செய்திகள்

தமிழ் மொழியில் தேசிய கீதம்: பாராளுமன்றத்திலும் காராசாரமான விவாதம்

தேசிய கீதத்தை தமிழில் பாடுவது தொடர்பில் தேசிய நிறைவேற்று சபையில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் பாராளுமன்றத்தில் சர்ச்சை ஏற்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. ஜே. வி. பி கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றிய ஐ. ம. சு. மு அம்பாறை மாவட்ட எம். பி. சரத் வீரசேகர, தேசிய நிறைவேற்று சபையில் தமிழில் தேசிய கீதம் பாடப்படவேண்டும் என மனோ கணேசன் முன்மொழிந்திருப்பதை கண்டிப்பதாகக் கூறினார்.

தமிழில் தேசிய கீதம் பாடப்படுவதானது அரசியலமைப்பை மீறும் செயல். சிங்கள மொழியில் மாத்திரமே தேசிய கீதம் பாடப்பட வேண்டும்.

தமிழில் தேசிய கீதம் பாடப்படவேண்டும் என்ற தீர்மானம் தடை செய்யப்படவேண்டும். தேசத் துரோகிகள் மற்றும் தமிழ் இனவாதிக ளின் கோரிக்கைக்கு அடிபணிந்து தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவதற்கு அனுமதிக்கக்கூடாது.

இந்தியாவில் ஒரு மொழியில் மாத்திரமே தேசிய கீதம், பாடப்படுகிறது. முடிந்தால் தமிழ் நாட்டில் உள்ளவர்களை இணைத்துக் கொண்டு இந்திய தேசிய கீதத்தை தமிழில் பாடவேண்டும் என்ற கோரிக்கையை நரேந்திர மோடியிடம் முன்வைக்க முடியுமா என மனோ கணேசனிடம் சவால் விடுப்பதாக சரத் வீரசேகர கூறினார்.

இதன்போது ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்பி குறுக்கிட்ட ஜே. வி. பி எம். பி, இலங்கையின் அரசியலமைப்பில் தமிழ் மொழியில் தேசிய கீதம் தமிழில் எழுதப்பட்டுள்ளது. அரசியலமைப்பில் உள்ளதை தடை செய்யுமாறு எவராலும் கூற முடியாது. அரசியலமைப்புக்கு அமைய தமிழிலும் தேசிய கீதத்தை பாடமுடியும் என்றார்.

இதற்கு ஆதரவாக வாசுதேவ நாணயக்காரவும் குரல் எழுப்பினார். அதேநேரம் தினேஷ் குணவர்த்தன, சரத் வீரசேகரவின் கருத்துக்கு ஆதரவாக குரல் எழுப்பியதைத் தொடர்ந்து சபையில் கடும் வாதப் பிரதிவாதம் இடம்பெற்றது. முன்னாள் அமைச்சர் டிலான் பெரேராவும் தேசிய கீதம் தமிழில் பாடப்படலாம் என்ற கருத்துக்கு ஆதரவாகக் குரல் எழுப்பினார். பதுளையில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக தமிழ் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதாக டிலான் பெரேராவை பார்த்து சரத் வீரசேகர கூறினார்.

இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த வாசுதேவ நாணயக்கார இலங்கையின் அரசியலமைப்பின் தமிழ் மொழியில் தேசிய கீதம் எழுதப்பட்டுள்ளது.

“நமோ நமோ மாதா” என்பதற்கு பதிலாக தமிழில் “நமோ நமோ தாயே” என்று எழுதப்பட்டுள்ளது. ஒரே அர்த்தத்தில் தேசிய கீதம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஒரே அர்த்தத்தில் ஒரே சத்தத்தில் தேசிய கீதத்தை தமிழ் மொழியிலும் பாட முடியும். சிங்கள மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படும் போது தமிழ் மக்கள் அதனை தமிழ் மொழியில் இசைக்க முடியும்.

தேசிய நிகழ்வுகளில் தேசிய கீதம் சிங்கள மொழியில் இசைக்கப்பட்டாலும், தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் தமிழ் மொழியில் இசைக்கப்படலாம். இல்லாவிட்டால் தாம் புறக்கணிக்கப்பட்டு விட்டதாக தமிழர்கள் நினைத்து விடுவார்கள். இரண்டு இனங்களுக்குமிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாயின் தேசிய கீதத்தை சிங்கள மொழியிலும் தமிழ் மொழியிலும் கலந்துபாடுவது சிறப்பானதாக அமையும் என்பதே தனது நிலைப்பாடு என்றும் வாசு தேவநாணயக்கார கூறினார்.

இருந்த போதும் தேசிய கீதம் தமிழ் மொழியில் இசைக்கப்படுவதை ஏற்க முடியாது என சரத் வீரசேகர தொடர்ந்தும் கூறினார். பிரதியமைச்சர் ஹசன் அலி, யோகராஜன் எம்.பி. ஆகியோரும் சரத் வீரசேகரவின் கூற்றுக்கு எதிராக குரல் எழுப்பியிருந்தனர்.