செய்திகள்

திருமணத்தின் மீது இன்னும் நம்பிக்கை உள்ளது : த்ரிஷா

திருமணத்தின் மீது எனக்கு இன்னும் நம்பிக்கை உள்ளது ஆனால் அதற்கு எனக்கு ஏற்ற ஒருவரை நான் சந்திக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் நடிகை த்ரிஷா.
சமீபத்தில் தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும், த்ரிஷாவுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து திருமணத் தேதியும் குறிக்கப்பட்ட நிலையில் அந்த திருமணம் திடீரென நின்று போனது. இடையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால் இந்த விஷயத்தில் மனம் உடைந்து போகாமல், தனது அடுத்த வேலைகளில் கவனம் செலுத்தத் தொடங்கி விட்டார் நடிகை த்ரிஷா.

பேட்டி ஒன்றில் அவர் தெரிக்கையில் –

எனது திருமணம் முடிவுக்கு வர ஆயிரம் காரணங்கள் உள்ளன. அவற்றை நான் எல்லோருக்கும் தெரிவிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை, என் அம்மா ஒருவருக்கு மட்டும் நான் பதிலளித்தால் போதுமானது. இன்று நான் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன் கடந்த காலத்தைப் பற்றி நினைவு கொள்ள விரும்பவில்லை.

திருமணம் முறிந்து போனது குறித்து கவலைப் படாமல் அடுத்த வேலைகளில் கவனம் செலுத்த விரும்புகிறேன், ஏனெனில் எல்லாவற்றையும் நல்லதாகவே எடுத்துக் கொள்ளும் பழக்கம் உள்ளவள் நான். எனது கவனம் முழுவதும் தற்போது அடுத்தடுத்த படங்களின் மீது தான் உள்ளது.

எனக்கு திருமணத்தின் மீது நம்பிக்கை உள்ளது ஆனால், சமுதாயத்திற்காக திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை. உண்மையைச் சொன்னால் திருமணத்திற்கு வயது ஒரு காரணமே இல்லை, சமுதாயத்திற்காக திருமணம் செய்து கொள்பவர்கள் திருமணத்திற்குப் பின் நிறையக் கஷ்டங்களை அனுபவிக்கின்றனர். ஒருவரின் மீது அன்பு கொண்டு செய்யும் திருமணமே சிறந்தது என்பதை உணர வேண்டும். எனக்கு ஏற்ற ஒருவரை இப்போது சந்தித்தால் கூட திருமணம் செய்து கொள்ள தயாராக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் நடிகை திரிஷா.