செய்திகள்

திருமலை அரசாங்க அதிபர் திடீர் இராஜினாமா: குற்றச்சாட்டுக்களையடுத்து அவசர முடிவு

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் மேஜர் ஜெனரல் ரஞ்சித் டி சில்வா நாளை தனது பதவியை இராஜினாமா செய்கிறார். அவர் மீது தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களையடுத்தே அவர் தனது பதவியை துறக்க முன்வந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலை மாவட்ட வரலாற்றில் முதல் முதலாக அதன் அரசாங்க அதிபராக இராணுவ உயர் அதிகாரியான மேஜர் ஜெனரல் ரஞ்சித் டி சில்வா 2006ம் ஆண்டில் திருமலையில் அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் ஆரம்பமான போது நியமிக்கப்பட்டார்.

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் ஜெயலாளர் கோதாபாய ராஜபக்‌ஷவின் நெருங்கிய உறவினரான இவர், சம்பூரில் பத்திரகாளி அம்மன் கோவில் தகர்க்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டவர் எனக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

இவர் பதவி விலக வேண்டும் என இந்தியாவும் அழுத்தம் கொடுத்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மகிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக்காலத்திலேயே இவரை இடமாற்றம் செய்வதற்கு இணக்கம் காணப்பட்ட போதிலும், கோதாபாய ராஜபக்‌ஷவின் நெருங்கிய உறவினராக இவர் இருந்தமையால்ஊடனடியாக அவரை இடமாற்றம் செய்ய முடியவில்லை.

தற்போது அரசாங்கம் மாற்றமடைந்திருக்கும் நிலையிலேயே இவர் அவசரமாக தமது பதவியை இராஜினாமா செய்ய முன்வந்திருக்கின்றார். புஷ்பகுமார என்பவர் புதிய அரசாங்க அதிபராக நியமிக்கப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.