செய்திகள்

தஸ்கின் அகமது, அரபாத் சன்னி சர்வதேச போட்டியில் பந்துவீச ஐ.சி.சி. தடை: நெருக்கடியில் வங்காளதேச அணி

வங்காளதேச வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அகமது, ஸ்பின்னர் அரபாத் சன்னி ஆகிய இருவரும் விதிமுறைகளுக்கு மாறாக பந்து வீசுவதாக நிரூப்பிக்கப்பட்டதை அடுத்து சர்வதேச போட்டியில் அவர்கள் பந்து வீச ஐ.சி.சி. தடை விதித்துள்ளது.

கடந்த 9-ம் தேதி நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் வங்காளதேசம் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் நடுவராக பணியாற்றிய ஆண்டி பைக்ரோவ்ட் ஐ.சி.சி.-க்கு அனுப்பியுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், வங்காளதேச வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அகமது, ஸ்பின்னர் அரபாத் சன்னி பந்து வீச்சில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார்.

இதனை அடுத்து இருவரையும் சென்னையில் உள்ள தனியார் ஆய்வகத்தில் பந்து வீசவைத்து சோதனை நடத்தப்பட்டது. இதில் தஸ்கின் அகமதும், அரபாத் சன்னியும் ஐ.சி.சி. விதி முறைகளுக்கு மாறாக முறையற்ற வகையில் பந்து வீசுவது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து தஸ்கின் அகமது, அரபாத் சன்னி சர்வதேச போட்டிகளில் பந்து வீசுவதற்கு ஐ.சி.சி. தடை விதித்துள்ளது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வருகிறது.

தங்கள் பந்து வீச்சில் மாற்றம் செய்து அதை சோதனை மூலம் நிரூபிக்கும்பட்சத்தில் அவர்கள் மீதான தடை உடனடியாக நீக்கப்படும் என ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.

எனவே இனிவரும் டி20 உலக கோப்பை போட்டிகளில் அவர்களால் விளையாட முடியாது. விரைவில் மாற்று வீரர்களை வங்காளதேச கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்து அறிவிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

டி20 உலக கோப்பையின் முக்கிய கட்டத்தில் அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களான தஸ்கின் அகமது, அரபாத் சன்னிக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டிருப்பது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.