தினக்குரல் முன்னாள் பிரதம ஆசிரியர் தனபாலசிங்கம் பாராட்டு விழாவில் சி.வி.ஆற்றிய உரை
கரவெட்டி தச்சை ஐங்கரன் அறநெறிப் பாடசாலை மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்ற வாழ்நாள் சாதனையாளர்- தினக்குரல் முன்னாள் பிரதம ஆசிரியர் வீ.தனபாலசிங்கத்திற்கான பாராட்டு நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்த வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய உரை
சில ஆண்டுகளுக்கு முன்னர் மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முஹம்மத் அவர்கள் ஓர் அர்த்தமுள்ள கருத்தைத் தெரிவித்திருந்தார் – “யாருடைய கரங்களில் கப்பல் படை இருந்ததோ அவர்கள் தான் 19ம் நூற்றாண்டில் சக்திவாய்ந்தவர்களாகத் திகழ்ந்தார்கள். யாருடைய கைகளில் பலமான விமானப் படை இருந்ததோ அவர்கள் தான் 20ம் நூற்றாண்டின் பலசாலிகளாகத் திகழ்ந்தார்கள். யாரிடம் ஊடக பலம் இருக்கின்றதோ அவர்கள் தான் 21வது நூற்றாண்டின் சக்தியாகத் திகழ்வார்கள்” என்றார்.
அதாவது இன்றைய பலமானது பேனாவைச் சென்றடைந்துள்ளது என்பதையே மகாவீரர் முகம்மது வலியுறுத்தினார். அந்த வகையிலே பேனாபிடித்தவர்கள் பலசாலிகள் ஆகிவிட்டார்கள். எப்பொழுது ஜனநாயகக் கருத்துக்கள் பல நாடுகளையும் ஊடுறுவத் தொடங்கியதோ அங்கெல்லாம் பேனாவின் பலம் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. ஜனநாயகம் கருத்துறவாடலை மதிக்கின்றது. அதனால்த் தான் கருத்துக்களைக் காகிதத்தில் வடிக்கின்ற பேனாக்கள் சக்திபெற்று வருகின்றன.
இன்றைய உலகில் ஊடகங்கள் சக்தி வாய்ந்த சாதனங்கள் ஆகியுள்ளன. மக்களின் கருத்துக்களைப் பிரதிபலிப்பதால் மக்கட் சக்தியானது ஊடகங்கள் பால் மருவி நிற்கின்றது. மக்கள் மத்தியில் கருத்துருவாக்கங்களை மேற்கொள்வதாலும் மக்கள் நிலையறிந்து அவர்தம் எதிர்பார்ப்புக்களை எழுத்தில் பிரதிபலிப்பதாலும் மக்களின் முகவர்களாக ஊடகங்கள் மாறி வருகின்றன.
எனவே தான் ஊடகங்களைப் புறக்கணித்துவிட்டு எவரும் எதையுஞ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் இதன் காரணமாக ஊடகவியலாளர்களுக்குள்ள சமூகப் பொறுப்பும் அதிகரித்திருக்கின்றது என்று தான் சொல்ல வேண்டும். ஊடகங்கள் சமூகப் பொறுப்புடனும் உண்மைகளை வெளிக்கொண்டு வரும் வகையிலும் செயற்பட வேண்டிய கடப்பாட்டில் இருக்கின்றன.
இன்று எமது பாராட்டுக்களைப் பெறும் நண்பர் வீரகத்தி தனபாலசிங்கம் அவர்கள் தொடக்கத்தில் இருந்தே சமூகப் பொறுப்புடன் நடந்து வந்த ஒரு ஊடகவியலாளர். எதையும் ஆர அமர சிந்தித்து அமைதியாகத் தமது தொழிலை நடைமுறைப்படுத்தி வந்தவர். அவர் சுமார் நாற்பது வருட கால பத்திரிகைத்துறை அனுபவம் கொண்டவர். அடிமட்டத்தில் இருந்து மேல்நோக்கி வந்து சாதனைகள் பல புரிந்தவர்.
ஜே.ஆர்.ஜெயவர்த்தன தனது ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியை நிறுவிய அதே 1977ம் ஆண்டின் செப்ரெம்பர் மாதத்தில்த்தான் திரு.தனபாலசிங்கம் அவர்கள் வீரகேசரி பத்திரிகை நிறுவனத்தில் ஒப்பு நோக்காளராக இணைந்து கொண்டார். வீரகேசரி அப்பொழுதிருந்த கட்டிடமும் இடமும் என் நினைவுக்கு எட்டிய வரையில் ஜே.ஆரின் குடும்பச் சொத்தாகவே அப்போது இருந்தது. அதனால்த்தான் அவர் அந்த ஆண்டில் அரசாங்கம் அமைத்தமை பற்றி குறிப்பிட்டேன்.
படிப்படியாக நண்பர் தனபாலசிங்கம் அவர்கள் பதவி உயர்வுகள் பெற்றார். 85ம் ஆண்டில் உதவி ஆசிரியர் ஆனார். 13 வருடங்கள் அந்த ஆசிரிய பீடத்தில் இருந்து வெவ்வேறு பணிகளில் திறம்பட ஈடுபட்டு வந்தார்.
ஆயிரத்தித் தொழாயிரத்துத் தொண்ணூற்று ஏழாம் ஆண்டில்த்தான் தினக்குரல் பத்திரிகை ஆரம்பமானது. காலஞ்சென்ற பொன் இராஜகோபால் நண்பர் சிவநேசச் செல்வன் ஆகியோருடன் சேர்ந்து தினக்குரலின் முதல் செய்தி ஆசிரியராக அப்போது திரு.தனபாலசிங்கம் பொறுப்பேற்றார்.
2004ம் ஆண்டில் தினக்குரலின் பிரதம ஆசிரியரானார். அந்தக் காலகட்டத்தில்த்தான் எனக்கு நண்பர் தனபாலசிங்கம் அவர்களைத் தெரிய வந்தது. அவரின் அறிவுக் கூர்மையும் நுட்பமும் அவரின் ஆசிரிய தலையங்கங்களில் “பளிச்” செனத் தெரிவதாய் இருந்தன.
ஏழு வருடங்களின் பின்னர் 2011ம் ஆண்டு தொடக்கம் அவர் ஏசியன் மீடியா பப்ளிக்கேஷன் சிரேஷ்ட பத்திரிகையாளராகப் பணிபுரிந்து கொண்டிருக்கின்றார். அவரின் ஆசிரிய தலையங்கங்கள் தொகுப்பு நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன.
நான் அவரிடம் கேட்காத ஒரு கேள்வி உண்டு.
எமது மாண்புமிகு ஜனாதிபதி அவர்களும் திரு.தனபாலசிங்கம் அவர்களும் கம்யூனிஸ்ட் தலைவர் சண்முகதாசனுடன் நெருக்கமான தொடர்பு வைத்துக் கொண்டிருந்தவர்கள். எனவே இருவரும் அப்பொழுதிருந்தே ஒருவரை ஒருவர் தெரிந்து வைத்திருந்தார்களா இல்லையா என்பதே கேள்வி. அண்மையில் தான், 1971ம் ஆண்டளவில் தான் சிறைக்குப் போனது பற்றி ஜனாதிபதி அவர்கள் எமக்குக் கூறினார்.
அவரும் அந்த நாட்களில் பீகிங் அலகின் கம்யூனிசத்திலேயே ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அதே போன்று நண்பர் தனபாலசிங்கம் அவர்கள் இடதுசாரி இயக்க ஈடுபாட்டைப் பற்றியும் அது தமக்குத் தந்த வழிகாட்டல்கள் பற்றியும் பலமுறை குறிப்பிட்டுள்ளார். அந்த வழிகாட்டல்களே பத்திரிகைத் துறையில் தம்மை சமூகப் பிரக்ஞையுடன் பயனுறுதியுடன் தனது பணியைச் செவ்வனே செய்ய வைத்தன என்றும் கூறியுள்ளார்.
எனவே ஜனாதிபதி அவர்களும் திரு.தனபாலசிங்கம் அவர்களும் அன்றிலிருந்தே ஒருவரை யொருவர் தெரிந்து வைத்துக் கொண்டிருந்தார்களேயானால் நாங்கள் ஜனாதிபதியை திரு.தனபாலசிங்கம் ஊடகச் சந்திக்கலாம் என்ற நப்பாசைதான்!
இவரது “ஊருக்கு நல்லது சொல்வேன்” நூலுக்கு ஐந்து வருடங்களுக்கு முன் தமிழ்நாடு நாமக்கல் சின்னப்ப பாரதி விருது கிடைத்தது. இவ்வருடம் மே மாதத்தில் பத்திரிகை ஆசிரியர்கள் அமைப்பும், இல நிறு பத்திரிகை நிறுவனமும் சேர்ந்து இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கியுள்ளார்கள்.
தான் செய்யும் தொழிலின் உச்சக்கட்டத்தை ஒருவர் அடைந்தால்த்தான் அவர் வாழ்நாள் சாதனையாளர் என்ற பெருமையைப் பெறலாம். அந்த விதத்தில் படிப்படியாக ஏறி தனது பயணத்தின் உச்சக்கட்டத்தை நண்பர் தனபாலசிங்கம் அவர்கள் அடைந்திருப்பது எமக்கெல்லாம் பெருமை தரும் விடயம். அவருக்கு எமது பாராட்டுக்கள் உரித்தாகட்டும்.
நேற்றைய தினம் நண்பர் தனபாலசிங்கம் அவர்கள் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். யாழ்ப்பாணத்திலிருந்துதான் பிராந்தியப் பத்திரிகைகள் வெற்றிகரமாக வெளிவந்திருக்கின்றன என்ற கருத்தை அவர் ஏற்கவில்லை. பிராந்திய செய்திகள் மட்டுமல்லாது உலகச் செய்திகளையும் அவை உள்ளடக்கியுள்ளதால் அவை பிராந்தியப் பத்திரிகைகள் மட்டும் அல்ல என்றார்.
பத்திரிகைகளின் உற்பத்தி அல்லது ஜனனம் எங்கிருந்து தொடங்கியது என்பதை வைத்தே அவற்றைப் பிராந்தியப் பத்திரிகைகள் என்று அழைத்து வந்துள்ளோம். தமிழ் மக்களுடைய உரிமைப் போராட்டத்துடன் இணைந்ததாகவே மேற்படி பிராந்தியப் பத்திரிகைகளின் ஜனனமும் வளர்ச்சியும் இருந்தன. 1960 களில் யாழ்ப்பாணத்தில் வெடித்த சத்தியாக்கிரகப் போராட்டம்தான் ஈழநாடு பத்திரிகையின் வளர்ச்சிக்குக் காரணமாய் அமைந்தது.
அன்றைய அஹிம்சைப் போராட்டமே காலக் கிரமத்தில் வட்டுக்கோட்டைப் பிரகடனத்தின் பின்னர் ஆயுதப் போராட்டமாக மாறியது. மாற்றமடைந்த 1980களின் நடுப்பகுதியில் மேலும் இரு பத்திரிகைகள் யாழ்ப்பாணத்தில் உதயமாகின. அதில் ஒன்றுதான் உதயன். 1986ல் உதயமானது. ஜனநாயக ரீதியாக இராஜதந்திர மட்டத்திற்கு எமது போராட்டம் நகர்ந்துள்ள பின்ணணியில் நேற்றுத் தொடக்கம் “காலைக்கதிர்” வெளிவரத் தொடங்கியுள்ளது.
பத்திரிகைகளின் உள்ளடக்கத்தை வைத்துப் பார்த்தால் இவை பிராந்தியப் பத்திரிகைகள் அல்ல என்று கூறலாம். ஆனால் அவற்றின் பின்னணி, குறிக்கோள், உற்பத்தி மூலம் என்பனவற்றை வைத்துப் பார்த்தால் அவை பிராந்தியப் பத்திரிகைகளே என்று எனக்குப் படுகின்றது.
இன்றைய காலகட்டத்தில் ஊடகங்களின் பங்கு முக்கியமானது. நேரடியான யுத்தம் ஒன்று இல்லாவிட்டாலும், மறைமுகமான யுத்தம் ஒன்றை, ஒடுக்குமுறை ஒன்றை நாம் எதிர்கொள்கின்றோம். ஒரு காலத்தில் ஈழம் தவிர்ந்த எல்லாம் தரலாம் என முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச அடிக்கடி சொல்வார்.
ஆனால், எதனையும் தர அவர் தயாராக இருக்கவில்லை. இப்போதும் அதேபோன்ற ஒரு நிலைதான் காணப்படுகின்றது. எல்லாம் திறந்துவிடப்பட்டுள்ளது போன்ற ஒரு தோற்றப்பாடு காண்பிக்கப்பட்டாலுங் கூட, மறைமுகமான அழுத்தங்களும் ஒடுக்குமுறைகளும் தொடரத்தான் செய்கின்றன. ஓரு இலட்சத்துக்கும் அதிகமான படையினரை வடபகுதியில் வைத்துக்கொண்டு மக்கள் எவ்வாறு சுதந்திரமாக நடமாட முடியும்? எப்படித் தொழில் செய்ய முடியும்? இது போன்ற பல்வேறு நெருக்கடிகள் எம் மீது நேரடியாகவும் மறைமுகமாகவும் திணிக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் தமிழ்ப் பத்திரிகைகளுக்கு ஒரு நீண்ட வரலாறு உள்ளது. பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தமிழ் மக்களுடைய குரலாக அவை ஒலித்திருக்கின்றன. இதற்காக அந்தப் பத்திரிகை நிறுவனங்கள் சந்தித்த நெருக்கடிகள் பல.
யாழ்ப்பாண குடையிற்ச்சுவாமிகள் சில தசாப்தங்களுக்கு முன்னர் சொன்னார்: ~~எரிப்பார்கள், ஏசுவார்கள். உண்மையை எழுதுங்கள். உண்மையாக எழுதுங்கள்|| என. அவரது தீர்க்கதரிசனம் உண்மையாகவே இருந்தது. அடக்குமுறைகளுக்கு மத்தியிலும், தமிழ்ப் பத்திரிகைகள் தமது பத்திரிகா தர்மத்தைக் கைவிடவில்லை. தாம் சார்ந்த மக்களின் குரலாகவே அவை எப்போதும் ஒலித்தன. அதற்காகக் கொடுக்கப்பட்ட விலையும் அதிகம்தான். போரின் போதான தன்னுடைய காலத்தில் திரு.தனபாலசிங்கம் அவர்களும் தமிழ் மக்களின் குரலாக ஒலிக்கத் தவறவில்லை.
ஊடகவியலாளர் நிமலராஜின் 16 ஆவது ஆண்டு நினைவுதினம் கடந்த மாதம் நினைவுகூரப்பட்டது.
நிமலராஜனில் ஆரம்பமாகி இந்த 16 வருட காலத்தில் சுமார் 40 ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்கள் இலங்கை முழுவதிலும் கொல்லப்பட்டிருக்கின்றார்கள் அல்லது காணாமற்போயிருக்கின்றார்கள் எனக் கணிப்பீடு ஒன்று தெரிவிக்கின்றது.
இதில் 3 பேரைத் தவிர்ந்த ஏனைய அனைவருமே தமிழர்கள். இவ்வாறு கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணைகள் எதுவும் முன்னைய ஆட்சியில் நடத்தப்பட்டு, குற்றவாளிகள் நீதியின் முன்பாக நிறுத்தப்படவில்லை. அவர்கள் அவ்வாறு செய்வார்கள் என்ற நம்பிக்கையும் அப்போது இருக்கவுமில்லை.
கடந்த (2015) ஜனவரியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது, ஊடகவியலாளர்கள் கொலைகள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருந்தது. ஆனால், இரண்டு சிங்கள ஊடகவியலாளர்களின் கொலைகள் தொடர்பான விசாரணைகளை மட்டுந்தான் புதிய அரசாங்கம் மீள் விசாரணைக்கு எடுத்துள்ளது. தமிழ் ஊடகவியலாளர்களின் கொலைகள் தொடர்பில் எந்தவிதமான விசாரணையும் இல்லை என்ற நிலைதான் தொடர்கின்றது.
இது தொடர்பில் தமிழ் ஊடகத்துறை சார்ந்தவர்கள் அரசாங்கத்திடம் பல சந்தர்ப்பங்களில் கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள். கடந்த மார்ச் இறுதிப் பகுதியில் யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்த ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்கவுடன் நடத்திய பேச்சுக்களின் போதும் இது தொடர்பில் அவரிடம் நான் சுட்டிக்காட்டியிருந்தேன். கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும், குற்றவாளிகள் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்பட்டு, பலியான ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதை நான் வலியுறுத்தியிருந்தேன்.
ஆனால், இதுவரையில் அதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாமலிருப்பதையிட்டு என்னுடைய அதிருப்தியை இந்த இடத்தில் நான் தெரிவிக்க விரும்புகின்றேன். தமிழ் ஊடகவியலாளர்களுக்கு ஒரு நீதி சிங்கள ஊடகவியலாளர்களுக்கு இன்னொரு நீதி என்ற நிலை தொடர்ந்தால் நல்லிணக்கத்தையும் நம்பிக்கையையும் எவ்வாறு கட்டியெழுப்ப முடியும்?
தமிழர்களின் நியாயமான அபிலாசைகளுக்காக குரல் கொடுக்கும் போது எம்மை தீவிரவாதிகள் அல்லது கடும் போக்காளர்கள் என முத்திரை குத்துகின்றார்கள்.
இவ்வாறான ஒரு போக்கை அண்மைக்காலத்தில் காணக்கூடியதாக இருக்கின்றது. இவ்வாறு முத்திரை குத்துவது, மரணபயம் ஏற்படுத்துவது போன்றவை எமது வாய்களை அடைக்கச் செய்வதற்காகவா என்ற சந்தேகந்தான் இப்போது எனக்கு ஏற்படுகின்றது. இவற்றின் பின்னணியில் ஒரு அரசியல் நோக்கம் இருப்பதாகவே நான் சந்தேகிக்கின்றேன்.
எமது வாய்களை அடைத்துவிட்டால், தாம் விரும்பும் ஒரு தீர்வைக் கொண்டுவர முடியும் என அரசாங்கத் தரப்பினர் சிந்திக்கலாம். மாகாணசபைத் தேர்தலின் போது மக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாம் எதனைச் சொல்லி வாக்குக் கேட்டோமோ அதனைத்தான் இப்போதும் கேட்கின்றோம். மக்களுக்கு நாம் கொடுத்த வாக்குறுதியிலிருந்து அல்லது மக்கள் எமக்குக் கொடுத்த ஆணையிலிருந்து நாம் பின்வாங்க முடியாது.
மேலும் அரசியலமைப்புப் பேரவையில் இடம்பெறும் நகர்வுகள் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுப்பனவையாக அமையவில்லை. பௌத்த மதத்துக்கு முன்னுரிமை கொடுப்பதா இல்லையா என்பதிலேயே தெளிவற்ற நிலைதான் உள்ளது. சிறுபான்மையினரை இரண்டாந் தரப்பிரஜைகளாகத்தான் பிரதான கட்சிகள் மதிக்கின்றன என்பதற்கு இது ஒரு உதாரணம்.
இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்துவதில் பல தடைகளைத் தாண்டிச்செல்லவேண்டிய தேவையும் உள்ளது. பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை. அதற்கடுத்ததாக சர்வஜன வாக்கெடுப்பு என்ற தடையும் உள்ளது.
இவை அனைத்தையும் தாண்டி நியாயமான ஒரு தீர்வு கிடைத்தால் நாம் அதனை நிச்சயமாக வரவேற்போம். ஆனால் அதற்கான சூழ்நிலைகள் இருக்கின்றனவா? அதனை நாம் எவ்வாறு உருவாக்கப்போகின்றோம்? வெறுமனே மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்துக்கொண்டிருப்பதால் என்ன பலன்?
எனவே எமது நிலை கவலைக்கிடமாக இருக்கும் நேரம் இது. ஆரோக்கியமான, துணிச்சலான ஆனால் சூட்சுமமான பங்களிப்பை வழங்க இன்றைய பத்திரிகையாளர்கள் திரு.தனபாலசிங்கத்திடம் இருந்து பலதையும் கற்க இருக்கின்றது. நேற்று அவர் பேசும் போது மேலும் ஒரு கருத்தைத் தெரிவித்தார்.
ளுனு.சிவநாயகம் போன்றோரின் காலம் மலையேறி விட்டது. அவர்களிடம் இருந்து கற்று இன்று சிரேஷ்ட நிலை அடைந்திருக்கும் கானமயில்நாதன், வித்யாதரன் போன்றோரின் பெயர்களையே இனி நாங்கள் உச்சரிக்க வேண்டும் என்றார். அந்த வரிசையில் வாழ்நாள் சாதனையாளர் திரு.தனபாலசிங்கம் அவர்களின் பெயரையும் உள்ளடக்க வேண்டும் என்று கூறி என்னை அழைத்த அனைவருக்கும் நன்றி கூறி அமர்கின்றேன்.
n10




