்றை உருவாக்கியுள்ளது.

தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டுவருவதாகவும் வரும் மார்ச் மாதமளவில் இறுதிப் பெயர்ப் பட்டியல் தயாராகிவிடும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருக்கின்றார்.

“நாட்டில் ரகசிய முகாம்கள் ஏதும் இருந்தால் அவற்றை மூடிவிட்டு அங்கு தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களை மீட்கமுடியும்” என்றும் ரணில் விக்ரமசிங்க கூறியதாகவும் நியுயோர்க் டைம்ஸ் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும், பொதுத் தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடக்கவிருப்பதால் பெரும்பான்மை சிங்கள மக்களை அதிருப்திக்கு உள்ளாக்க விரும்பாததாலேயே அரசியல் கைதிகளை விடுவிக்க பிரதமர் மறுத்துள்ளதாக வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை மேற்கோள்காட்டி நியுயோர்க் டைம்ஸ் கூறியுள்ளது.

“தேர்தல் நெருங்குவதால் காலத்துக்கு ஏற்ப பிரதமர் நடந்துகொள்ளப் பார்க்கிறார்” என்று விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியிருக்கின்றார்.