செய்திகள்

தாய் நிலத்தைக் கொண்டு அடையாளப்படுத்தலைச் செய்து மகிழ் காதல் கொண்டு ஒழுக்கமுறைமையை அமைத்த தமிழர்

காதலும் வீரமும் கண்ட தமிழர் வாழ்வின் காமன் விழாக்களும் இந்திரவிழாவும் காதலர்தின முன்னோடியாயின

மாசி 14 என்றால் காதலர் தினம் என்னும் நன்னாள். இளைவர்க்கு இன்பநாள். இளையவராய் உள்ளம் உடையவர்க்கும் மகிழ்ச்சிநாள். முதியவராய் நிற்பவரும் முதிராத் தன்மையானது காதல் என்று எண்ணி மகிழும்நாள்.

காதலனும் காதலியும் கணவனும் மனைவியும் கூடிமகிழ்வது தமிழர்க்கு புதிதான ஒன்றல்ல. அன்பைத்தேடுவதும் நாடுவதும் கூடுவதும் வாடுவதும் கொண்டதே மனிதவாழ்க்கை. இதற்கு யாருமே விதிவிலக்கல்ல. இதனை உணர்ந்து உலகிற்கே காதலை அடிப்படையாகக் கொண்டு ஒழுக்கமுறைமை வகுத்த இனம் தமிழ் இனம்.

z1எல்லா மனித உள்ளத்திலும் ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் மனதால் விரும்பும் இயல்புத்தன்மை ஒன்று உள்ளது. இதன் அடிப்படையில் தனக்குப் பிடித்தமான ஒரு ஆணை அல்லது பெண்ணை ஆழமாக அன்புசெய்ய முற்படும் பொழுது காதல் அரும்புகிறது. ஆனால் அந்த ஆரம்பக் காதல் தொடரலாம் பல்வேறு காரணங்களால் தொடராது அரும்பிலேயே முடிவதும் உண்டு. இதனால் இந்நிலையைக் கைக்கிளை என்று மனத்தில் காதல் தோன்று நிலையாகத் தொல்காப்பியம் முதலாவது வகைமை சொல்கிறது.

உள்ளங்களின் கலத்தல் புணர்ச்சி என்னும் ஒழுக்கமாக பேசப்பட்டது. கூடலுக்கு மலையும் மலைசார்ந்த நிலமும் நிலஅமைப்பிலும் காலநிலை அமைப்பிலும் உதவியதுடன் வேட்டையாடுவதற்கும் தேன்சேர்த்தலுக்கும் உரிய வாழ்வுமுறை

முதற்கட்டப்பொருளாதாரமாகவிளங்கியதால் காதல் செய்வதற்கான நேரம் போதியளவில் இருந்தமையால் குறிஞ்சிக்கு உரியது புணர்ச்சி என்று வரைவும் செய்யப்பட்டது.

குறிஞ்சியில் தமிழ்ப்பெண்கள் கூட சிறுநிலவிவசாயத்தை உலகிலேயே முதன்முதலில் கண்டறிந்து வாழ்ந்தமையால் தினைப்புனம் காத்தல் போன்ற தனித்து வாழும் சூழலும் யானைக்குப் பன்றிக்கு அஞ்சுதல் போன்ற இயற்கைநிலைகளும் அவளுக்குக் காதலுக்கான சந்தர்ப்பங்களை அதிகரிக்கவைத்தமைக்கு உதாரணமாக வள்ளி முருகன். காதல் திகழ்கிறது.
குறிஞ்சிக்கு புணர்ச்சி திணைஒழுக்கமாயிற்று

முல்லைநில வாழ்வில் காடும் காடுசார்ந்த நிலஅமைப்பும், ஆண் ஆனிரை மேய்த்திட கோடைகாலத்தில் காட்டிடைச் செல்வதும், இளவேனி முதுவேனிப் பாசறைகள் அமைத்துத் தன் காதலனோ கணவனோ திரும்பி வரும் அளவும் மங்கையர் மனத்து உறுதியுடன் இருத்தலும் இதனையே கற்பென்னும் பெண்மனத்து உறுதியென தமிழிலக்கியங்கள் பாடிப்பரவியதும் தமிழர் கலாச்சார வரலாறாகிறது. முல்லைக்கு இருத்தல் என்னும் மனதால் பிரியாத அன்புநிலை தோன்றிக் காலப்போக்கில் முல்லையில் ஊர் தோன்றிய பொழுது அது தமிழ் ஊர்ப்பொதுமையாகி கற்பு என்னும் சமுகவிழுமியதாக அது உறுதிபெற்றமை வரலாறு. இந்தக் கற்பு என்னும் தளரா மனஉறுதி ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுமையான வாழ்வாதாரமாகத் தமிழர் பண்பாட்டிலே நிலை பெற்றுள்ளது. பாரதியின் குயில் கூற்றான “உறுதி உறுதி உறுதிக்கோர் உடைவு உண்டாயின் இறுதி இறுதி” என்பது அன்பினைந்திணையில் இணையும் பொழுது தோன்றும் ஒருவனுக்கு ஒருத்தி ஓருத்திக்கு ஒருவன் என்னும் மனஉறுதியே கற்பு என்னும் முல்லைநிலம் தந்த இருத்தல் பண்பாகிறது.

z7கூடிவாழும் உள்ளப்பிணைப்புப் புணர்ச்சி என்றால் தேடிக்காத்திருக்கும் உள்ளங்களின் உறுதி இருத்தல் என்றால் உறுதி குலைகிறதா என்ற அச்சம் தருவது ஊடல். வெறுக்காமல் வெறுத்து அணைக்காமல் அணைக்கும் காதலின் கூறு ஊடல். உள்ளவாடல் ஊடல் என்றால் வாட்டம் நீங்குகையில் பிறக்கும் வேகம் பெருவிருப்பாம் காமம். ஆதலால் ஊடுதல் காமத்திற்கு இன்பம் என்று சுருங்கச் சொன்ன வள்ளுவன் “அதற்கின்பம் கூடிமுயங்கப் பெறின்” என்று பெருவிருப்பின் வழி வளரும் பெரும்பாசமே இரண்டல்ல ஒன்றுமல்ல என்ற நிலையில் தலைவனையும் தலைவியையும் இருமையில் ஒருமை பெறவைக்கும். இந்த இருமையில் ஒருமை என்பது உயிர்க்கும் இறைவனுக்கும் இடையுள்ள இமைப்பொழுதும் மாறா நிலையின் வாழ்வியல் வெளிப்பாடு என்பதினால் தான் இவ்வாறு இருமையில் ஒருமை கண்ட காதலைத் தெய்வீகக் காதல் என்று தமிழிலக்கியங்கள் போற்றின. இவ்வாறு இருமையில் ஒருமைநிலை கொண்ட பெண்ணைத் தெய்வமாகவே தமிழ்ச் சமுதாயம் கொண்டாடியதன் குறளோசை தான்

“தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை”
என்னும் குறள். இந்தத்’ தெய்வத்தன்மைக்குக் கற்பு என்னும் திண்மை(உறுதி) காரணம் என்பதால்தான் இதற்கு முதல் குறளில்
பெண்ணின் பெருத்தக்கயாவுள கற்பென்னும் திண்மை உண்டாகப் பெறின் என்று வள்ளுவர் இல்லாளுக்குக் கற்பென்னும் உறுதி உண்டாகப்பெற்றால் அதனைவிட வேறு என்ன பெரியவொன்றை பெறமுடியும்? என்று கேள்வி தொடுத்துக் கற்பின் பெருமைபேசினார். இங்கு அவர் எழுப்பிய பெண்ணின் பெருத்தக்க யாவுள என்ற கேள்விக்கு இன்பத்துப்பாலில் நாணுத்துறவு உரைத்தல் அதிகாரத்தில் 1137வது பாடலில் பதில் சொல்கின்றார்.

 

z5கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப் பெண்ணின் பெருத்தக்க தில்
என்ற அக்குறளுக்குக் கடல் போல கரையற்ற காமநோயினை அனுபவித்தாலும் மடலேறித் தன்னுயிர் போக்காத உள்ள உறுதி உடைய பெண்ணுக்கு நிகரான மதிப்புடைய வேறு பொருள் இல்லை என்று பொருள் அமைகிறது. இந்த எதனாலும் துவளாத வாடாத மாளாத மனம் உடையவள் வீரத்தமிழ்ப் பெண். ஆனால் இன்றோ இந்த தாய்வழி வீரத்தை இழந்தவராய் அடங்கிக் கிடப்பது அல்லது திருமணமுறிவு பெறுவது என்ற இரு அந்தங்களுள் பெண்கள் நிற்க முனைகின்றார்களே தவிர ஊடல் காமத்திற்கு இன்பமென்னும் உறுதியுடன் கோபிக்க வேண்டிய நேரத்தில் கோபித்து அணைக்க வேண்டிய நேரத்தில் அணைத்து வாழ மறக்கின்றார்கள். இதுவே இன்று குடும்பம் என்னும் கட்டமைப்பே தொடருமா என்கிற யதார்த்த பூர்வமான கேள்வியெழக் காரணமாகிறது. திருமணம் என்னும் கட்டமைப்பின் வழி இல்லறத்தை நல்லறமாக்காது ஆணும் பெண்ணும் ஒன்றாக வாழ்தல் என்னும் உத்தி வழி காதல் என்னும் உறவை இன்பம் மட்டும் பெறும் முயற்சியாகவும் கூடிப்பிரியும் சுழற்சியாகவும் கருதமுற்படுகின்றனர்.

இதனால் தான் காதல் காமம் என்னும் மானிடத்தின் புத்துணர்வுச் சத்திகள் சமுதாயத்தின் நச்சுப்பொருட்கள் என வெறுக்கப்படும் நிலைமை உருவாகிறது. இங்கு காதலிலோ காமத்திலோ தவறல்ல அதனைத் தன்னலத்திற்கும் மிருகஉணர்வுகளுக்குமான கருவிகளாகக் கருதும் போக்கிலேயே தவறு இருக்கிறது. சங்க காலத்திலும் ஆண்பெண் உறவில் உறவுப்பிறழ்ச்சிகள் இருந்தன. ஆனால் தாய் செவிலி தலைவி தோழி பாங்கி தலைவன் பாங்கன் என்று மானி;டஉறவு வலை ஒன்றின் உதவிகளும் வழிகாட்டல்களும் கொண்டு அவை ஒழுங்கு செய்யப்பட்டன. ஆனால் இன்றைய உலகில் இவ்வாறகச் சுற்றியிருந்து உளவளத்துணை நலவளத்துணை அளித்து ஆதரித்தல் என்பதும் பணமீட்டும் முயற்சிகளாக நடாத்தப்படுகின்றனவே தவிர மானிடம்போற்றும் நோக்கில் அவற்றில் பெரும்பாலனவை இல்லை. இதுவே இன்றைய மணமுறிவுகளுக்கும் மனமுறிவுகளுக்கும் காரணமாக அமைகின்றன.

z4பொருளாதாரமுறைமைகளின் தாக்கம் தொழில் முறைமைகளின் தன்மை என்பனவே காதலில் தாவல் ஏற்படவும் தாவலால் காதல் பிரிவுகள் ஏற்படவும் செய்கின்றன. இதனால் தான் வயல் விளைத்து, உதிரி நெல் குவித்த உழவர் சமுதாயத்து மருதநிலத்தில் காதலில் ஊடல் ஒழுக்கமுறைமையாயிற்று.

மருதத்து அன்பிணைந்திணையாக அமைந்தது ஊடல்

மருதத்தில் மாலை தம்மைப் பிரிந்து சென்ற கணவன் மறுநாள் காலை வரை வயல் மருங்கில் நிலாவிலும் நீரிலும் காவிலும் காட்டிலும் மகிழ்ந்திருந்து விட்டு மறுநாள் காலையில் வீடு திரும்புகையில் மனைவி ஊடிநிற்கும் காட்சிகளின் தன்மை விளக்கும் தமிழ்ப்பாடல்களே அதிகம். இங்குதான் வடநாட்டவர் வருகையின் வழி வந்த பெண்களுடனான தொடர்புகளும், கலைவளம் பெருக்கிய பெண்களின் மயக்கத்திலான உறவுகளும் கணவன் மனைவியிடை ஊடல்கள் வளர வழிசெய்தன. ஆதலால் ஊடலே மருதக்காதலின் திணைமுறையாயிற்று.

நெய்தல் நிலத்து வாழ்வு கடல்படு பொருளாதாரத்தால் தமிழனை உயர்த்திய பெருமை எந்த அளவுக்கோ அந்த அளவுக்கு தமிழ்ப்பெண்.களின் உள்ளத்தில் கடல் மேல் சென்ற காதலளை நினைந்து ஏங்கி இரங்கி வாழ்ந்து இரங்கலே நெய்தலின் காதல் உணர்வு தரும் ஒழுக்கமுறையாக அமையவும் செய்திற்று.

இவ்வாறு தாய்மண்ணின் தன்மைக்கேற்ப தனயர்கள் காதல் வாழ்வமையும் என்று உலகிலேயே முதன்முதலில் நிலங்கொண்டு மனிதனை அடையாளப்படுத்தி பின்னர் தேசம்.

z6சார்ந்த நிலையில் அந்த அந்த நாட்டுக் குடிகள் என்னும் வகைப்படுத்தல் மேற்குலகுக்கு வழிகாட்டியது தமிழர் வாழ்வியல்.
நானிலத்தையும் அவை காதல் வளரவும் தளரவும் அளித்த இயற்கைத் தன்மை கொண்டு அடையாளப்படுத்திய தமிழர் நானிலமும் இயற்கையாலோ யுத்தத்தாலோ நோயாலோ வறுமையாலோ வாழ்விழக்கும் நிலையிலான பாலை வாழ்வின் காதல் சோகம் குறித்தும் அழகாகப் பாடி பிரிவு பாலைக்கான ஒழுக்கமுறைமையெனவும் முத்திரை கத்தி வைத்தனர். பாலைத்திணைச் சங்க இலக்கிய பாடல்களே காதல் என்ற கனியமுதின் சாறு பிழி;ந்திட்ட பெருமை படைத்தன.
பெருங்கடுக்கோ பாடிய பாலைக்கலி 11வது பாடல் முதலில் காதல் வாழ்வில் நிலையான தன்மையும் மாறாத இன்பமும் பெறுவதற்கு அறவோரை வரவேற்று அறத்தில் வளர்தலும், அவர்க்கு ஈகையால் புகழ்வாழ்வு பெறலும், இவற்றுக்கு உதவுவதாகவும் வாழ்வின் வறுமை என்னும் பகைவனை விரட்ட உதவுவதாகவும் உள்ள செல்வத்தைப் பழிதீர் முறையில் ஈட்டுதல் வேண்டும். என்கிறார். பின்னர் இந்நோக்கில் தன் காதலியைப் பிரிந்து சென்ற காதலனின் காட்டுவழிப்பயணத்தைத் தலைவி நினைந்து ஏங்குதல் மொழிகளைத் தந்து காதல் என்பது ஓருயிர் ஈருடல் நிலை என்பதை எடுத்துவிளக்குவதுடன், தலைவிக்கு ஆறுதல் கூறும் தோழியின் தேறுதல் மொழிவழியாக காடும் இணைநலம் பேணுகிறது எனவே நாமும் துணைநலம் பேணி பெருவாழ்வு வாழ்தல் வேண்டுமென்று இன்தமிழால் கவிதாப்பிரகடனம் செய்கின்றார். இதனை அடுத்த சந்திப்பில் எடுத்து நோக்குவோம்.