செய்திகள்

திரையுலகில் 50 ஆண்டு: கே.ஜே.ஜேசுதாஸூக்கு பாராட்டு விழா

திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள பின்னணிப் பாடகர் கே.ஜே.ஜேசுதாஸூக்கு வரும் 25-ஆம் தேதி சென்னையில் பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது.

சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் இந்த விழாவில் இந்திய திரையுலக நட்சத்திரங்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைத்துத் தரப்பினரும் பங்கேற்க உள்ளனர்.

1964-இல் வீணை எஸ்.பாலசந்தரின் “பொம்மை’ படத்தில் “நீயும் பொம்மை, நானும் பொம்மை…’ என்ற பாடலின் மூலம் திரையுலகில் ஜேசுதாஸ் அறிமுகமானார்.

அதைத் தொடர்ந்து, பல்வேறு மொழிகளில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான திரை இசைப் பாடல்களைப் பாடியுள்ளார். பல மலையாளத் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவரது கர்நாடக இசைக் கச்சேரிகளுக்கு இப்போதும் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.

இவர் திரை இசைப் பாடல்களுக்காக 7 முறை தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். மாநில அளவில் தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரம், மேற்கு வங்கம் ஆகிய மாநில அரசுகளின் சார்பில் சிறந்த திரைப்படப் பாடகர் விருதை 45 முறை பெற்றுள்ளார்.

1975-இல் பத்மஸ்ரீ விருது, 2002-இல் பத்மபூஷன் விருது, அன்னை தெரசா வழங்கிய தேசிய குடிமகன் விருது உள்ளிட்ட பல விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.

தமிழ்த் திரையுலக இசையமைப்பாளர்கள், திரைக் கலைஞர்கள் சார்பில் இந்த விழா நடத்தப்படுகிறது.