செய்திகள்

தலைக்கவசத்தை தடைசெய்தால் முறைக்கேடுகளில் ஈடுபட்டவர்களுக்கு ஆபத்து

முகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசத்தை தடைசெய்தால் கடந்த அரசாங்கத்தில் இருந்த திருடர்களுக்கே பெரும் பாதிப்பு ஏற்படும் என்று சமூகசேவைகள் மற்றும் நலன்புரி அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்.

மிஹிந்தலை பிரதேச செயலாளர் காரியாலயத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மிஹிந்தலையில் உள்ள சிறுநீரக நோயாளருக்கு 3 ஆயிரம் ரூபாய் நிதியுதவியை வழங்கி வைக்கும் வைபவத்தில் கலந்துகொண்ட உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் –

கடந்த அரசாங்கத்தில் இருந்த அரசியல்வாதிகளில் சிலருக்கு, தற்போது கிராமங்களுக்கு செல்ல முடியாது. முழுமையாக முகத்தை மறைக்கும் தலைக்கவசத்தை அணிந்துகொண்டு செல்வதுதான் நல்ல முறைமையாக அவர்களுக்கு இருந்தது. இந்நிலையில், முகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசத்துக்கு தடைவிதிக்குமாறு கோருகின்றனர். அவ்வாறு தடைவிதித்தால் அது அவர்களுக்கே ஆபத்தானதாகும்.

கடந்த அரசாங்கத்தில் இருந்த திருடர்கள், மோசடிகாரர்கள் மற்றும் ஊழல், மோசடி, முறைக்கேடுகளில் ஈடுபட்டவர்களுக்கு பெரும் ஆபத்தானதாகும். அவ்வாறானவர்களை மக்கள் வெறுத்துவிட்டனர்.

இந்நிலையில் முகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசத்துக்கு தடைவிதித்தால் அது அவர்களுக்கு இழைக்கின்ற பாரிய அநியாயமாகும். ஆகையால், முகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசத்துக்கு தடைவிதிப்பதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம் என்றார்.