செய்திகள்

திருப்பதியில் மைத்திரிபால சுவாமி தரிசனம்: கடும் பாதுகாப்பு ஏற்பாடு

இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று புதன்கிழமை அதிகாலை திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தார். இதனை முன்னிட்டு அந்தப் பகுதியில் நேற்று முதல் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

நான்கு நாள் சுற்றுப் பயணமாக இந்தியா சென்றுள்ள அவர், புதுடில்லியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.

பின்னர், பீகாரில் உள்ள புத்தகாயா விகாரத்திற்கு சென்று வழிபட்ட மைத்திரபால சிறிசேன, நேற்றிரவு திருப்பதிக்கு சென்றார். இன்று காலை அவர் சுவாமி தரிசனம் செய்தார். சிறிசேனவின் வருகையையொட்டி திருப்பதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

புதுடில்லியிலிருந்து விஷேட விமானத்தில் திருப்பதியை நேற்றிரவு சென்றடைந்த மைத்திரிபால மற்றும் அவரது மனைவியை மாநில சுற்றாடல்துறை அமைச்சர் வமான நிலையத்தில் வரவேற்றார். அங்கிருந்து தரைமார்க்கமாக திருப்பதி வெங்கடேசர் ஆலயத்தை அவர் சென்றடைந்தார்.

இன்று மாலை அவர் கொழும்பு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.