செய்திகள்

தாலி அகற்றும் நிகழ்ச்சிக்குத் தடை

திராவிடர் கழகம் சார்பில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 14) நடைபெற இருந்த தாலி அகற்றும் நிகழ்ச்சிக்கு சென்னை காவல் துறை தடை விதித்துள்ளது.

இதை எதிர்த்து சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்.

அம்பேத்கரின் பிறந்த நாள் விழாவின் (ஏப்ரல் 14) ஒரு பகுதியாக தாலி அகற்றுதல், மாட்டுக்கறி விருந்து ஆகியவற்றுக்கு வீரமணி அழைப்பு விடுத்திருந்தார். சென்னை பெரியார் திடலில் செவ்வாய்க்கிழமை இந்த நிகழ்ச்சி நடைபெற இருந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு இந்து அமைப்பினரிடையே எதிர்ப்பு எழுந்தது. அதே நாளில் தாலி கட்டும் நிகழ்ச்சி நடத்தப் போவதாகவும் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் திராவிடர் கழகம் நடத்தும் இந்த நிகழ்ச்சி, இந்து மதத்தினரைப் புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளதால் அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று இந்து மகா சபை தலைவர் பி.எஸ்.தனசேகர் சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுத்தார்.

ஆனால், புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கி.வீரமணி மீது வழக்குப் பதிவு செய்யக் கோரியும் தனசேகர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள், முகாந்திரம் இருந்தால் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மீது வழக்குப் பதிவு செய்யலாம் எனக் கூறினர்.

இதன் அடிப்படையில், வேப்பேரி காவல் நிலையத்தில் 4 பிரிவுகளின் கீழ் கி.வீரமணி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக சட்டம் ஒழுங்கு, பொது அமைதி, மத நல்லிணக்கத்துக்கு குந்தகம் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாகக் கூறி, இந்த நிகழ்ச்சிக்கு காவல் துறை தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. தடை உத்தரவு ஆணையை திராவிடர் கழகத்தினரிடம் ஞாயிற்றுக்கிழமை காவல்துறையினர் அளித்தனர்.