செய்திகள்

திருமாவளவனின் தனிச் செயலாளர் படுகொலை: சென்னையில் பயங்கரம்

விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவனின் தனிச் செயலாளர் வெற்றி செல்வன் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டு உள்ள சம்பவம் சென்னையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலைச் சிறுத்தைக் கட்சியைச் சேர்ந்த வெற்றி செல்வன், விடுதலைச் சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவனின் தனிச் செயலாளராக உள்ளார்.

இந்நிலையில், இன்று காலை 8 மணியளவில் மடிப்பாக்கம் கூட் ரோட்டில் உள்ள தனது அலுவலகத்தில் வெற்றிச்செல்வன் இருந்தபோது, 8 பேர் கொண்ட ஒரு மர்ம கும்பல் அவரை சுற்றிவளைத்து அரிவாளால் வெட்டி உள்ளது. இந்த கொலைவெறி கும்பலிடம் இருந்து உயிர் தப்பிக்க வெற்றி செல்வன் அங்கிருந்து தப்பி ஓடி இருக்கிறார். ஆனாலும், விடாமல் துரத்தி சென்ற கும்பல், அவரை வெட்டி சாய்த்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி இருக்கிறது.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த வெற்றி செல்வனை அப்பகுதி மக்கள் மீட்டு உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனாலும், மருத்துவர்களின் தீவிர சிகிச்சை பலனளிக்காமல் வெற்றிச்செல்வன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வெற்றி செல்வனை வெட்டி படுகொலை செய்த மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

சொத்துக் தகராறில் இந்த படுகொலை நடந்துள்ளதாக காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னையில் பட்டப்பகலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், அக்கட்சியினர் மற்றும் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.