செய்திகள்

தமிழ் மக்கள் விழ விழ எழுந்து நிற்கின்றனர்: பொன் செல்வராசா

இந்த நாட்டில் 65 வருடங்களாக தமிழ் மக்கள் விழ, விழ எழுந்துகொண்டிருக்கின்றார்கள் என்றும் ஆயுதப்போராட்டம் மௌனித்த பின்னரும் அவர்கள் மீள எழுந்து நிற்கிறார்கள என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு துளசி மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார்.

‘நாங்கள் விழ, விழ எழும்புவோம் தடைகளை தாண்டி விடைகளை காண்போம்’ எனும் தொனிப்பொருளில் இந்த மே தினக் கூட்டம் நடைபெற்றது. இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

‘அன்று தந்தை செல்வா காட்டிய வழியில் 1949 களில் தமிழரசுக் கட்சி ஆரம்பித்தபோது அறவழிப் போராட்டத்தை தவிர, இந்த நாட்டில் வேறெந்த வழியும் இல்லை என்று இருந்த காலம் அது. அந்தக் காலத்தில் எமது தலைவர்கள் வடக்கில், கிழக்கில் மட்டுமல்ல, கொழும்பு நகருக்கு சென்று உண்ணாவிரதங்களையும் சாத்வீக போராட்டங்களையும் நடத்தினர்.

நாடாளுமன்ற கட்டடத்துக்கு முன்னாலேயே ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது. வடக்கு, கிழக்கில் வாழும் தமிழினம் மட்டுமல்லாது, மலையகத்தில் வாழும் தமிழினம் இவர்கள் எல்லோரையும் ஒன்றிணைத்தவர்களாக அன்று தந்தை செல்வாவின் தலைமையில் குரல் கொடுக்கப்பட்டது.

இந்த சாத்வீகப் போராட்டத்தினால் எந்தவொரு நன்மையையும் தமிழர்கள் அடையமாட்டார்கள் என்பதை உணர்ந்த தமிழ் இளைஞர்கள் தமிழர்களுக்கான சுதந்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக ஆயுதம் ஏந்தி போராடினார்கள். இந்த ஆயுதப் போராட்டம் 2009 இல் மௌனித்தாலும் கூட, அதன் பின்னரும் நாங்கள் எழும்பினோம். விழ, விழ எழும்பினோம்.

2009க்கு பின்னர் இந்த நாட்டில் தமிழர்களின் தலைவிதியை நிர்ணயிக்கக்கூடிய தலைவர்கள் யார் என்பதை 2010ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலிலே இந்த நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல, சர்வதேசத்துக்கும் எடுத்துக்காட்டிய பெருமை தமிழ் மக்களை சாரும்.

அது மட்டுமல்லாமல், 2012 இல் நடைபெற்ற கிழக்கு மாகாணசபை தேர்தல் மற்றும் வடக்கு, கிழக்கில் இருக்கின்ற உள்ளூராட்சிமன்றங்களின் தேர்தல், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற வடமாகாணசபை தேர்தல் இத்தனை தேர்தல்களில் எல்லாம் இந்த நாட்டில் வாழும் தமிழினத்தை ஒரு கட்டமைப்புக்குள் வைத்து ஒற்றுமையுடன் தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்கக்கூடிய ஒரு கட்சி இருப்பதாக இருந்தால் அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பதை உறுதி செய்ததும் தமிழ் மக்களே.

கடந்த ஜனவரி எட்டாம் திகதி ஏற்பட்ட ஆட்சி மாற்றம் இந்த நாட்டில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. 19ஆவது திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் 215 என்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தமிழருக்கு முன்னுரிமை இல்லாத அரசியல் சீர்திருத்தம் என்றாலும், இந்த நாட்டில் வாழும் முழு சமூகங்களை சாந்தியும் சமாதானத்துடனும் வாழ வைக்கக்கூடிய அரசியல் திருத்தச்சட்டம் என்பதை நாம் விளங்கியாகவேண்டும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, 18ஆவது திருத்தச்சட்டத்தை கொண்டுவந்து 17ஆவது திருத்தச்சட்டத்தை மழுங்கடிக்கச் செய்தார். புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 19ஆவது திருத்தச் சட்டமூலத்தை கொண்டுவந்து பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றியதன் மூலம் மீண்டும் அந்த 17ஆவது திருத்தச் சட்டமூலம் அமுலுக்கு வந்துள்ளது’ என்றார்.