செய்திகள்

தவறு செய்தவர்கள் பாரபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டும்: டக்ளஸ்

தவறு செய்தவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது பாரபட்சமின்றி விசாரணைகள் நடாத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டுமென்பதே எமது நிலைப்பாடாகுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஐ.நாவில் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை அறிக்கை பின்போடுவது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற சகல அரசியல் படுகொலைகளும் விசாரணை செய்யப்பட வேண்டும்.

அந்தவகையில் தவறுகள் செய்தவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது பாரபட்சமின்றி விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென்பதுடன் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென்பதே எமது நிலைப்பாடாகும்.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர்களான தியாகராசா மகேஸ்வரன், ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளே, லக்ஸ்மன் கதிர்காமர், பாராளுமன்ற உறுப்பினர்களான அம்பாறை சந்திரநேரு, திருமலை தங்கத்துரை, நீலன் திருச்செல்வம், தமிழ்க் காங்கிரஸ் தலைவர் குமார் பொன்னம்பலம், ஈ.பி.ஆர்.எல.எப் உறுப்பினரும், இலங்கை சமாதான செயலகத்தின் உத்தியோகத்தருமான லோகநாதன் கேதீஸ்வரன், பத்திரிகையாளர்களான அற்புதராஜா நடராஜா பா.உ, பாலநடராஜா ஐயர், தராகி சிவராம், நிமல்ராஜன், ஈ.பி.ஆர்.எல.எப், நாபா அணியின் தலைவர் சுபத்திரன், மனித உரிமைகள் சட்டத்தரணி மகேஸ்வரி வேலாயுதம் உள்ளிட்ட ஏனையோரது கொலைகள் தொடர்பிலும் பாரபட்சமின்றிய விசாரணைகள் நடாத்தப்படல் வேண்டும்.

ஐ.நாவின் மனித உரிமைகள் பேரவையினால் மார்ச் மாதம் அறிக்கை சமர்ப்பிக்கப்படவிருந்த நிலையில் தற்போது ஆறுமாதகாலத்திற்கு பின்போடப்பட்டுள்ள நிலையில் கருத்துத் தெரிவித்த செயலாளர் நாயகம் அவர்கள் இதுவிடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களை கூறிவருகின்றமை மட்டுமல்லாது ஐ.நாவின் அறிக்கையை பின்போடும் இந்தக் கூற்றை கூட்டமைப்புக்குள்ளேயே சிலர் ஆதரித்தும் எதிர்த்தும் வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

அதுமட்டுமன்றி கூட்டமைப்பினர் புதிய அரசுடன் பேசி பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியுமென்று கூறினார்கள்.

ஆனாலும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் இதுவரையில் அவர்களால் எவ்விதமான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடிந்துள்ளது என்றும் தெரிவித்தார்.

அத்துடன் கடந்தகாலங்களில் எமது மக்கள் எதிர்கொண்ட அழிவுகளுக்கும் இழப்புகளுக்கும் கூட்டமைப்பினரே பொறுப்பு கூற வேண்டியவர்களாக உள்ளனர் என்றும் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே பிரச்சினைகளை தீர்ப்பதற்கு புதியதொரு சூழலை உருவாக்கி அதற்கான அணுகுமுறைகளையும் கொண்டிருக்க வேண்டும்.

இந்நிலையில் தான் எமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியது அவசியமானது. கடந்த காலங்களில் கிடைக்கப் பெற்ற பல்வேறு சந்தர்ப்பங்களை கூட்டமைப்பினர் சரிவர பயன்படுத்தவில்லையென்றும் புதிய அரசுடனும் முன்னுக்கு பின் முரண்பட்ட கருத்துக்களையும் கூறியும் வருகின்றனர்.

அந்தவகையில் தென்ஆபிரிக்காவைப் போன்ற உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவொன்றை அமைத்து அதனூடாக பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டுமென்றும் சுட்டிக்காட்டினார்.