செய்திகள்

தரப்படுத்தலில் மட்டக்களப்பு மாவட்டம் 17 ஆம் இடத்தில்

கல்வி பொது சாதாரண தர பரீட்சையின் முடிவுகளின் அடிப்படையில் தரப்படுத்தலில் மட்டக்களப்பு மாவட்டம் 17 ஆம் இடத்தில் உள்ளது என மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் தெரிவித்தார்.

 மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலையில் நவீன கற்கை நிலையம் நேற்று புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது .

 மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலையில் பழைய மாணவ சங்கத்தின் ஏற்பாட்டில் சங்கத்தின் தலைவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்தியர் கே . டி . சுந்தரேசன் தலைமையில் நவீன கற்கை நிலையம் இன்று காலை பாடசாலையில் திறந்து வைக்கப்பட்டது .

 இந்த நவீன கற்கை நிலையத்தை கல்லடி இராமகிருஷ்ண மிஷன் வணக்கத்துக்குரிய ஸ்ரீமத் சுவாமி பிரபு பிரேமானந்தாஜி மகராஜ் கலந்துகொண்டு திறந்து வைத்து ஆசியுரை வழங்கினார் .

 இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு வலயக் கல்விப்பணிப்பாளர் கே .பாஸ்கரன் , பாடசாலை அதிபர் கே . மனோராஜ் சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்தியர் என் .தமிழ்வாணன் ,வைத்தியர் .வி . விவேகானந்தராஜா ஆகியோர் கலந்துகொண்டனர் .

 இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய மட்டக்களப்பு வலயக் கல்விப்பணிப்பாளர் தெரிவிக்கையில்,

 இன்றைய நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் கல்வியில் பின்தங்கிய நிலையில் இருக்கின்றது .குறிப்பாக எழுத்தறிவில் மட்டக்களப்பு மாவட்டம் பின்தங்கிய நிலையில் இருப்பதாக ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன .

 கடந்த 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்வி பொது சாதாரண தர பரீட்சையின் முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன .பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் மாவட்டம் தரப்படுத்தலில் மட்டக்களப்பு மாவட்டம் 17 ஆம் இடத்தில் உள்ளது.

 மட்டக்களப்பு வலயத்தை பொறுத்தமட்டில் சில மாற்றங்கள் இருந்த போதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தமட்டில் கல்வி பின்தங்கிய நிலை காணப்படுகின்றது .இது கவலைக்குரிய விடயமாகும் .இந்நிலை மாற்றப்பட வேண்டும் ,எனவே இவ்வாறான நவீன கற்கை நிலையங்கள் மாணவர்களுக்கு அவசியம் என்பதனை இந்நிகழ்வின் போது தெரிவித்தார் .

 இந்நிகழ்வினை தொடர்ந்து கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலைக்கும் மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலைக்கும் இடையில் தற்போதைய தகவல் தொழில் நுட்பம் மாணவர்களுக்கு சாதகமா அல்லது பாதகமா என்ற தலைப்பில் விவாத போட்டி நிகழ்வுகள் பாடசாலை பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது .

 இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் பழைய மாணவ சங்க உறுப்பினர்கள், பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள் மற்றும் மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலை ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்துகொண்டனர் .DSC_0763 DSC_0778 DSC_0811

n10