செய்திகள்

திரைக்குப்பின் இருப்பவர்களுக்கும் அங்கீகாரம் தேவை! குற்றம் கடிதல் இயக்குனர் பேச்சு

“ஒரு திரைப்படம் வெற்றி பெற்றால் அதில் நடித்தவர்களுக்கு மட்டுமன்றி, அதற்காக உழைத்த தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்களுக்கும் உரிய அங்கீகாரம் போய்ச் சேர வேண்டும்’ என்று தேசிய விருது பெற்ற “குற்றம் கடிதல்’ திரைப்படத் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ் குமார் கேட்டுக் கொண்டார்.

தில்லி விஞ்ஞான் பவனில் 62-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் பிராந்திய மொழிப் படங்கள் வரிசையில், சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான விருதை “குற்றம் கடிதல்’ திரைப்படத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.

இது குறித்து தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“இயக்குநர் ஜி.பிரம்மா இயக்கிய “குற்றம் கடிதல்’ திரைப்படத்தின் கதையோட்டம் மிகுந்த நம்பிக்கையை எனக்குள் ஏற்படுத்தியது. இதனால், இப்படத்தை நானே முழுவதும் தயாரிக்க முடிவு செய்தேன். 61-ஆவது தேசிய திரைப்பட விருதில், நான் தயாரித்த “தங்க மீன்கள்’ திரைப்படத்துக்கு விருது கிடைத்தது. இம்முறை “குற்றம் கடிதல்’ படத்துக்குக் கிடைத்துள்ளது. “தங்க மீன்கள்’ படத்துக்குச் சமூகத்தில் நல்ல பெயர் கிடைத்தாலும், வணிக ரீதியில் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் ஈட்டவில்லை. ஆனால், “குற்றம் கடிதல்’ திரைப்படம் வணிக ரீதியிலும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. இப்படத்தை உலகம் முழுவதும் வரும் மே 22-ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளோம்.

இப்படம் தமிழில் வெளிவரும் முன்பே, ஹிந்தி மொழியிலும் வெளியிட ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒரு திரைப்படம் வெற்றி பெற்றால் அதில் நடித்தவர்களுக்கு மட்டுமே அங்கீகாரம் கிடைக்கிறது. ஆனால், ஒரு படத்தை வெளிக்கொண்டு வருவதற்கு மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்களும் பெரு முயற்சிகள் மேற்கொள்கின்றனர். அவர்களுக்கு உரிய அங்கீகாரம் போய்ச் சேருவதில்லை. எனவே, அவர்களுக்கும் அங்கீகாரம் கிடைக்கச் செய்வது அவசியம். அதற்கான முயற்சிகள், என் படங்கள் மூலம் ஏற்படுத்தப்படும்’ என்றார்.

“குற்றம் கடிதல்’ இயக்குநர் ஜி.பிரம்மா பேசுகையில், “இப்படம் எனக்கு மட்டும் முதல் படம் அல்ல. என்னுடன் பணியாற்றிய அனைத்துத் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் முதல் படம்தான். இந்த முதல் படமே, தேசிய விருது பெற்றுக் கொடுத்து பெருமைப்பட வைத்துள்ளது. சமூகத்தில் உள்ள மக்களை ஒன்றிணைக்கும் முயற்சியாகவே இப்படம் எடுக்கப்பட்டது. எனவே, இது மக்களுக்கான படம் என்பதை பல்வேறு திரைப்பட விழாக்கள் முதல் தேசிய விருது வரை நிரூபிக்கப்பட்டுள்ளன’ என்றார்.