செய்திகள்

திருக்கோணேஸ்வர ஆலய விவகாரத்தில் பின்கதவு ஆக்கிரமிப்பு முயற்சியும், தலைமையற்ற மக்களும்

யதீந்திரா
இது இந்தக் கட்டுரையாளரின் வழக்கமான அரசியல் பத்திகளிலிருந்து சற்று மாறுபட்டது ஆனால் இது அரசியலுக்கு அப்பாற்பட்டதல்ல. சில தினங்களுக்கு முன்னர் இந்த விடயங்கள் இந்தக் கட்டுரையாளரின் நேரடி கவனத்திற்கு வந்தது. தட்சன கைலாசம் என்று அழைக்கப்படும் திருகோணேஸ்வர ஆலயமானது, இலங்கையின் பழைமைவாய்ந்த இந்து தமிழ் அடையாளமாகும். திருக்கோணேஸ்வரம் என்பதிலிருந்துதான் திருகோணமலை என்னும் பெயரே உருவாகியது. அதாவது, சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் மலை என்பதன் பொருள்தான் திருகோணமலை.
திருக்கோணேஸ்வரம் இலங்கையின் ஜந்து ஈஸ்வரங்களில் ஒன்றாகும். வடக்கில் நகுலேஸ்வரம். வடமேற்கில் கேதீஸ்வரம், வடகிழக்கில் திருக்கோணேஸ்வரம், மேற்கில் முன்னிஸ்வரம் மற்றும் தெற்கில், தொண்டேஸ்வரம். இதுவே பஞ்ச ஈஸ்வரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அடிப்படையில் வேறு பெயர்களில் இருந்தாலும் கூட, இவை அனைத்தும் சிவலிங்க வழிபாட்டை அடையாளப்படுத்தும் ஆலயங்களாகும். இலங்கையின் புகஸ்பெற்ற வரலாற்றாசிரியரான கலாநிதி போல் ஈ. பீரீஸ், 1917இல், இந்த ஈஸ்வரங்கள் தொடர்பில் குறிப்பிடும் போது, விஜயன் இலங்கைத் தீவிற்கு வருவதற்கு முன்பதாகவே, இலங்கையில் பஞ்ச ஈஸ்வரங்களை அடிப்படையாகக் கொண்ட, நிர்வாக முறையொன்று இருந்திருக்கின்றது என்று குறிப்பிட்டிருக்கின்றார். ஏனெனில் இந்த ஈஸ்வரங்களை அனைத்துமே இலங்கையின் கரையோர பகுதிகளிலேயே அமைந்திருக்கின்றது. இதன் மூலம், இலங்கை முழுவதையும் ஒரு அலகாக ஒருங்கிணைக்கும் வகையிலேயே இவ் ஆலங்களின் அமைவிடம் இருக்கின்றது. இந்த ஆலயங்களை அடிப்படையாகக் கொண்டு, இந்துக்களின் நிர்வாக முறைமையொன்று பலமாக இருந்திருக்கின்றது. பின்னர் மேலைத்தேய படையெடுப்புக்களினால்தான் இந்த நிர்வாக முறைமை சிதைவடைந்தது. இது வரலாறு. இப்போது இன்றைய பிரச்சினையை நோக்குவோம்.

திருகோணமலை இந்துக்களினதும், இலங்கையின் இந்துக்களினதும் அடையாளமாக இருக்கின்ற, திருக்கோணேஸ்வர ஆலய வளாகத்தையும் உள்ளடக்கியவாறு, சிறிலங்காவின் தொல்பொருள் திணைக்களம் உல்லாச அபிவிருத்தி என்னும் பெயரில் திட்டமொன்றை முன்னெடுக்க முயற்சிக்கின்றது. இது தொடர்பில் ஆலய நிர்வாக சபையின் அனுமதி பெறப்படவில்லை. திருக்கோணேஸ்வர ஆலயத்திற்கான காணியின் அளவு 18 ஏக்கர்களாகும். இந்த எல்லைக்கு வெளியில் தொல்பொருள் திணைக்களம் விடயங்களை முன்னெடுப்பதற்கு நிர்வாக சபை ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. ஆனால் ஆலய எல்லைக்குள் உல்லாசத் துறை அபிவிருத்தி என்னும் பெயரில் ஆலயத்தின் புனிதத்தை கேள்விக்குள்ளாக்குவதுடன், நீண்டகால நோக்கில், ஆலயத்தின் முழு நிர்வாகத்தையும் தொல்பொருள் மற்றும் உல்லாச அபிவிருத்தி அமைச்சின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான ஒரு சூழ்ச்சி திரைமறைவில் நடக்கின்றதாக என்னும் சந்தேகம் ஆலய நிர்வாக சபையினர் மத்தியிலுண்டு. எனது பார்வையில் அவர்களது சந்தேகம் மிகவும் நியாயமானது. ஒரு வேளை இவ்வாறு நாம் சந்தேகப்படாமல் இருந்தால்தான் அது தவறானது. ஏனெனில், நமது சந்தேகத்திற்கு வலுவான காரணங்கள் உண்டு.

கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவானதை தொடர்ந்து, சிங்கள-பௌத்த வேலைத்திட்டமொன்றை பகிரங்கமாகவே முன்னெடுத்திருந்தார். இந்த பின்புலத்தில், கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் முக்கியத்தும் வாய்ந்த இடங்களை ஆராய்வதற்கென 11 அங்கத்தவர்களை கொண்ட, (Presidential Task Force for Archaeological Heritage Management in the Eastern Province) தொல்பொருள் பாதுகாப்பு செயலணியொன்றை நியமித்திருந்தார். ஏன் கிழக்கு மாகாணத்திற்கு மட்டும் இவ்வாறானதொரு செயலணி – இந்தக் கேள்வியை அப்போது பலரும் எழுப்பியிருந்தனர். கோட்டபாயவின் தொல்பொருள் பாதுகாப்பு செயலணிக்கு நியமிக்கப்பட்டவர்களில் முக்கியமானவர், எல்லாவல மேதானந்த தேரர். சிங்கள-பௌத்த தொல்பொருளியல் பற்றி பேசிவரும் எல்லாவல, திருக்கோணேஸ்வர ஆலயம் தற்போது அமைந்துள்ள இடத்தில், முன்னர் ஒரு பௌத்த கோவில் இருந்ததாகவும். அதனை இடித்துவிட்டே, கோணேசர் ஆலயத்தை நிறுவியதாகவும் பகிரங்கமாக கூறியவர். இந்த செயலணியின் பிறிதொரு உறுப்பினரான அரிசமலை விகாரையின் தலைமை பிக்குவான பானமறு திலவன்சா தேரர், கன்னியா சிவன் கோவிலை ஆக்கிரமிக்கும் முயற்சியை ஊக்குவித்தவர். இவ்வாறான பின்புலம் கொண்டவர்களை உள்ளடக்கிய கோட்டாவின் செயலணியின் நோக்கம் என்ன என்பதை ஊகிப்பது கடினமல்ல. கோட்டபாய ராஜபக்ச அதிகாரத்திலிருந்து வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து, கோட்டபாயவினால் முன்னெடுக்கப்பட்ட சிங்கள-பௌத்த ஆக்கிரமிப்பு திட்டங்களும் செயலிழந்தன. ஆனால் கோட்டபாயவினால் நியமிக்கப்பட்ட ஆளுனர்தான் இப்போதும் கிழக்கு மாகாண ஆளுனராக இருக்கின்றார் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

ஒரு நாட்டின் தொல்பொருள் திணைக்களத்தின் பிரதான பணியென்பது, அந்த நாட்டின் தொல்பொருள் அடையாளங்களை பேணிப்பாதுகாப்பதாகும் ஆனால் சிறிலங்காவின் தொல்பொருள் திணைக்களத்தின் பிரதான பணியோ வேறு. அதாவது, தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் அனைத்தையும் சிங்கள-பௌத்த அடையாளத்திற்குள் கொண்டுவருவதை மட்டுமே சிறிலங்காவின் தொல்பொருள் திணைக்களம் சிறப்பாக முன்னெடுத்துவருகின்றது. எங்களுக்குள்ள அனுபவத்தின் அடிப்படையில் நோக்கினால், தொல்பொருள் திணைக்களம் ஒரு ஆலய விடயத்திற்குள் தலையிடுகின்ற என்றால், நிச்சயம் அங்கு ஒரு இரகசிய வேலைத்திட்டமிருக்கும். இந்த பின்புலத்தில் நோக்கினால், திருகோணேஸ்வர ஆலயத்தை உள்ளடக்கியவாறு, உல்லாசத்துறை அபிவிருத்தியென்னும் பெயரில் தொல்பொருள் திணைக்களம் நுழைவதானது, நீண்டகால அடிப்படையில் கோணேசர் ஆலயத்தை விழுங்கும் ஒரு செயற்பாடுதான். ஏனெனில் உல்லாசத்துறை அபிவிருத்தியை செய்வதற்கு பல்வேறு இடங்கள் இருக்கின்ற போது, குறிப்பாக கோணேசர் ஆலயப்பகுதியை தெரிவுசெய்ய வேண்டிய அவசியமென்ன?

இங்கு பிறிதொரு விடயத்தையும் கவனிக்க வேண்டும். அதாவது, பொதுவாக ஆக்கிரமிப்புக்களை திட்டமிடுவதற்கு முன்னர், ஆக்கிரமிப்பிற்கு சாதகமான ஒரு சனக் கூட்டத்தை தயார் செய்துகொள்ள வேண்டியது அவசியமான ஒன்றாகும். ஏற்கனவே ஆலய எல்லைக்குள் வியாபார நிலையங்களை நடத்திவரும் சிங்கள வியாபாரிகள் குழுவொன்று தொல்பொருள் திணைக்களத்தின் நிகழ்சிநிரலுக்கு சாதகமாக இருக்கின்றது. இவர்களை ஆலயத்தின் காணிக்கு வெளியில் செல்லுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்ட போதிலும் கூட, இதுவரையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. கடந்த ஆட்சிக் காலத்தில், இது தொடர்பில் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது. அந்த இணக்கப்பாட்டின் அடிப்படையில் விடயங்களை முன்னெடுக்குமாறே ஆலய நிர்வாக சபை கேட்கின்றது. ஆனால் ஆளுனர் புதிதாக விடயங்களை அணுகப் போவதாக கூறிவருகின்றார். இதன் மூலம் திருகோணேஸ்வரர் ஆலய விடயத்தில் ஆளுனர் பிரத்தியேக ஈடுபாட்டை காண்பிக்கின்றார் என்பது வெள்ளிடைமலை. ஏனெனில் இது தொடர்பில் ஆலய நிர்வாகம் மற்றும் சிவில் சமூக குழுக்களுடனான சந்திப்பின் போது, விடயங்களை புதிதாக முன்னெடுப்பது பற்றியே ஆளுனர் வாதிட்டிருக்கின்றார்.

இந்த விடயம் தொடர்பில், அவர்களால் முடிந்த அனைத்தையும் ஆலய நிர்வாக சபை முன்னெடுத்திருக்கின்றது. ஆனால் இங்குள்ள பிரதான பிரச்சினை. இந்த விடயத்தில் அரசியல் ரீதியாக தலையீடு செய்வதற்கும், இதனை எதிர்ப்பதற்கும் திருகோணமலை தமிழ் மக்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் இல்லை. சம்பந்தன் என்னும் பெயரில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இருந்தாலும் கூட, இதனை கவனிக்கக் கூடிய நிலையில் அவர் இல்லை. திருகோணமலை தமிழரசு கட்சி நிர்வாகம் சம்பந்தன் விடயத்தில் ஒரு இறுதி முடிவையெடுக்க வேண்டும். மக்களா சம்பந்தனா – யார் முக்கியம் என்பதை தீர்மானிக்க வேண்டும். ஏனெனில் ஏனைய தமிழ் மாவட்ட தமிழ் மக்கனைவருக்கும் மக்கள் பிரதிநிதிகள் இருக்கின்றனர் ஆனால் திருகோணமலை தமிழ் மக்கள் மட்டும் பிரதிநிதியிருந்தும் அரசியல் அனாதைகளாக இருக்கின்றனர்.

திருகோணமலை மாவட்ட தமிழ் மக்களின் பிரதிநிதியான சம்பந்தன், கடந்த இரண்டு வருடங்களாக திருகோணமலைக்கு செல்லவில்லை. சம்பந்தன் இப்போது நாடாளுமன்றத்திற்கும் செல்வதில்லை. தமிழ் மக்களின் பிரதிநிதியின் பங்குபற்றல் இல்லாமலேயே திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அனைத்து முடிவுகளும் எடுக்கப்படுகின்றன. மாகாண சபையும் இல்லாத நிலையில், சிங்கள தரப்புக்கள் தமிழ் மக்களின் இயலாமையை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றன. இவ்வாறானதொரு பின்னணியில்தான், கோணேஸ்வரர் ஆலய விவகாரத்தில், எவ்வித இடையூறுகளுமின்றி, தொல்பொருள் திணைக்களத்தால் செயற்பட முடிகின்றது. தங்களை, ஆலய நிர்வாக சபையினால் தடுக்க முடியாதென்னும் நிலைப்பாட்டிலிருந்துதான் தொல்பொருள் திணைக்களம் எதேச்சாதிகாரமாக இந்த விடயங்களை முன்னெடுக்கின்றது.

இதுவரையில் ஆலய நிர்வாக சபைக்கு, தொல்பொருள் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பில் எந்தவொரு அறிவித்தலும் வழங்கப்படவில்லை. அதே வேளை, அவர்களது ஆலோசனைகளையும் கோரவில்லை. 1971 மற்றும் 1981 வர்hமானியின்படி, தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரத்திற்குட்பட்ட பகுதியில் தாங்கள் எதனையும் செய்ய முடியுமென்னும் அதிகாரத்திலிருந்தே தொல்பொருள் திணைக்கள அதிகாரி பேசியிருக்கின்றார். ஆனால் குறித்த வர்த்தமானி அறிவித்தலானது, நாடு யுத்தத்திற்குள் சிக்கியிருந்த போது வெளியிடப்பட்டவை. இது யுத்ததிற்கு பின்னரான பொறுப்புக் கூறல் தொடர்பில் பேசப்படும் காலம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த விடயத்தில் உடனடி கவனம் செலுத்த வேண்டும். இந்த விடயத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நேரடி கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். நாடு மோசமானதொரு பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருக்கின்ற, இவ்வாறானதொரு காலத்தில் கூட, தமிழ் மக்களின் வரலாற்று பெருமைமிக்க ஆலயமாகவும், இந்துக்களின் அடையாளமாகவும் இருக்கின்ற திருக்கோணேஸ்வர ஆலயத்தின் புனிதத்தன்மையை கேலிக்குள்ளாக்கும், இவ்வாறானதொரு திட்டத்தை தொல்பொருள் திணைக்களமும் ஆளுனரும் முன்னெக்க முற்படுவதை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட வேண்டும். சர்வதேச அழுத்தங்கள் எதனையும் நாம் கண்டுகொள்ளப் போவதில்லை என்னும் துனிவிலுருந்துதான் இவ்வாறான முடிவுகள் எடுக்கப்படுகின்றன.