செய்திகள்

தமிழ் , முஸ்லிம் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நான் பொறுப்பல்ல எல்லாம் என்னை மீறியே நடந்துள்ளன : மஹிந்த

தனது  ஆட்சியில்  தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு  நடந்த  அநீதிகளுக்கு தான் பொறுப்பல்லவெனவும் அவ்வாறான அநீதிகள் தன்னை மீறியே நடந்துள்ளதாகவும் இதற்கு மக்களிடையே மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இனி அது போன்று நடக்க விட மாட்டென எனவும் தெரிவித்துள்ளார்.
நாரஹேன்பிட்டியில் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் மஹிந்தவுக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் மெளலவிமார் , உள்ளூராட்சி சபை தலைவர்கள்  ,  உறுப்பினர்கள்  , அமைப்பாளர் கள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர். இதன்போது கடந்த காலத்தில் பொதுபலசேனா போன்ற இனவாத அமைப்புகளினால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட அநீதி குறித்து பலரும் கருத்துத் தெரிவித்தனர்.
இவ்வேளையில் உரையாற்றியுள்ள மஹிந்த தெரிவித்துள்ளதாவது:
கடந்த காலத்தில் முஸ்லிம்களுக்கு சில தவறுகள் இடம்பெற்றன. தமிழ் மக்களும் சில பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தனர். இவற்றுக்கு நான் பொறுப்பல்ல. நான் இனவாதியல்ல. தாம் விரும்பிய மதத்தை பின்பற்றி செயற்படும் சுதந்திரத்தை நானே பெற்றுக் கொடுத்தேன். கடந்த காலத்தில் நடந்த விடயங்கள் குறித்து கவலையடைகிறேன். இது தொடர்பில் நான் மன்னிப்பும் கேட்டிருக்கிறேன். எதிர்காலத்தில் இவ்வாறு சம்பவங்கள் நடைபெற இடமளிக்க மாட்டேன்.
என்னை சந்திக்க நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் முஸ்லிம்கள் மற்றும் தமிழ் மக்கள் நேரம் ஒதுக்குமாறு கூறி வருகின்றனர். அதன்படியே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. பொய்யான பிரசாரங்களுக்கு முஸ்லிம்கள் ஏமாறினார்கள். உண்மைநிலை அறிந்த பின்னர் அவர்கள் என்னை சந்திக்க வரத் தொடங்கியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.