செய்திகள்

தமிழ்- முஸ்லிம் மக்கள் ஒருவரை ஒருவர் புரிந்து செயற்பட வேண்டும் : ஹசன் அலி

” 30 வருட போராட்ட காலத்தில் இரண்டு இனங்களுக்குள்ளும் ஒரு கசப்புணர்வுகள் இருந்ததன் காரணமாக இரண்டு சமூகங்களும் ஒருவரது பகுதிக்கு மற்றவர் செல்லாமல் மனக்கசப்புற்றிருந்தார்கள். அந்நிலை இனிமேல் எவரிடமும் வரக்கூடாது. அதனை ஓரங்கட்டிவிட்டு இரண்டு சமூகமூம் ஒருவரை ஒருவர் புரிந்து செயற்பட முன்வர வேண்டும்” என்று பிரதி இராஜாங்க அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் நாயகமுமான ஹசன் அலி தெரிவித்தார்.

இன்று காலையில் மட்டக்களப்பில் உள்ள பல வைத்தியசாலைகளை பார்வையிட்டு அங்குள்ள குறைநிறைகளை கேட்டறியும் பொருட்டு பிரதி அமைச்சர் ஹசன் அலி உட்பட அவரது உயரதிகாரிகள் கொண்ட குழுவொன்று களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு விஜயமொன்றை மேற்கொண்டது. அங்கு நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு பிரதி இராஜாங்க அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இன்று கிழக்கு மாகாணத்திற்கு சகல அதிகாரங்களும் கொண்ட மாகாணசபையாக கிழக்கு மாகாணசபை திகழ வேண்டும் என்ற நோக்கத்திற்காக கிழக்கு மாகாணசபையில் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கியதாக ஒரு தேசிய அரசாங்கம் ஒன்றினை அமைத்திருக்கின்றோம். அதனூடாக அனைத்து வளங்களையும் பெற்றுக்கொள்ள அனைவரும் முன்வரவேண்டும்.

இலங்கையில் அனைத்து இனங்களுக்கும் அனைத்து அதிகாரங்களும் கிடைக்கவேண்டும் என்பதில் எமது சுகாதார அமைச்சர் உறுதியாக இருந்து செயற்பட்டு வருகின்றார். அதனொரு கட்டமே இந்த நாட்டிலே 13வது திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும் என்றும், அதனூடாக சிறுபான்மை இனம் அனைத்து அதிகாரங்களையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் அவர் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றார்.

மாகாணசபையின் கீழ் இயங்கும் அனைத்து வைத்தியசாலைகளும் முன்வைக்கும் ஒரு முக்கிய பிரச்சினை தங்களை மாகாணசபையின் கீழ் இருந்து விடுபடச்செய்து மத்திய அரசாங்கத்திற்குள் இணைப்பதற்கான வேலைத்திட்டங்களை செய்து தரவேண்டும் எனும் கோரிக்கையினை முன்வைக்கின்றார்கள்.

ஆனால் மத்திய அரசு மாகாணத்தின் கீழ் உள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கும் ஒழுங்கான வளங்களை பங்கீடு செய்திருக்குமானால் எந்தஒரு மாகாணசபையின் கீழ் உள்ள வைத்தியசாலைகளும் மத்திய அரசாங்கத்தில் சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க மாட்டார்கள் மாறாக மத்திய அரசு ஒழுங்கான வளங்களை பங்கீடு செய்யாமையே இதற்கு முழுக்காரணமாகும்.

எதிர்வரும் காலத்தில் இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காகவே 100 நாள் வேலைத்திட்டத்தினை மையமாக வைத்து அமைச்சரின் வேண்டுதல்களுக்கு ஏற்ப அனைத்து கிழக்கு மாகாணங்களிலும் உள்ள வைத்தியசாலைகளுக்கு சென்று பிரச்சினைகளை ஆராய்ந்து அமைச்சரிடம் கோரிக்கைகளை முன்வைக்க இருக்கின்றேன்.

அதனொரு கட்டமாக அண்மையில் அம்பாறையில் உள்ள 17 வைத்தியசாலைகளுக்குச் சென்று அங்கு உள்ள வைத்தியசாலைகளின் பிரச்சினைகளை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கின்றேன்.

30 வருட போராட்ட காலத்தில் இரண்டு இனங்களுக்குள்ளும் ஒரு கசப்புணர்வுகள் இருந்ததன் காரணமாக இரண்டு சமூகங்களும் முஸ்லிம்கள் தமிழர் பிரதேசங்களுக்குச் செல்லாமலும், தமிழர்கள் முஸ்லிம் பிரதேசங்களுக்குச் செல்வதிலும் மனக்கசப்புற்றிருந்தார்கள். அந்நிலை இனிமேல் எவரிடமும் வரக்கூடாது. அதனை ஓரங்கட்டிவிட்டு இரண்டு சமூகமூம் ஒருவரை ஒருவர் புரிந்து செயற்பட முன்வர வேண்டும்.

வடகிழக்கு மாகாணம் தமிழ், முஸ்லிம் சமூகத்தினது தாயகம் இக்கோட்பாட்டினை அடிப்படையாக வைத்துத்தான் முஸ்லிம் காங்கிரசும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் வாதிகளும் தங்களது அரசியல் சிந்தனைகள் மூலம் செயற்பட்டு வருகின்றார்கள்.

இதற்கான அனைத்து வேலைப்பாடுகளையும் எமது இரண்டு இனங்களும் ஒன்று சேர்ந்து பழைய மனக்கசப்புக்களை மறந்து எமது மக்களுடைய பிரச்சினைகளுக்கு அனைவரும் ஒன்று சேர்ந்து அதிகாரங்களை பகிர்ந்து எமது மக்களின் குறைகளை போக்க உழைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

IMG_0006 IMG_0008 IMG_0015 IMG_0028 IMG_0032 IMG_0040