செய்திகள்

‘தினச்சுடர்’ பத்திரிகை ஆசிரியர் மணி மறைவு: இன்று இறுதிச் சடங்கு

மூத்த பத்திரிகையாளரும், ‘தினச்சுடர்’ மாலை பத்திரிகையின் ஆசிரியருமான பா.சு.மணி (78) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் இரவு 8.30 மணி அளவில் பெங்களூருவில் இற‌ந்தார்.

பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் இன்று காலை தினச்சுடர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு, பிற்பகலில் இறுதி சடங்கு நடைபெற உள்ளது.

தினச்சுடர் நிறுவனரும், ஆசிரியருமான பா.சு.மணியின் மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி, திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் நாக லாப்புரத்தில் 1936-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி பிறந்த பா.சு.மணி, தினத்தந்தி நாளிதழின் நிறுவனர் சி.பா.ஆதித்தனாரிடம் இதழியல் கற்றார்.

பணி நிமித்தமாக பெங்களூருவில் குடியேறிய அவர் தனது 27-ம் வயதில் ‘தினச்சுடர்’ மாலைப் பத்திரிகையை தொடங்கினார். கர்நாடகத்தில் தொடங்கப்பட்ட முதல் தமிழ் பத்திரிகை என்பதால் அங்குள்ள தமிழர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.