செய்திகள்

தமிழ் கூட்டமைப்பு அரசியல் காழ்ப்புணர்வுடன் செயற்படுகிறது: டக்ளஸ் குற்றச்சாட்டு

அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மக்கள் நலன்சார்ந்த எமது செயற்பாடுகளை முடக்கும் நோக்குடனேயே திட்டமிட்டு செயற்பட்டு வருவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா குற்றஞ்சாட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமையலுவலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற  கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுடனான கலந்துரையாடலின்போதே அவர் இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மக்கள் நலன்சார்ந்து நாம் முன்னெடுத்து வரும் அபிவிருத்தி மற்றும் வாழ்வாதார மேம்பாட்டு செயற்றிட்டங்களை முடக்கும் வகையில் திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றனர். இது அவர்களது எம்மீதான  அரசியல் காழ்ப்புணர்ச்சி என்பது தெளிவாகின்றது.

கடந்த காலங்களில் எமது மக்கள் நலன்சார்ந்த பல்வேறு அபிவிருத்தி செயற்றிட்டங்களை முன்னெடுத்திருக்கின்றோம். ஆனால் தேர்தல் காலங்களில் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் இதுவரையில் செய்து முடிக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் எவை என்று கேள்வி எழுப்பிய செயலாளர், கூட்டமைப்பினரின் கொள்கைகள் மற்றும் செயற்பாடுகள் மக்களுக்கு எதனையும் ஒருபோதும் பெற்றுக்கொடுக்க மாட்டாது என்றும் சுட்டிக்காட்டினார்.

அந்தவகையில் தமிழ் அரசியல் தலைமையில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டுமென்பதுடன், அதனூடாகவே எமது மக்களுக்கான பல்வேறுபட்ட  மக்கள் நலன்சார்ந்த வாழ்வாதார செயற்றிட்டங்கள் மற்றும் அபிவிருத்திகளை முன்னெடுக்க முடியுமென்பதே எமது நிலைப்பாடாகுமென்றும் தெரிவித்தார்.

எதிர்காலங்களில் நடைபெறவுள்ளதான தேர்தல்களில் எமது கட்சியின்  சின்னமான வீணைச்சின்னத்தில் போட்டியிடவே நாம் தீர்மானித்துள்ளோம்.

சிறுபான்மை மக்களது உரிமைகளும் அதிகாரங்களும் பாதுகாக்கப்பட வேண்டுமென்பதுடன்,  13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதில் ஆரம்பித்து படிப்படியாக மக்களுக்கான நீடித்த அரசியல் உரிமை உள்ளிட்ட ஏனைய உரிமைகளும் வென்றெடுக்கப்பட வேண்டுமென்பதே எமது   கட்சியின் நிலைப்பாடாகும்.

எனவே கட்சியின் நிலைப்பாட்டை உணர்ந்து கொண்டவர்களாக அனைவரும், அர்ப்பணிப்புடன் உழைக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.