செய்திகள்

தமிழ் மக்களுக்கு நடந்தது வேறு எந்த இனத்துக்கும் ஏற்படக்கூடாது : தண்டாயுதபாணி

இந்த நாட்டிலும் இந்த மாகாணத்திலும் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் மற்றொரு இனத்துக்கு ஏற்படக்கூடாது. இந்த விடயத்தில் நாங்கள் உறுதியாகவுள்ளோம் என கிழக்கு மாகாண கல்வி மற்றும் மீள்குடியேற்ற,புனர்வாழ்வு அமைச்சர் சி.தண்டாயுதபாணி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து கடந்த 30 வருடகாலமாக இடம்பெற்ற யுத்த காலத்தின்போது இடம்பெயர்ந்த சிங்கள மக்களுடனான சந்திப்பு  நேற்று  மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் டேபா மண்டபத்தில் நடைபெற்றது.

கிழக்கு மாகாணசபையின் ஆளுனர் ஒஸ்ரின் பெர்னாண்டோ தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட்,மாகாண கல்வி மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் சி.தண்டாயுதபாணி,மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்,மத்திய மீள்குடியேற்ற அமைச்சின் உதவி செயலாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,
இந்த நாட்டில் காணிகளை விட்டு துரத்தப்பட்ட,வெளியேற்றப்பட்ட அல்லது பல காரணங்களினால் வெளியேறிய மக்கள் என்றால் மிகமுக்கியமாக தமிழ் மக்களாகும்.போர் காரணமாகவும் வேறுபல காரணங்களினாலும் அதிகளவில் காணிகளை விட்டுவெளியேறிய மக்கள் தமிழ் மக்களாகும்.இவ்வாறான பிரச்சினைகள் காரணமாக பாதிக்கப்பட்ட தமிழ் இன்னும்கூட காணிகள் அற்ற நிலையிலேயே உள்ளனர். கிழக்கு மாகாணத்தில் கூட அவ்வாறான நிலையே இருந்துவருகின்றது.

இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.இந்த ஆட்சிமாற்றத்திற்கு பின்பாக சம்பூரை சேர்ந்த 825 குடும்பங்கள் தங்களது சொந்த காணிகளை விட்டு வெளியேற்றப்பட்டு நான்கு அகதி முகாம்களிலே தங்கியுள்ளனர்.கடந்த ஒன்பது வருடங்களாக இவ்வாறான கவலையளிக்ககூடிய சூழ்நிலையில் வாழ்ந்துகொண்டிருந்த மக்களுக்கு ஒரு ஆறுதலான செய்தி தற்போது கிடைத்துள்ளது.

818 ஏக்கர் காணிகளை இடம்பெயர்ந்த மக்களுக்கு திரும்ப வழங்கவுள்ளதாக ஆளுனர் அவர்கள் தெரிவித்தபோது அதற்காக போராடிய நாங்களும் அந்த மக்களும் நன்மையடைந்தோம்.அனைத்து காணிகளும் விடுவிக்கப்படாத நிலையில் முதல் கட்டமாக காணிகளை விடுத்தது பெரும் ஒரு விடயமாகும்.

இதுபோன்று கிழக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும் இந்த பிரச்சினைகள் உள்ளது.இந்த பிரச்சினைகள் படிப்படியாக தீர்க்கப்படவேண்டும்.எந்த இனத்தினை சேர்ந்தவர்கள் என்றாலும் சொந்த காணிகளில் இருந்து வெளியேறிய மக்கள் மீளக்குடியமரவேண்டும் என்ற கொள்கை எங்களிடம் உள்ளது.

நாங்கள் தமிழர் என்ற காரணத்தினாலோ,நாங்கள் பாதிக்கப்பட்டோம் என்ற காரணத்தினாலோ மற்றைய இனமும் பாதிக்கப்படவேண்டும் என்று நாங்கள் விரும்பவில்லை.பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிக்கப்படவேண்டும்.

இப்பகுதி மக்கள் இப்பகுதியில் இருந்து பல சம்பவங்களினால் இடம்பெயர்ந்து சென்றிருக்கலாம்.இம்மக்களின் நியாயத்தன்மையினை ஆராய்ந்து,அவர்கள் காணிகளை விட்டுச்சென்ற பின்புலத்தினை சரியா ஆராய்ந்து,நியாயமான காரணங்களின் அடிப்படையில் அவர்கள் காணிகளை விட்டுச்சென்றிருந்தால் அது தொடர்பில் பரிசீலிக்கவேண்டும்.

ஆனால் சில நோக்கங்களுக்காக காணிகளை விற்பனைசெய்துவிட்டுச்சென்ற பிரதேசங்களும் உள்ளது.தமது விரும்பத்துக்கு விற்பனைசெய்துவிட்டுச்சென்று பிறகு ஒரு நேரத்தில் வந்து தமது காணிகள் பறிக்கப்பட்டுவிட்டதாகவும் தாங்கள் விரட்டப்பட்டோம் என்று சொல்லும் பிரச்சினைகள் எழக்கூடாது.நீதியான முறையில் உண்ணமையாக பாதிக்கப்பட்ட மக்கள் கவனிக்கப்படவேண்டும்.

கிழக்கு மாகாணத்தினை பொறுத்தவரையில் அனைவரும் ஒற்றுமையுடன் வாழவேண்டும்.அனைத்து சமூகங்களும் இணைந்துவாழவேண்டும்.எந்த சமூகமும் மற்றைய சமூகத்தின் மீது ஏறிசவாரிசெய்ய எண்ணக்கூடாது.அவ்வாறு நினைத்தால் இந்த மாகாணத்தில் சமாதானம் வரமாட்டாது.

கிழக்கு மாகாணம் ஏனைய மாகாணங்களைப்போல் அல்லாமல்,மூன்று இனங்களும் ஓரளவுக்கு இணைந்துவாழுகின்ற மாகாணம்.ஓரளவுக்கு இணைந்துவாழும் மாகாணம்.எங்களுக்குள் பிணக்குகள் ஏற்பட்டால் நாங்கள் எதிலும் முன்னேறமுடியாத நிலையே ஏற்படும்.அந்த பிணக்குகள் மூலமே நாங்கள் அழிந்துசெல்வோம்.கடந்த கால வரலாறுகள் எமக்கு அந்த படிப்பினையை காட்டுகின்றது.

கடந்து சென்ற விடயங்களை மறந்து.ஒரு இனத்தினை மற்றவர்கள் மதிக்கவேண்டும்.ஒரு இனத்தினை நாங்கள் தூச்சிக்ககூடாது.குறிக்கப்பட்ட ஒரு இணத்தினை நாங்கள் ஒதுக்ககூடாது.கடந்த காலத்தில் அவ்வாறான சம்பவங்கள் நடந்துள்ளது.

இந்த நாட்டிலும் இந்த மாகாணத்திலும் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் இன்னும் ஒரு இனத்துக்கு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் நாங்கள் உறுதியாகவுள்ளோம்.நாங்கள் பாதிக்கப்பட்டுவிட்டோம் என்பதற்காக இன்னுமொரு இனம் பாதிக்கப்படவேண்டும் என்று நாங்கள் எண்ணமாட்டோம்.
மீள்குடியேற்றம் தேசிய அளவிலே பெரிய விடயங்கள் தீர்க்கப்படவேண்டியிருந்தாலும் மாகாண மட்டத்தில் ஆற்றக்கூடிய பணிகளை முன்னெடுப்போம்.

Thadayuthapani (1) Thadayuthapani (2) Thadayuthapani (4) Thadayuthapani (5) Thadayuthapani (6)