செய்திகள்

தமிழ் ஊடகங்களை பயன்படுத்தியே தமிழர் போராட்டத்தை மழுங்கடிக்கும் சிறி லங்காவின் யுக்தி

 லோ. விஜயநாதன் 

தற்போது பெரும்பாலான தமிழ் ஊடகங்களின் செய்திகளில் முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமாகிய ஜெனரல் சரத்பென்சேகா பாராளுமன்றத்தில் கூறிய “யுத்தம் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்ட மே 18ம் திகதிக்கு பின்னரும் பிரபாகரன் உயிருடன் இருந்தார்” என்பதே பிரதான விவாதப்பொருளாக மாறியுள்ளது.  பொன்சேகாவின் இந்த கருத்தை ஒட்டிய  அரசியல்வாதிகளின் கருத்துக்களும், பத்தி எழுத்தாளர்களின் ஊகம் அடிப்படையிலான ஆய்வுகளும் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கின்றன.  ஒரு விடுதலைப் போராட்டத்தை அதை வேண்டி நிற்கின்ற இனத்தின் ஊடகங்களே  கொச்சைப்படுத்தும் நிலையை காணமுடிகின்றது.

இந்திய உளவுத்துறையால் மிகவும் கச்சிதமாக தமிழின உணர்வாளர்களை வைத்து ஊடகங்களின் வாயிலாக பிரபாகரன் இருக்கின்றார், இல்லை என்ற ஒரு சர்ச்சைக் கருத்தை முன் வைத்து முள்ளிவாய்க்காலின் பின்னர் தப்பிய விடுதலைப் போராளிகள் மூலமான ஒரு கொரிலா போராட்டத்துக்கான வாய்ப்புக்கள் இல்லாமல் செய்யப்பட்டதுடன் ம் புலம்பெயர் தமிழர்களுக்கிடையே பாரிய விரிசல்களும் ஏற்ப்படுத்தப்பட்டன.

மறுமுனையில் பிரபாகரன் வருவார், புலிகள் மீண்டும் வருவார்கள் போன்ற கருத்தினூடாக தமிழ் மக்கள் தமது உரிமைக்கான பேராட்டத்தை அரசியல், ராஜதந்திர ரீதியில் புதிய வடிவில் முன்னெடுப்பதும் திட்டமிட்டு மழுங்கடிக்கப்பட்டது .

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் ஆயுதரீதியாக தோற்கடிக்கப்பட்டதற்கு தனியே வல்லாதிக்க சக்திகளின் சிறிலங்காவுக்கான அதிநவீன ஆயுத உதவிகளும் ஒத்துழைப்புக்களும் மட்டுமன்றி மிகப் பிரதான மாக ஸ்ரீ லங்கா அரசாங்கத்துக்கு சாதகமான அவர்களின் ஊடகப்பரப்புரையுமே காரணமாக அமைந்திருந்தது.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தமிழ் மக்கள் மத்தியில் ஏனைய  எல்லா ஆயுதக் குழுக்களையும் விட மிகவும் வினைத்திறனான போராட்டக் குழுவாகவும் பின்னர் தமிழ் மக்களின் இராணுவக் கவசமாகவும் பரிணமிப்பதற்கும் அவர்கள் ஊடக பரப்புரைகளுக்கு கொடுத்த முக்கியமும் காரணமாகும்.   இதற்கு  ஈழநாதம் பத்திரிகை, “விடுதலைப்புலிகள்” மாதாந்த சஞ்சிகை, ” ஆதாரம்” மாதாந்தத சஞ்சிகை, புலிகளின் குரல் வானொலி, நிதர்சனம் தொலைக்காட்சி போன்றவற்றை குறிப்பிட்டுச் சொல்ல முடியும்.

ஆனாலும் துரதிஸ்டவசமாக இவை அனைத்தும் அவர்களின் கட்டுப்பாட்டு பிரிவுகளுக்குள்ளும் புலம் பெயர் மக்கள் மத்தியிலுமே கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தன.  சர்வதேசத்தைக் கையாளக்கூடிய வகையில் மூலோபாயரீதியிலான கருத்துருவாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய வகையில் ஊடக துறையில் அவர்களால் வளர முடியவில்லை.  ஒரு சில இணையங்கள் செயற்பட்டிருந்தாலும் அவை தனியே யுத்தத்தை மையப்படுத்திய ஊடகங்களாக  செயற்பட்டனவே ஒழிய  மூலோபாய ரீதியில் போராட்டம் சார்பான கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கவில்லை. இது இறுதி யுத்தத்தில் ஸ்ரீ லங்கா அரசாங்கத்தின் வெற்றிகரமான செய்தி தணிக்கையும் , விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகளாக சித்திரித்து அவர்கள் மேற்கொண்ட பிரசாரமும் மனிதாபிமான ரீதியில் எந்த ஒரு சர்வதேச தலையீட்டுக்கும் இடங்கொடாத வகையில் அமைந்திருந்தன. ஸ்ரீ லங்கா அரசாங்கத்தின் இந்த ஊடக பிரசாரத்தை முறியடிக்க முடியாத ஊடக பலவீனம்,   சர்வதேச ஊடகங்களும் ஸ்ரீ லங்கா அரசாங்கத்தின் ” மனிதாபிமான யுத்ததை ”  அங்கீகரிக்கும் வகையில் அமைந்திருந்தன. ஊடக ரீதியில், குறிப்பாக ஆங்கில ஊடக துறையில் இருக்கின்ற எமது பலவீனம்  எமது போராட்டத்தில் பாதகமானதாகவே இருந்து வருகிறது.

பொதுவாக சர்வதேச அளவிலான பிரதான ஊடகங்களாக மேற்குலக ஊடகங்களே காணப்படுகின்றன. இவை அந்தந்த நாடுகளின் ஏனைய நாடுகளுடன் கொண்டுள்ள உறவுகளுக்கும் மூலோபாய முக்கியத்துவங்களுக்கும் ஏற்ப ஏனைய நாடுகளில் ஒன்றில் நேரடியாக ஊடகவியலாளர்களை வைத்திருப்பார்கள் அல்லது பூகோள அமைவிடங்களையும் அந்நாடுகளின் ஊடக வளங்களையும் கருத்திற்கொண்டு ஒரு நாட்டை தெரிவு செய்து அங்கிருந்துகொண்டு  சுற்றியுள்ள நாடுகளின் செய்திகளை வழங்கி வருவார்கள்.  அந்த வகையில் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான மேற்கத்தேய ஊடகங்களின் பிரதான ஊடகவியலாளர்கள் இந்தியாவில் இருந்து கொண்டே செய்தி சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார்கள். அங்கிருந்துகொண்டே தேவையான நாடுகளுக்கு பயணம் செய்கிறார்கள். இவர்கள் ஒன்றில் மேற்கத்தைய  நாடுகளிலிருந்து இந்தியா சென்று வேலை செய்பவர்களாக இருப்பார்கள் அல்லது இந்தியர்களாக இருப்பார்கள். இவர்கள் எந்தவகையைச் சார்ந்தவர்களாயினும், அவர்களின் செய்தி அறிக்கைகளில் இந்தியாவின் அரசியல், சமூக சிந்தனைகளின் ஏற்படுவதை தவிர்ப்பது மிகவும் கடினம்.  உதாரணமாக, அநேகமான மேற்கு நாட்டு மற்றும் அமெரிக்க ஊடகங்களின் செய்தியாளர்கள் சிறிலங்காவில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது புது டில்லி, மும்பை  மற்றும் கல்கத்தா ஆகிய இடங்களில் இருந்தே அடிக்கடி ஸ்ரீ லங்கா போய் வந்தார்கள். இவர்களின் இறுதி யுத்த செய்தி அறிக்கைகளை ஆராய்ந்தால் புது டில்லி அரசியல் சிந்தனை,  இந்திய நாளிதழ்களின் கொள்கை மற்றும் இந்திய செய்தியாளர்களின் சிந்தனை ஆகியவற்றின் ஆதிக்கத்தை கண்டுகொள்ள முடியும். குறிப்பாக வாஷிங் டன் போஸ்ட் , நியூ யோர்க் டைம்ஸ் ஆகிய பத்திரிகைகளின் இறுதி யுத்த அறிக்கைகளில் இந்த ஆதிக்கத்தை காணலாம்.

2001ம் ஆண்டு இலங்கையில் ஏற்படுத்தப்பட்ட போர் நிறுத்த உடன்பாடும்  அதை நோக்கிய செயற்பாடுகளும் சர்வதேச ஊடகப்பரப்புரைகளில் அக்காலகட்டத்தில் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தன.குறிப்பாக, விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனும் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கமும் இணைந்து வன்னியில் வழங்கிய ஊடகவியலாளர் சந்திப்பு அமைந்திருந்தது. இந்த ஊடகவியலாளர்கள் சந்திப்புக்கு சுமார் 100 வரையான ஊடகவியலாளர்கள் நேரடியாக வந்திருந்தனர் . இவ்வாறு யுத்த நிறுத்தத்தை அடியொற்றிய செயற்பாடுகள் யாவும் ஊடகங்களுடாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தன. இவற்றின் பின்னணியில் நோர்வேயும், இந்தியாவும் செயற்பட்டிருந்தன.   ஆனால் , இவற்றின் பின்னால் இருந்த நோக்கம், ஒரு வினைத்திறனான போராட்ட அமைப்பை அதன் போரிடும் ஆற்றலிலிருந்து முடக்குவதற்காகவே  இருந்தது.   இந்த ஊடக பரப்புரைகள் புலிகளின் போராட்டத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது போன்றும் தொடர்ந்தும் போர் நிறுத்தத்தைக் கடைப்பிடிப்பதனூடாக அதை அடைய முடியும் போன்ற  ஒரு தோற்றப்பாடு ஏற்படுத்தப்பட்டது. ஆனால், புலிகளை வீழ்த்துவதற்கு ஊடகங்கள் மூலம் வைக்கப்பட்ட  பொறியாகவே இது இருந்தது.

Prabha

பின்நாளில் விடுதலைப்புலிகள் தாம் ஒரு பொறிக்குள் வீழ்த்தப்பட்டுள்ளோம் என்பதை உணர்ந்து சுதாகரித்து செயற்பட தொடங்கும் போது அதே ஊடகங்களின் ஊடாகவே அவர்களுக்கான கடிவாளங்கள் இறுக்கப்பட்டன .  பெல்ட் கட்டினால் உடன்படிக்கை மீறல், கொடியேற்றினால் உடன்படிக்கை மீறல் என்று புலிகளின் யுத்த நிறுத்த மீறல்களின் எண்ணிக்கை அரசாங்கத்தை விட பல மடங்காக சர்வதேச அளவில் காண்பிக்கப்பட்டு அவர்களுக்கு எதிரான  விமர்சனங்கள் சர்வதேச அளவில் முடுக்கிவிடப்பட்டன.

எண்ணிக்கை அடிப்படையில் பல ஆயிரம் யுத்த நிறுத்த மீறல்களை விடுதலைப்புலிகள் செய்ததாகவும் சிறிலங்கா இராணுவம் நூற்றுக்கணக்கான மீறல்களையே செய்ததாகவும் பிரச்சாரப்படுத்தப்பட்டது. ஆனால் சிறிலங்கா இராணுவம் அம்பாறை கஞ்சிக்குடிச்சாறு இராணுவ முகாமுக்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல பொதுமக்களை சுட்டுக்கொன்றமையும்,  ஆழ ஊடுறுவும் அணியினால் வன்னிப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளும் , துணை ஆயுதக்குழுக்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளும் வெறும் எண்ணிக்கை அடிப்படையில் அடங்கிவிட்டன. அவற்றின் பாரதூர தன்மைகளை ஆராய்ந்து யுத்த நிறுத்த மீறலை பதிவுசெய்யும் முறைமை இருக்கவில்லை. புலிகளின் 100 யுத்த நிறுத்த மீறல்களுக்கு சமனான ஒரு பாரிய யுத்த நிறுத்த மீறலை ஸ்ரீலங்கா இராணுவம் செய்த பல சந்தர்ப்பங்கள் உள்ளன. ஆனால் , இன்று வரை புலிகளே மிகப் பெரும் எண்ணிக்கையில்  யுத்த நிறுத்த மீறல்களில் ஈடுபட்டு அத ன்  சீர் குலைவுக்கு காரணமாக இருந்ததாக ஊடக அறிக்கைகளிலும் ஆவணங்களிலும் குறிப்பிடப்படுகிறது.

ceasefire violationபுலிகளே  பேச்சுவார்த்தையிலிருந்து ஒரு தலைப்பட்சமாக விலகியதாகவும் ஐரோப்பிய ஒன்றியக் கண்காணிப்பாளர்களை வெளியேற்றியதாகவும் அதே ஊடகங்களினூடாக கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்டது. இவை யாவும் சர்வதேச அளவில் விடுதலைப்புலிகளுக்கெதிரான போரை பின்நாட்களில் நியாயப்படுத்த உதவியதுடன் சர்வதேச நாடுகளின் நேரடித் தலையீட்டினூடாக சிறிலங்காவின் இராணுவ நடவடிக்கையை நிறுத்துவதற்கான முயற்சிகளுக்கும் தடங்களை ஏற்படுத்தியது.

ஆனால் இதே ஊடகங்களில் 2006ல் முழுஅளவிலான போர் தொடங்கியவுடன் சர்வதேச ரீதியில் யுத்த பாதிப்புக்கள்  தொடர்பில் எந்த செய்திகளும் வெளிவரவில்லை. முள்ளிவாய்க்காலுக்கு ஒத்திகையாக வாகரையில் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு முதல் முள்ளிவாய்க்கால் இனவழிப்பு வரை  இந்த ஊடகங்களில் தமிழ் மக்களின் துன்பமும், துயரமும் இந்த ஊடகங்களால் வெளி உலகத்துக்கு காண்பிக்கப்படவில்லை. யுத்தத்தின் முன்னேற்றம் பற்றிய “யுத்த  செய்திகளையே”  கிரிக்கட் ஸ்கோர் போடுவதுபோல அடிக்கடி போட்டுக்கொண்டிருந்தர்கள்.

போர் நிறுத்தத்தை அடியொற்றிய சர்வதேச  ஊடக செயற்பாடுளுக்கும் யுத்தம் கடுமையாக நடைபெற்ற போது நடைபெற்ற ஊடக செயற்பாடுகளுக்கும் இடையில் மிகப் பெரிய  வேறுபாடு காணப்படுகின்றது.   போர் நிறுத்த காலத்தில் நோர்வே  அரசாங்கம் மற்றும் உப தலைமை நாடுகள்  மேற்குலக மற்றும் அமெரிக்க ஊடகங்கள் மூலம் அந்த செயற்பாடுகளை நேரடியாகவே வெளிக்கொண்டு வந்திருந்தன. ஆனால்,  யுத்த காலத்தில் அத்தகைய எந்த செயற்பாடுகளிலும் இந்த நாடுகள் ஈடுபடவில்லை.  இக்கட்டுரையில் முன்னர்  குறிப்பிட்டதுபோல் மேற்குலக ஊடகங்களின் பெரும்பாலான ஊடகவியலாளர்கள் இந்தியாவிலிருந்தே செயற்பட்டனர். அதனால் இந்திய ஊடக நண்பர்கள் அல்லது அங்குள்ள ஊடகங்கள் மூலமான கருத்துக்களின் ஆதிக்கத்துக்குட்பட்டிருந்தனர்.

இருந்தபோதிலும் 2009 ஜனவரிக்குப் பின்னர் மேற்குலக ஊடகங்களில் சிறிலங்காவின் இராணுவ நடவடிக்கை தொடர்பில் மெதுவாக செய்திகள் வெளிவரத் தொடங்கியிருந்தன. இதற்குக் காரணம் அங்குள்ள புலம்பெயர் தமிழர்கள்  யுத்தத்தை நிறுத்த வேண்டி மேற்கொண்ட  தொடர் போராட்டங்களேயாகும்.

ஆனால் மறுபுறத்தில் இந்திய ஊடகங்களில் இலங்கை போர் தொடர்பில் முற்றுமுழுதாக இருட்டடிப்பு செய்யப்பட்டதுடன் போரை நிறுத்துவதற்கான எந்தவொரு வெளியகத் தலையீடுகளும் ஏற்படாவண்ணம் செய்திகள் வெளியிடப்பட்டன.  இந்திய ஊடகங்களில் அக்காலப்பகுதியில் வெளிவந்த செய்திகளில் பொதுவாக கீழ்வரும் தன்மைகள் காணப்பட்டன:

1. போர் சம்பந்தமான எந்த தகவல்களையும் அளிக்கும் போது பயங்கரவாதத்திற்கெதிரான போராக விபரித்து புலிகளின் சில பயங்கரவாத செயற்பாடுகள் மீள நினைவுபடுத்தப்பட்டன.

2. போர் தொடர்பில் மக்கள் மத்தியில் ஒரு ஆவல் நிலை   அவர்களின் அறிக்கைகளுக்கூடாக ஏற்படுத்தப்பட்டன. அதாவது, ஸ்ரீ லங்கா இராணுவத்தின் ஒவ்வொரு யுத்த முன்னேற்றங்களும், சாதனைகளும் பரபரப்பு செய்திகளாக வெளியிடப்பட்டன.

3. புலிகளின் தலைமை போர்களத்தை விட்டு வெளியேறாத வகையில்  உளவியல் ரீதியான பரப்புரைகளும் மேற்கொள்ளப்பட்டன. அதாவது, புலிகளின் தலைமையின் ஆடம்பரவாழ்க்கை, பிரபாகரன் தப்பியோடிவிட்டார்,  மகள், மகன் வெளிநாட்டிற்கு ஓடிவிட்டனர். சாதாரண ஏழைப் பெற்றோரின் பிள்ளைகளே பலியாகின்றனர் என்பன போன்ற பல செய்திகள் வெளியிடப்பட்டன.

4. ஏப்ரல் முதல் மே வரை பிரபாகரனின் முடிவு என்ன என்ற ஒரு ஆவலை இந்திய மக்கள் மத்தியில் ஏற்படுத்துகின்ற விதமான எழுத்துக்களே அனேகமாக காணப்பட்டன.

5. போர் தொடர்பில் போரிடும் தரப்பில் அரசு தரப்பில் இருந்து  மூன்று போரிடம் (ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம) மட்டுமே கருத்துக்கள் பெறப்பட்டு யுத்தம் தொடர்ந்து நியாயப்படுத்தப்பட்டது.

6. போர் நடைபெற்றுக்கொண்டிருந்த போது போரின் பின் இந்தியா எந்தவகையில் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவேண்டும் என்றும் அதன்பின் தமிழர்களுக்கான தீர்வு காண்பதற்கு சிறிலங்காவுக்கு உதவவேண்டும் என்றும் தொடர்ந்து எழுதி வந்தன. இதன் அர்த்தம் போர் நிறுத்தப்படகூடாது என்பதே ஆகும்.

7. தமிழ்நாட்டுத் தமிழர்களின் போராட்டமோ, புலம்பெயர் தமிழர்களின் போராட்டமோ முழுமையாக இருட்டடிப்புச் செய்யப்பட்டன கொச்சைப்படுத்தப்பட்டன . மாறாக திமுகவினதும் கருணாநிதியினதும் அறிக்கைகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன.

8. சிறிலங்கா இராணுவத்தின் முக்கிய வெற்றிகளே  பிரதான இடங்களைப் பிடித்திருந்தன. மக்களின் அவலங்கள், வைத்தியசாலை தாக்கப்பட்டமை, பல நூற்றுக்கணக்கானவர்கள் இறந்தமை போன்றனவை முக்கியம் அற்ற செய்திகளாக உட்பக்கங்களில் பிரசுரிக்கப்பட்டன.

9. போர் தொடர்பிலான ஆசிரியர்கள் தலையங்கங்கள் மிகக் குறைந்தளவிலேயே வெளிவந்திருந்தன. வை கூட போரின் பின்னரான உதவிகள் பற்றியதாகவே பெரும்பாலும் அமைந்திருந்தன.

TOI

மறுபுறத்தில், இந்தியாவை தளமாக கொண்டு செயற்ப்பட்ட மேற்குலக ஊடகங்களின் அறிக்கைகளில் இந்திய ஊடகங்கள் மற்றும் அரசியல் சிந்தனைகளின் ஆதிக்கம் இருந்தாலும் ஸ்ரீ லங்கா அரசின் தனிக்கைகளையும்  தாண்டி போரின் அவலங்களையும் யுத்தத்தின் மூலம் நிலையான சமாதானத்தை அடைந்துவிட முடியாதென்பதையும் தொடர்ந்து வலியுறுத்தி யுத்த  நிறுத்தத்தை வலியுறுத்தின.  இரு தரப்பினரதும் யுத்த மீறல்களையும் நடுநிலையுடன் வெளிக்கொண்டுவந்திருந்தன. ஆனால், இத்தகைய செய்தி அறிக்கைகள் பெரும்பாலும் யுத்தநிறைவை அண்டிய மாதங்களான ஏப்ரல், மே மாதங்களிலேயே வெளி வந்திருந்தன.  இதன்காரணமாக , அந்த நாடுகளின்  மக்களிடத்திலும் அரசியல்வாதிகளிடத்திலும் போய்ச் சென்று போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான கால அவகாசத்தை அளித்திருக்கவில்லை. அத்துடன் , சிரியா , லிபியா, ஈராக்,  போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது யுத்தம் பற்றி இந்த நாடுகளின் ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் மிகவும் குறைவு என்பதுடன் அவையும் உட்பக்கங்களிலேயே பிரசுரிக்கப்பட்டிருந்தன.

வியட்நாம்போரை முடிவுக்குக்கொண்டுவர அமெரிக்க ஊடகங்களே காரணமாக இருந்தன.  ஈராக்கிலும் மத்திய கிழக்கிலும் இடம்பெற்ற யுத்தங்களின் மனிதப் பேரவலங்களை அல்ஜசிரா தனித்து  நின்று  வெளிக்கொண்டுவந்தது.  துரதிஸ்டவசமாக தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பு யுத்தத்தை வெளிக்கொண்டுவர அத்தகைய எந்த ஊடகங்கள் இல்லாமையும், தார்மீக அடிப்படையில் யுத்தத்தை நிறுத்தவேண்டி குரல் கொடுத்திருக்க வேண்டிய  இந்திய ஊடகங்களே துரதிஷ்டவசமாக யுத்தத்தை ஆதரித்து நின்றமையும்  எமக்கு அழிவை கொண்டுவந்தது.

யுத்தத்தை நிறுத்துமாறு விடாப்பிடியாக வலியுறுத்தா விட்டாலும் , எல்லா ஊடகங்களுமே தமிழர்களுக்கான தீர்வு  நிச்சயமாக வழங்கப்படவேண்டுமென்று தொடர்ந்து எழுதிவந்தன. இதன்  அதன் அர்த்தம் உலக நாடுகள், தமிழர்களுக்கான தீர்வு என்ற விடயத்தில் உறுதியாகவே இருக்கின்றன என்பதாகும்.  இதைச் செயற்படுத்தத் தவறியமையே மகிந்த ராஜபக்ஸவின் வீழ்ச்சிக்கு ஒரு காரணமாக இருந்தது. தமிழர்களுக்கு தீர்வு வழங்கப்படவேண்டும் என்ற உலக நாடுகளின் பொதுவான நிலைப்பாடு ஒருவகையில் எமது இன்றைய  பலமாக இருக்கிறது.  ஆனால், எமது அரசியல் தலைமைகளோ  அதை அடைவு வைப்பது  போன்று செயற்ப்பட்டு போட்டுடைத்து வருகின்றன.

தமிழ் மக்களுக்கு தீர்வு கொடுக்கவேண்டும் என்ற சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடு தானாக வந்ததல்ல. அது புலிகளின் போராட்டத்தால் ஏற்படுத்தப்பட்ட ஒன்று. இதற்கு செல்வநாயகத்தின் அறவழி போராட்டமோ, சுமந்திரனின் மென்வலு ராஜதந்திரமோ அல்லது சம்பந்தனின் எதிர்க்கட்சி பதவியுமோ காரணம் அல்ல.

தற்போதைய காலம் அனைவரும் ஒன்றிணைந்து இலக்கு நோக்கி பயணிக்க வேண்டிய காலமாகும். எதிரியானவன் நாம் எமது இலக்கை நோக்கி பயணிப்பதிலிருந்து திசைமாற்றிச் செல்வதற்கு ஊடகத்தையே தற்போது பயன்படுத்துகின்றான்.

எமது ஊடகவியலாளர்கள் ஒரு அரசியல்வாதியின் உரையையோ அல்லது இன்னொரு ஊடகத்திலிருந்து ஒன்றை மேற்கோள்காட்டி அளிக்கும்போது அது ஏன் சொல்லப்படுகிறது/எழுதப்படுகிறது, அதற்கு பின்னுள்ள நிகழ்ச்சி நிரல் என்ன என்பதை ஆராய்ந்து அதை மக்கள்  முன் வைக்கும் பொறுப்பை கொண்டிருக்கிறார்கள்.  அதிலும் இந்திய ஊடகங்களை மேற்கோள்காட்டி  எழுதும்போது மிக எச்சரிக்கையாக செயற்பட வேண்டும்.

இந்த கட்டுரையை எழுதிக்கொண்டு இருக்கம்போதே பொட்டம்மான் (விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பொறுப்பாளர்) உயிருடன் உள்ளார் என்ற தகவல் தமிழ் பத்திரிகைகளிலும் இணையத் தளங்களிலும் பரபரப்பாக பேசப்படுகிறது. இத்தகைய செய்திகளின் பின்னால் பல நோக்கங்கள் உள்ளன:

1. வடகிழக்கிலுள்ள இராணுவத்தைத் தொடர்ந்து வைத்திருப்பது

2. பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு ஈடாக மற்றொரு சட்டத்தை வேறு பெயரில் கொண்டு வருவது

3. விடுதலைப்புலிகள் மீதான தடையை தொடர்ந்து உலகளவில் தக்கவைத்துக்கொள்வதுடன் புலம்பெயர் தமிழ் செயற்பாட்டாளர்களை முடக்குவது.

4. தமிழ் நாட்டில் தமிழீழம் சார் நடவடிக்கைகளை தடுப்பது.

5. சிறையிலுள்ளவர்களை விடுவிப்பதற்கான முயற்சிகளுக்கு தடங்கள் ஏற்படுத்துவது

6. உச்சபட்ச தீர்வை நோக்கிச் சென்றால் , இத்தகைய பயங்கரவாதிகள் இருப்பதனால் நாடு பிளவுபடும் என்ற கோசத்தை எழுப்பி குறைந்தளவு அதிகாரங்களைக் கொண்ட தீர்வுக்கு தமிழ் தலைமைகளை இணங்கச்செய்வது.

இவ்வாறு பல நோக்கங்களை கருத்தில் கொண்டே இத்தகைய செய்திகள் திட்டமிட்டு தமிழ் மற்றும் சிங்கள மக்களை இலக்கு வேவீறு காரணங்களுடன் இலக்கு  வைத்து  பரப்பப்படுகின்றன . எமது ஊடகவியலாளர்கள் தமது பொறுப்பை உணர்ந்து செயற்படுவார்க்களா?