செய்திகள்

திக்கிரித்தின் பெரும்பகுதி ஈராக்கிய படையினர் வசம்

ஈராக்கிய படைகள் திக்கிரித் நகரின் பல முனைகளில் முன்னேறிக்கொண்டிருப்பதாகவும், ஐஎஸ் தீவிரவாதிகள் பின்வாங்கி நகரின் மையப்பகுதியை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திக்கிரித் நகரின் பல பகுதிகளை படையினரும்,ஈரான் சார்பு ஆயுத குழுக்களும் கைப்பற்றியுள்ளதாகவும்,பொலிஸ் தலைமையகம் மற்றும் மருத்துவமனை ஆகியன அவர்கள் வசம் வந்துள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
திக்கிரித் நகரின் 75 வீத அரச படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளதாக தெரிவித்துள்ள தளபதியொருவர்,முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹ{சைனின் சொந்த ஊரை கைப்பற்றுவதற்காக 23000 படையினர் ஒருவார காலமாக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.இதேவேளை ஈரான் சார்பு ஆயுதக்குழுவை சேர்ந்த 20000 பேரும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
ஐஎஸ் அமைப்பு கடந்த யூன் மாதம் பல ஈராக்கிய நகரங்களை கைப்பற்றிய பின்னர் அந்த அமைப்பிற்கு எதிராக மேற்கொள்ளப்படும் பாரிய இராணுவநடவடிக்கையிதுவென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை திக்கிரித் நகரில் ஐஎஸ் அமைப்பு குளோரின் வாயுவை ஆயுதமாக பயன்படுத்துவதாக பிபிசி தெரிவித்துள்ளது.தனது படையினரிற்கு எதிராக பயன்படுத்தப்படும் வீதியோர வெடிகுண்டுகளில் குளோரின் பயன்படுத்தப்படுவதாக ஈராக்கிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.