செய்திகள்

தவக்காலம் கடவுளுடன் உறவைப் புதுப்பித்தல் காலம்

தவக்காலம் கடவுளின் அருள்தரும் காலம் தவக்காலம் கடவுளுடன் உறவைப் புதுப்பித்தல் காலம்

18.02.2015 அன்று விபூதிப்புதன் உடன் இவ்வாண்டுக்கான தவக்காலம் கிறிஸ்தவர்களுக்குக் குறிப்பாகக் கத்தோலிக்கருக்கு ஆரம்பமாகிவிட்டது. “நீ மண்ணாய் இருக்கிறாய். நீ மண்ணுக்கே திரும்புவாய்” என்னும் தொடக்க நூல் வசனத்தைக் கூறி மனிதனின் பூரணத்துவத்தைக் குறிக்கும் இடமென்னும் நெற்றியில் சாம்பல் கொண்டு சிலுவை அடையாளத்தை வரைந்து இறையாசி வழங்கும் விபூதிப் புதன் (சாம்பல் புதன்) வழிபாடுகளுடன் தவக்காலம் தொடங்கப்பெற்றுவிடும். இரஸ்யா முதல் எகிப்து வழி கேரளா வரை உள்ள கீழைத்தேயத்திருச்சபையினர் விபூதிப்புதனுக்கு முன்வரும் திங்கள் கிழமையினை சுத்தமான திங்கள் என்றழைத்து அன்றே தங்களுக்கான தவக்காலத்தைத் தொடங்குவர். தவம் இந்தியப் பண்பாட்டு மரபில் சைவ வைணவ சமண பௌத்தங்களில் மட்டுமல்லாது உலகில் உள்ள தொன்மையான யூதமரபிலும் அதன் தொடர்ச்சியான கிறிஸ்தவ இஸ்லாமிய மரபிலும் நோன்புக்காலம் என்னும் பெயரில் தவமுயற்சிகள் முக்கியத்துவம் பெறுகின்றது.

Ash Wednesday-2கத்தோலிக்க மரபில் தவக்காலம் (LENT) என்றால் என்ன?

கத்தோலிக்க மரபில் தோன்றி கிறிஸ்தவர்களில் பெரும்பாலனவர்களுக்குப் பொதுவாக உள்ள தவக்காலம் என்றால் என்ன? விபூதிப் புதன் முதல் உயிர்த்தஞாயிறு வரையிலான 46 நாட்கள் (ஆறுஞாயிறுகள் நீங்கலாக) செபம், தவம், தவிர்ப்பு, பிராயசித்தம் செய்தல் என்பனவற்றுக்கான நாட்களாக உலகெங்கும் உள்ள கிறிஸ்வதர்களால் முன்னெடுக்கப்படும். இயேசு பெருமான் தன்பொதுப்பணியினைத் தொடங்குமுன்னர் நாற்பது நாட்கள் பாலைவனத்தில் தவமியற்றியதையும், அலகையினால் சோதிக்கப்பட்டு அதனை அகன்று போகுமாறு பணித்ததையும் நினைவு கூறும் நிகழ்வாக இந்த 40 நாட்கள் தவக்காலமாகப் பின்பற்றப்படுகிறது. கடவுளைச் சார்பதற்கான உளமாற்றத்திற்கும் எவ்வுயிர்க்கும் தீங்கு செய்யாது வாழ்வதற்கான ஐம்புலக்கட்டுப்பாட்டுக்குமான ஒரு காலமாக இக்காலம் கருதப்படுகிறது.

இவ்வாறு உள்ளமும் உடலும் கடவுளுடன் ஒன்றித்து வாழ்வதற்காக இறைதுணை வேண்டிச் செபித்தல் தவம் செய்தல் தேவையற்ற நுகர்வுத் தவிர்ப்புக்களைச் செய்தல், உள்ளதைப் பகிர்தல் என்பன தவக்காலத்தின் நோக்காக அமையும். செபம் தபம் தானம் என்று சுருக்கமாகத் தவக்கால நோக்கினைக் கூறலாம். இயேசு பெருமான் தனது மக்கள் பணிகளைத் தொடங்குவதற்கு முன்னர் 40 நாட்கள் வனாந்தரத்தில் தவமியற்றிய முன்னுதாரணத்தைப் பின்பற்றியே 40 நாட்கள் தவக்காலம் என்கிற காலஅமைவு ஏற்படுத்தப்பட்டது என்பர்.

Ash Wednesday-4இயேசுவின் கடவுள்தன்மை வெளிப்பட்ட முதல் நிகழ்வு

பெத்லேகமில் பிறந்த இயேசுபெருமான் குழந்தையாக ஏரோது அரசனின் இனஅழிப்புக்குள்ளாகாதவாறு யோசப் மேரி இருவராலும் அகதியாக எகிப்துக்குக் கொண்டு செல்லப்பட்டதன் பின், ஏரோது இறந்ததின் பின் மீளவும் தன் தாயகமான இஸ்ரேலுக்கு மீண்ட பொழுது யூதேயாவில் அர்க்கெலா தன் தந்தைக்குப் பின் அரசாள்கிறான் என அறிந்து அங்கு செல்லாது கலிலேயாப் பகுதிகளுக்கு வந்து நசரேத்தில் வாழ்ந்தார். இதனால் நசரேயனாகிய இயேசு என வரலாற்றுப் பெயர் பெற்ற இயேசு யோர்தானின் பாலைவனப் பகுதிகளை அண்மித்த யோர்தான் ஆற்று நீரால் மக்களுக்குத் திருமுழுக்கு அளித்து “ மனம் மாறுங்கள் ஏனெனில் விண்ணரசு நெருங்கி விட்டது” என்று பறைசாற்றிக்கொண்டிருந்த ஒட்டகமுடியிலான ஆடைதரித்து வார்க்கச்சையை இடையில் கட்டி வெட்டுக்கிளிகளையும் காட்டுத்தேனையும் உண்டு வந்த முனிவரான யோவானிடம் தானும் திருமுழுக்குப் பெற வந்தார். இயேசு திருமுழுக்குப் பெற வருவதைக் கண்ட யோவான் “ நான்தான் உம்மிடம் திருமுழுக்குப் பெற வேண்டியவர். நீரா என்னிடம் வருகின்றீர்?” என்று கூறித் தடுத்தார். இயேசு “ இப்பொழுது விட்டுவிடும். கடவுளுக்கு ஏற்புடையவை அனைத்தையும் நாம் நிறைவேற்றுவது தான் முறைமை” என்று பதிலளித்தார். அதற்கு யோவானும் இணங்கினார். இயேசு திருமுழுக்குப் பெற்றவுடனே தண்ணீரை விட்டு வெளியேறினார். உடனே வானம் திறந்ததையும் கடவுளின் ஆவி புறாவடிவில் இறங்குவது போலத் தம்மீது வருவதையும் அவர் கண்டார். அப்பொழுது “என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்” என்று வானத்திலிருந்து குரல் கேட்டது. இதுவே இயேசுவின் கடவுள் தன்மை உறுதிப்படுத்தப்பட்ட முதல் நிகழ்வு.

Ash Wednesday-6அலகையை வெல்வதற்கான பலம்தருவது தவம்

அதன் பின் இயேசு அலகையால் சோதிக்கப்படுவதற்காகப் பாலைவனத்திற்குத் தூயஆவியால் அழைத்துச் செல்லப்பட்டார். அவர் நாற்பது நாள் இரவும் பகலும் நோன்பிருந்தார். அதன் பின் பசியுற்றார்.
உடற்பலவீனத்தைக் கொண்டு உள்ளத்தைப் பலவீனப்படுத்த முயல்தல்
சோதிக்கிறவன் அவரை அணுகி “ நீர் இறைமகன் என்றால் இற்தக் கற்கள் அப்பமாகும்படி கட்டளையிடும்.” என்றான். அவர் மறுமொழியாக “ ‘மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வார்’ என மறைநூலில் எழுதியுள்ளதே” என்றார்.

ஆற்றலின் வலிமையைக் கொண்டு ஆற்றலை அழிக்க முயல்தல்

பின்னர் அலகை அவரை எருசலேம் திருநகரத்திற்குக் கூட்டிச் சென்றது. கோயிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி “நீர் இறைமகன் என்றால் கீழே குதியும். கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார். உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக் கொள்வார்கள்” என்று அலகை அவரிடம் சொன்னது.

இயேசு அதனிடம் “ உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம் எனவும் எழுதியுள்ளதே என்று சொன்னார்.

Ash Wednesday-7அதிகாரம் அளிப்பதாக ஆசைகாட்டி சரணாகதியடைய வைத்து வெல்லமுயல்தல்

மறுபடியும் அலகை அவரை ஒரு மிக உயர்ந்த மலைக்குக் கூட்டிச் சென்று உலக அரசுக்கள் அனைத்தையும் அவற்றின் மேன்மையையும் அவருக்குக் காட்டி அவரிடம் “ நீர் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து என்னை வணங்கினால், வையகம் அனைத்தையும் உமக்குத் தருவேன்” என்றது. அப்பொழுது இயேசு அதனைப் பார்த்து அகன்று போ சாத்தானே, உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவர்க்கே பணி செய்” என்றும் மறைநூலில் எழுதியுள்ளதே என்றார். பின்னர் அலகை அவரை விட்டகன்றது. உடனே வானதூதர்கள்; வந்து அவருக்குப் பணிவிடை செய்தனர்.

  தவத்தின் பயன் சாவின் நிழல் சூழ்ந்த நாடுகளில் பேரொளி

இயேசு 40 நாட்கள் நோன்பிருக்கையில் யோவான கைது செய்யப்பட்டார். இதனை .இயேசு கேள்விப்பட்டுக் கலிலேயாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். அவர் நசரேத்தை விட்டகன்று செபுலோன், நப்தலி ஆகிய இடங்களின் எல்லையில் கடலோரமாய் அமைந்திருந்த கப்பர்நாகுமுக்குச் சென்று கூடியிருந்தார். இறைவாக்கினர் எசயா உரைத்த பின்வரும் வாக்கு இவ்வாறு நிறைவேறியது :
“செபுலோன் நாடே! நப்தலி நாடே! பெருங்கடல் வழிப்பகுதியே! யோர்தானுக்கு அப்பாலுள்ள நிலப்பரப்பே! பிற இனத்தவர் வாழும் கலிலேயாப் பகுதியே! காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள் சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர் மேல் சுடரொளி உதித்துள்ளது”.

Ash Wednesday-3அது முதல் இயேசு மனம் மாறுங்கள். ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது.” எனப் பறைசாற்றத் தொடங்கினார். கடலோரமாய் நடந்து முதல் சீடர்களான சீமோன் ஐயும் அவரது சகோதரரான அந்திரேயாவையும் தன் பணியில் இணைத்துக்கொண்டார். பின்னர் கலிலேயாப்பகுதி முழுவதும் சுற்றிப்பணிசெய்தார். சிரியா நாடு முழுவதிலும் அவர் பெயர் பரவியதால் தெக்கப்பொலி, எருசலேம், யூதேயா போன்ற நாடுகளில் இருந்தும் யோர்தான் நதிக்கு அக்கரைப்பகுதிகளிலிருந்தும் வந்த பெருந்தொகையான மக்கள் உளஉடல்நலங்களைப் பெற்றனர். பின்னர் ஒன்பது முறை பேறுபெற்றவர்கள் என்ற சொல்லாட்சியைக் கூறிய மலைப்பொழிவையும் மக்களுக்குச் செய்தருளினார். இயேசுவின் வாழ்வில் நிகழ்ந்த இந்த வரலாற்று நிகழ்வுகள் தவம் .இறைவனுக்காகவும் மானிடத்திற்காகவும் பணி செய்தலுக்கான அடித்தளமாகவும் அருட்தளமாகவும் உள்ளது என்பதை வலியுறுத்துவதால் கிறிஸ்தவர்களுக்கும் 40 நாள் தவக்காலம் இவ்வுலக வாழ்வுக்கும் அவ்வுலகவாழ்வுக்கும் இன்றியமையாதனவாகின்றன.