செய்திகள்

தமிழ் இளைஞர் கடத்தலின் பின்னணியில் கடற்படை? முன்னாள் பேச்சாளரிடம் விசாரணை

கொழும்பிலும், திருகோணமலையிலும், தமிழ் இளைஞர்களும் அவர்களின் பெற்றோரும் கடத்தப்பட்டு காணாமற்போன சம்பவங்கள் தொடர்பாக, கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கொமாண்டர் டி.கே.பி.தசநாயக்கவிடம் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.

2007ம் ஆண்டுக்கும், 2009ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், கொழும்பு மற்றும் திருகோணமலைப் பகுதிகளில் தமிழ் இளைஞர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் கடத்தப்பட்டு காணாமற்போயிருந்தனர்.

இந்தச் சம்பவங்கள் தொடர்பாக செய்யப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில், 2010ம் ஆண்டு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்திருந்தது. இந்த விசாரணைகளில் கடற்படை அதிகாரிகள் இந்த ஆட்கடத்தல்களில் தொடர்புபட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்தே, கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கொமாண்டர் டி.கே.பி.தசநாயக்க நேற்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.