செய்திகள்

‘சமுக விரோதி” நாடகம்

இன்று புலம்பெயர் தேசங்களில் மிக மலிவாக கொடுக்கப்பட்டும் வாங்கப்பட்டும் வரும் மிக முக்கியமான பெயர்களில் ஒன்றுதான் ‘சமுக விரோதி” அல்லது ‘தேசத் துரோகி” ஆகும். யார் யாருக்கு கொடுப்பது என்றில்லாமல் யார் வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் வழங்கித் திணிக்கலாம் என்ற பொதுமைப்பாட்டுக்குள் வந்திருக்கின்ற இந்தப் பெயரில் ஒரு நாடகம் இடம்பெறவிருக்கின்றது என அறிந்ததும் அதனை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணப்பதிவே எனக்குள் எழுந்தது எனலாம். கடந்த அக்டோபர் மாதம் 5ம் நாள் லண்டன் தமிழ் அவைக்காற்றுக் கலைக் கழகத்தினர் Watford Pump House Theatre இல் அவைக்காற்றுகை செய்த அவர்களது புதிய நாடகத் தயாரிப்பின் பெயர் தான் ‘சமுக விரோதி”.

sam-78வாயினை மூடி பிளாஸ்ரர் ஒட்டப்பட்ட முகம் ஒன்றை அட்டைப்படமாகக் கொண்ட நாடகத் தயாரிப்பு விபரங்கள் அடங்கிய நூல் ஒன்றினை தமிழ் அவைக்காற்றுகைக் கலைக் கழகத்தினர் அன்றைய தினம் நுழைவாயிலில் வைத்து பார்வையாளருக்கு வழங்கியிருந்தனர். உண்மையில் இவர்களது அந்த அரங்க ஆற்றுகையும் அதற்கான வெளியும் அந்த நூலின் அட்டைப்படத்துடனேயே ஆரம்பித்துவிட்டது என்றே நம்புகின்றேன். எவன் ஒருவன் ஏற்கனவே ஒரு சமுகப் பாதிப்பில் வாழ்ந்து கொண்டிருக்கின்றானோ, அல்லது அந்த சமுகத்தின் அண்மைய வெளிப்பாடுகள் பற்றிய சர்ச்சைகளுக்குள் உள்வாங்கப்பட்டு முரண்பாட்டுச் சிந்தனைகளுடன் இருக்கின்றானோ, அவன் அளிக்கைக்கு வெளியே நுழைவாயிலில் ஆரம்பிக்கின்றதான இந்த ரசனை வெளியுடன் மிக இலகுவாக ஒட்டிக்கொண்டு விடுகின்றான் என்பதே உண்மை. கருத்துச் சுதந்திரத்துடன் தான் நினைப்பதை தனக்கேயுரிய சிந்தனைப் பெறுமானத்தில் நின்று வெளிப்படுத்த முடியாமை என்பதும், அவ் வெளிப்பாட்டிற்கு அப்பால் அவனை நோக்கியதான மிக மலினமான ஒடுக்குமுறையின் நுகத்தடிகள் அச்சுறுத்தலாக நீளும் என்பதும் ஒரு சமுகத்தின் மிக ஆபத்தான சுதந்திர வெளிகளையே காட்டுகின்றன. நான் நினைக்கின்றேன், இந்த ஆபத்தான கருத்து வெளி என்பது இலங்கைக்குள் மிகக் கொடுரமான இன ஒடுக்குமுறைக்குள் கடந்த நான்கு தசாப்தங்களாக நாம் இருந்ததைக் காட்டிலும் இன்று புலம்பெயர் தேசங்களில் தான் மிக அதிகமாக எம்மைப் பாதிக்கின்றது என்று. எனவே, பொருத்தமான ஒரு காலப்பகுதியில் மிகச் சரியான ஒரு கலை ஊடகச் சாதனம் ஊடாக தமிழ் அவைக்காற்றுகைக் கலைக் கழகத்தினர் இந்த விடயம் பற்றி பேசியிருக்கின்றனர் என்பது காலத்தைக் காட்டும் கலை வெளிப்பாடுகள் என்ற வகையில் ஒரு முக்கியமான பதிவாகின்றது.

திரு.பாலேந்திரா அவர்களுடைய நாடகத் தயாரிப்பு முறைமை என்பது பெரும்பாலும் இயற்பண்புவாத நடிப்பு மோடியையே அதிகம் அழுத்துகின்றதான ஒரு போக்கினைக் கொண்டிருப்பதை அவருடைய பல நாடகத் தயாரிப்புகளில் இருந்து நாம் அறிந்துகொள்ளலாம். குறியீட்டு நாடகங்கள், மொழிபெயர்ப்பு நாடகங்கள், புத்தாக்க நாடகங்கள், சுயமொழியில் தயாரிக்கப்படுகின்ற புதிய நாடகங்கள் என எந்த வகையினதாக அவை இருந்தாலும்(சிறுவர் நாடகங்கள் நீங்கலாக) அளிக்கை என்ற வகையில் அவை யதார்த்தப் பாங்கான ஒரு ஊடாட்டத்தையே பார்வையாளருக்கும் தமக்கும் இடையே ஏற்படுத்தியிருக்கின்றன எனக் கூறலாம். ‘சமுக விரோதி” என்ற இந்த நாடகம் கூட அந்த பண்புநிலையை ஒட்டியே அன்றைய தினம் அவைக்காற்றுகை செய்யப்பட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது. ஒரு சாராசரிக் குடும்பத்தின் வீட்டுச் சூழல் மேடையில் காட்சி விதானிப்பாக நீள நாடகம் ஆரம்பமாகியிருந்தது. காட்சி விதானிப்புகளை அழகுற அமைத்தல், கைவினைப் பொருட்களை சரியாக தெரிவுசெய்து கச்சிதமாகப் பாவித்தல், ஒளிக் கலவையினூடாக தேவையான காட்சிப் படிமங்களை மட்டும் தேவையான அளவுகளில் பார்வையாளரின் கண்களினூடாக ஊடுகடத்துதல், மேடைச் சமநிலைகள் பார்வையாளனின் ரசனைச் சமநிலையைக் குலைக்காத வகையில் கையாளப்படுதல், ஆடையமைப்புகளை கதைக்களத்துடன் அந்நியப்படாதவாறு திட்டமிட்டு ஒழுங்கமைத்தல், இசையினை உணர்வுகளுக்கு ஏற்ப இயைந்து போகும்படியாக நெறிப்படுத்தியிருத்தல் என்பது போன்ற அரங்க மூலகங்களின் கையாளுகைகள் என்பது தமிழ் அவைக்காற்றுகைக் கலைக் கழகத்தினரின் தேர்ந்த அரங்க அறிவினையும் மிக நீண்டகால அனுபவத்தினையும் எப்போதும் போல இந்த நாடகத்திலும் காட்டியிருந்தது எனலாம்.

உண்மைக்கும் அதிகாரத்துக்கும் இடையிலான மோதல்களின் மேல் கட்டியெழுப்பப்பட்ட இந்த நாடகத்தின் கருப்பொருளானது எமது சமகால அரசியல், சமுகவியல், ஊடகவியல் என பல துறைகளிலும் பிரதியீடு செய்து பார்ப்பதற்கும் அவற்றுடன் பொருத்தப்பாடொன்றினை காண்பதில் நாம் தோற்றுப்போய்விடாத வகையிலும் ஒரு பலமான நிலையிலேயே எடுத்தாளப்பட்டிருக்கின்றது. இன்னுமொரு வகையில் கூறுவதாயின் இதனை ஜனநாயகத்திற்கும் தந்திரோபாயத்திற்கும் இடையிலான மோதல் எனவும் கூறிக்கொள்ளலாம். ஆக அரங்க அளிக்கைக்குரிய ‘முரண்நகை” மிக ஆழமாக அளிக்கை முழுவதும் விரவிக் கிடந்திருக்கின்றது என்றே கூற வேண்டும். மிக இலகுவாகச் சொல்லப் போனால், ஒரு உண்மையை கண்டறிந்த ஒரு மனிதன் அதனை இறுதிப் பயனாளியாகிய மக்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பதற்கு எத்தனை அதிகார வரம்புகளை தாண்ட வேண்டியிருக்கின்றது, அல்லது எத்தனை தந்திரோபாய நகர்வுகளை முறியடித்துப் பாய வேண்டியிருக்கின்றது என்ற கசப்பான உண்மையே நாடகம் முழுவதும் எமது உணர்வுகளை கொதிநிலையில் வைத்திருக்க உதவியது எனலாம். அதிகாரச் சுயநலங்கள், விலைக்கு வாங்கப்பட்ட ஊடக தர்மங்கள், வாழ்வாதார வருமானங்களை துருப்புச் சீட்டாக வைத்து அச்சுறுத்தும் முதலாளித்துவ சிந்தனைகள், தத்தமது இருப்புகளை தக்க வைப்பதற்கான நழுவல் போக்குகள், நடுவுநிலைமைகளை தவறவிட்ட ஊதுகுழல் ஊடகங்கள், அரசியல் செல்வாக்குகள், தத்தமக்கு ஆதரவாக மக்களைத் திரட்டிக் கூச்சல்போட்டு, கலவரம் செய்து, ஆர்ப்பாட்டம் நடத்தி உண்மைகளின் மேல் காறி உமிழ முனையும் வெற்று வேட்டுக்கள் என எம்மை அண்மித்திருக்கின்ற பலவற்றையும் சாடி முடித்திருக்கின்றது இந்த நாடகம் என்றால் அது மிகையாகாது. உண்மைகளை நிமிர்த்திக் காட்ட முனையும் நீதிமான்கள் கூட அதனை நிரூபிப்பதற்கான கருத்துச் சுத்தத்தினை வைத்திருக்கின்றார்கள் என்பதற்கு அப்பால் அதை வைத்து தமக்கான பிரபல்யம் தேடும் மறைமுக ஆதாயங்களையும், சீர்திருத்தவாதியாகவும் சமுக செயற்பாட்டாளனாகவும் நாட்டுப் பற்றாளனாகவும் தன்னை தரமுயர்த்திக் காட்டும் தன்னல இலாபங்களையும் உள்நோக்காக கொண்டுள்ளானோ எனவும் சந்தேகிக்கின்ற அளவுக்கு பாத்திரங்கள் நேர்த்தியாக வடிக்கப்பட்டிருந்தன.

sam-77

1882 இல் எழுதி முதன் முதலில் மேடையேற்றப்பட்ட ஹென்றிக் இப்சனுடைய ‘மக்களின் எதிரி” என்ற நாடக பிரதியை தழுவி, 1950 இல் ஆதர் மில்லர் என்ற சென்ற நூற்றாண்டின் மிக முக்கிய நாடகாசிரியர் இன்னுமொரு பிரதியை எழுதியிருந்தார். இந்த நாடக பாடத்தின் தாக்கத்தாலும் அதன் வீரியமும் அவசியமும் நாம் வாழும் சமுகத்திற்கு மிகவும் முக்கியமானது என்ற தெளிவான புரிதலாலும் உந்தப்பட்டு 1999 முதல் திரு.பாலேந்திரா எடுத்த முயற்சியின் ஒரு விளைபயனே இந்த ‘சமுக விரோதி” என்ற நாடகமும் அது ஏற்படுத்த முனைந்த தாக்கப் பின்புலமுமாகும். ஒரு நாடக பிரதியினை தமிழாக்குவது என்பது வேறு அதனை தழுவி தமிழில் எழுதுவதென்பது வேறு. கருத்து ரீதியான ஒரு பொதுமைப்பாடு மட்டும், வேற்றுமொழி நாடகப் பிரதி ஒன்றினை தமிழில் மேடையேற்றுவதற்கு போதாது என்ற உண்மை மிக அவசியமானது எனக் கருதுகின்றேன். இந்த அவசியத்தைப் புரிந்ததால்த்தான் திரு.சி.சிவசேகரம் அவர்கள் ஆதர் மில்லாரின் பிரதியை நேரடி மொழிமாற்றம் செய்யாது எமது இனத்தின் புரிதல் மற்றும் பண்பாட்டுத் தளத்தை மனதில் வைத்து புதிய தழுவல் பிரதியாக எழுதியிருந்தார் என்பதாக இந்த நாடகத்தின் பிரதி பற்றி சிலாகித்தவர்களிம் இருந்து அறிய முடிந்தது. அது முற்றிலும் உண்மை என்பது தமிழ் அவைக்காற்றுகைக் கலைக் கழகத்தினரின் இந்த நாடக மேடையேற்றத்தின் போது புரிய முடிந்தது. மிக வீச்சான தாக்க வன்மை பொருந்தியதாக இருந்தது திரு.சி.சிவசேகரம் அவர்களின் நாடக பாடமும், பாத்திரங்களின் வாயிலாக அவர் பேசிய உரைநடைகளின் கனதியும். அந்த கனதியை எந்தக் கணத்திலும் சிதற விடாமல் பார்த்துக்கொள்வதில் கூட இதில் ஈடுபட்ட அனைவருமே மிகச் சிரத்தை எடுத்துக்கொண்டார்கள் என்றுதான் கூறவேண்டும். அந்த அளவுக்கு பிரதிக்கு உயிர் கொடுப்பதற்கு அவர்களின் ஆற்றல் நன்கு நெறிப்படுத்தப்பட்டிருந்தது.

லண்டன் தமிழ் அவைக்காற்றுகைக் கலைக் கழகத்தின் தேர்ந்த நடிகர்களாலும் கலைஞர்களாலும் இந்தக் கனதியான ஆற்றுகை மனங்களில் நிறைய பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தாலும், ஒருசில நேர்த்திக் குன்றல்கள் அல்லது ஒத்திகைப் போதாமைகள் அளிக்கையோடு முழுமையாக ஒட்டவைப்பதில் சில இடையூறுகளை ஏற்படுத்தியிருந்தன என்பதையும் இங்கு கூறித்தான் ஆகவேண்டியிருக்கின்றது. மனன ஒத்திகைகள் போதாமையாலோ அல்லது நாடக பாடத்தினை முமுமையாக மனனம் செய்வதில் இருந்திருக்கக்கூடிய இதர சிரமங்கள் காரணமாகவோ சில நடிகர்களால் பல தடவைகளில் வசனங்களை சரளமாக வெளிப்படுத்த முடியாமல் போயிருந்தது. அத்துடன் வசனங்களை நினைவூட்டுனராக திரைமறைவில் தொழிற்படுவோருடைய குரல்கள் பல இடங்களில் மேலோங்கிக் காணப்பட்டமையும் அதனைத் தொடர்ந்து நடிகன் மீள அதனை ஒப்புவிப்பதும் நாடக ரசனை ஓட்டத்தினை அவவப்போது இடறல்படுத்திகொண்டேயிருந்தது. சில நடிகர்களால் தவறவிடப்பட்ட வசனங்களில் ஏற்பட்ட குழப்பமும் மீண்டும் எந்த இடத்தில் இருந்து காட்சிக் கட்டமைப்பைத் தொடங்குவது என்ற இடறலும் நடிகர்களிடையே காணப்பட்டமையை பார்வையாளர்கள் சரியாக அடையாளம் கண்டுகொள்ளத் தவறவில்லை என்றே நினைக்கின்றேன். விட்ட இடத்தில் இருந்து மீண்டும் வசனங்களை கூற முற்படும் போது சில வசனங்கள் இரட்டிப்பாக கூறப்பட்டமையும் நாடக ரசனை ஓட்டத்தை மட்டுப்படுத்த முனைந்திருந்தது.

இன்று நாடகமும் அரங்கியலும் என்ற துறை மிக வேக வளர்ச்சி கண்டு கல்வியியல் ரீதியில் மிக முக்கியத்துவத்தினைப் பெற்றிருக்கின்றது. அதை விடவும் மேற்புலங்களில் நாடகத்துறையின் தொழில்நுட்ப வளர்ச்சி இன்று பன்மடங்கு விசாலமாகப் பர்ணமித்திருக்கின்றது எனறே கூற வேண்டும். இந்த அபரிமிதமான வளர்சியோடு எமது தமிழ் நாடகங்கள் ஒருவகையில் போட்டி போட்டுக்கொண்டு பார்வையாளனை வெற்றிகொள்ளத் தவறும் போது அது தனக்கான இருப்பினை இழந்துவிடக்கூடிய ஆபத்து இருக்கின்றதோ என எண்ணத் தோன்றுகின்றது. காரணம் இன்று எமது தமிழ் நாடங்களின் பார்வையாளரின் வரவுகளை பகுப்பாய்வுக்கும் கருத்துக் கணிப்பிற்கும் உட்படுத்திப் பார்த்தால், இரசனைக்கான வருகையாளர்களைக் காட்டிலும் கொள்கைப் பிடிப்பிற்காய் வருவோர்களும், நண்பர்களுக்கான முகஸ்துதிக்காய் வருவோர்களும், தமது பிள்ளைகளின் பங்குபற்றுதலுக்காய் வருவோர்களும் என்ற அடிப்படையிலேயே பெரிதும் காணக்கிடக்கின்றது. லண்டனைப் பொறுத்தவரையில் ஏனைய நாடக அளிக்கைகளை விடவும் தமிழ் அவைக்காற்றுகைக் கலைக்கழகத்தினரின் ஆற்றுகைகளுக்கு ரசனையினால் உந்தப்பட்டு வருவோர் மிகக் கணிசமான அளவு இருக்கின்றார்கள் என்பதை நான் அறிவேன். இவர்களுடைய ரசிகர்அவை உறுப்பினர்களது எண்ணிக்கையும் அவையிலே வெற்று இருக்கைகள் இல்லாத அளவுக்கு நிறைந்த பார்வையாளர்கள் வருகை தருவதும் இதனை சான்றாக்குகின்றன. இத்தகைய ரசிகர் கூட்டத்தினை தன்னகத்தே தகவமைத்துக் கொண்ட தமிழ் அவைக்காற்றுக் கலைக் கழகத்தினர் இந்த
‘சமுக விரோதி” என்ற தமது அளிக்கையில் இரண்டு இடங்களில் காட்சி மாற்றங்களுக்காக எடுத்துக்கொண்ட நேரங்களும் இருட்டாக்கப்பட்ட மேடையோடு பார்வையாளர்கள் அடுத்த காட்சிக்காக காக்கவைக்கப்பட்டிருந்த பொழுதுகளும் சற்று அதிகமாகப் போய்விட்டதோ என்ற ஆதங்கம் எனக்குள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. திரை விலகும் போது அரங்குக்குள் நுழையும் ரசனையை திரை மூடும்வரை தக்கவைப்பதற்கும் மனதில் தோன்றும் பாரங்களோடும் நாடகம் ஏற்படுத்திய தாக்கங்களோடும் பார்வையாளன் அரங்கை விட்டுச் செல்வதற்கும் இந்த காட்சி மாற்றம் தந்த இடைவெளி ஒரு சரிவைத் தந்திருக்கிறது என்றுதான் கூறவேண்டும். தனக்கு அருகிருக்கும் சக பார்வையாளனைத் திரும்பி ஒருமுறை பார்ப்பதற்கு ஒரு அளிக்கை சந்தர்ப்பம் தருகிறதென்றால் அந்த இடத்தில் அளிக்கை நிமிர்த்த வேண்டிய ஒரு தளர்வுநிலைக்கு வந்திருக்கின்றது என்பதாகத்தான் பொருள் கொள்ள வேண்டியிருக்கின்றது. காட்சி மாற்றங்களின் அவசியமும் காட்சி விதானிப்பின் ஒழுங்குபடுத்தலும் ‘சமுக விரோதி” யின் அந்த இரண்டு இடங்களிலும் மிக முக்கியமானது எனப் புரிய முடிந்தாலும் கூட அந்த அவசியமான மாற்றத்திற்கு வேறு ஒரு நுட்பமான உத்தியினை நெறியாளர் கையாண்டிருக்கலாமோ என ஒரு கேள்வி கூட எழாமலில்லை.

எது எப்படி இருந்தாலும் இன்று புலம்பெயர் நாடுகளில் இன்னும் நாடகக் கலையினை உயிர்ப்புடன் முன்னெடுத்துச் செல்பவர்கள் வரிசையில், தமிழ்அவைக்காற்றுகைக் கலைக் கழகத்திற்கும் அதன் இயங்குசக்திகளாக இருக்கும் திரு.பாலேந்திரா மற்றும் திருமதி பாலேந்திரா ஆனந்தராணி போன்றோருக்கும் ஒரு சிறப்பான தனி இடம் தனித்துவமாக இருக்கின்றது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. அவர்கள் உருவாக்கிய கலைஞர்கள் கூட மிக அர்ப்பணிப்புடன் கூடிய அரங்கப் பணியினை ஆற்றிவருவது தமிழ் உலகிற்கு என்றும் ஒரு வரப்பிரசாதமே. கலைத் தாகத்துடனும் அரங்க ஆர்வத்துடனும் இருக்கும் என்னைப் போன்றோருக்கு இவர்களின் அரங்கியல் பணி அடிக்கடி பசியாற்றுகிறது என்பதே உண்மை.

– சாம் பிரதீபன் –