செய்திகள்

தாணு தயாரிப்பில் ரஜினியின் புதிய திரைப்படம்

லிங்கா படத்தையடுத்து நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய திரைப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க உள்ளார்.

இது குறித்த அறிவிப்பை தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சென்னையில் திங்கள்கிழமை வெளியிட்டது.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை அட்டகத்தி, மெட்ராஸ் ஆகிய படங்களை இயக்கிய பா.ரஞ்சித் எழுதி இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் முரளி ஜி ஒளிப்பதிவு செய்கிறார். கபிலன், உமாதேவி, கானா பாலா ஆகியோர் பாடல்களை எழுதுகிறார்கள்.

பிரவீன் படத்தொகுப்பில் ராமலிங்கம் கலை இயக்குநராகப் பணியாற்ற உள்ளார். ரூபனின் ஒளி வடிவமைப்பில் சதீஷ் நடன இயக்குநராகப் பணியாற்றுகிறார். கதாநாயகி உள்ளிட்ட பிற நடிகர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.

ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் மலேசியாவில் தொடங்கவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து, ஹாங்காங், சென்னை உள்ளிட்ட இடங்களில் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. 60 நாள்களில் படப்பிடிப்பை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.