செய்திகள்

தில்லைச் சிவக்கொடி தெய்வத்தமிழ் புலிக்கொடி

மருத்துவர் சி. யமுனாநந்தா

சூரியபகவானின் இருகுமாரர்கள் மனு, இயமன் ஆவார்கள். வெளிப்படப் பாவஞ்செய்தவரைத் தண்டிக்க மனுவும், வெளிப்படாமற் பாவஞ்செய்தவரைத் தண்டிக்க நரகத்தில் இயமனும் சிவபிரானால் நியமிக்கப்பட்டனர். மனு பூமியில் கொளட தேசத்தில் இருந்து அரசாண்டார். நான்கு மனுக்கள் அரசாண்டபின் ஐந்தாம் மனுவுக்கு பிறந்த புத்திரரே இரணியவர்மன். மனுவின் வழித்தோன்றலான இரணியவர்மனுக்கு வியாக்கிரபாதரால் சோழேசனாக ஆக்கப்பட்டார்.

கௌட தேசத்தை அரசுபுரிந்த ஐந்தாவது மனு என்பவனுடைய மூத்த புதல்வன் இரணியவர்மன். சிங்க நிறம் உடையதாயிருந்ததால் தலயாத்திரை செய்து தெற்கே தில்லைக்கு வந்து வியாக்கிரபாதர் உதவியால் தில்லைச் சிவகங்கையில் படிந்து பொன்னிற மேனியைப் பெற்றார். இவர் வியாக்கிரபாத முனிவரது சொற்படி அந்தர்வேதியில் இருந்து மூவாயிரம் முனிவர்களை நடராஜப் பெருமானது பூஜைக்காக தில்லைக்கு அழைத்து வந்தார். தில்லை சேர்ந்து எண்ணிப் பார்க்கையில் ஒரு முனிவரையும் காணாது திகைத்தார். அப்போது அசரீரி அவர்கள் எம்மை ஒப்பவர்கள் யாம் அவர்க்கு ஒப்பு. நாம் அவர்களில் ஒருவன் எனக் கூறக்கேட்டு யாவரும் மகிழ்ந்து பணிந்தனர். தேவர்கள் பூமாரி பொழிந்தனர். ஈங்கு அந்தர்வேதி கங்கைக்கும் யமுனைக்கும் நடுவே உள்ள தேசம்.

தில்லைவாழ் அந்தணர்களுக்கு இருக்கையும் மேருமலை போன்ற ஏழுநிலை மாளிகைகளையும், தேர் வரிசைகள், திருக்கோயில் கோபுரங்கள், கனகசபை முதலியவை யாவும் செய்வித்து அந்தணர்களைக் கொண்டு திருவிழாவும் நடத்தி வைத்தவர் மகாதவசி இரணியவர்மன். கௌடதேச அரசாட்சியைத் தம்பியாருக்குக் கொடுத்து தில்லையிலேயே திருக்கூத்தைத் தரிசிக்க விரும்பினான். இவனை வியாக்கிரபாதர் சோழ ராஜனாக்கி புலிக்கொடியையும் அருளினார். தில்லை நடராஜருக்கு மலரால் அர்ச்சனை செய்வதற்கு அதிகாலையில் மலர்களில் தேனமுதை வண்டுகள் பருகாமல் பறிப்பதற்காக, மரங்களில் வழுவாது ஏறுவதற்கு நடராஜன் அருளால் பாணியிலும், பாதங்களிலும் புலியின் நகங்கள் போன்ற தன்மையைப் பெற்றவர் வியாக்கிரபாத முனிவர் ஆவார். இதனால் தில்லைக்குப் புலியூர் எனப் பெயராயிற்று.

“புலிப்பதி காவல் புரப்பா யென்யந்த மில்முந்து
புலிக்கொடி யங்கை அகத்துய்த்து…….
அண்ணல் பாதம் இரண்டும் எடுத்தவன்
முச்சி பலிப்பித்தான்”
(கோயிற்புராணம் திருவிழா – 67)

“மனு நெறியுடன் வளர் சோனாடர் கோனுடனும்பர் சேடும்
மகபதி புகழ் புலியூர் வாழுநாயகர்
………….சிவசிவ ஹரஹர தேவா நமோ நம
………….திசையிலும் மிசையிலும் வாழ்வே நமோ நம
திரிபுர மெரிசெய்த கோவே நமோ நம
ஜெயஜெய ஹரஹர தேவா சுராதிபர் தம்பிரானே”.

திருப்புகழ் 611
தெளிவுரை தணிகைமணி வ. சு. செங்கல்வராயபிள்ளை. (1951)

வியாக்கிரபாதர் சோழமன்னனாக சூரிய புத்திரனான மனுவின் வம்சத்தில் பூமியில் பாவங்களைத் தண்டித்து நீதியுடன் அரசாள மனுவம்சத்திற்கு அருளியதே புலிக்கொடியாகும். தில்லைவாழ் அடியார்கள் சிவசாருபத்தினர். சைவசமயத்தின் நந்திக்கொடி சிவத்திற்கு உரியதோ அதேபோல் புலிக்கொடி சிவசாரூபத்திற்கு உரியது. இதுவே சூரியத் தேவர்களிற்கும் தில்லை நடராஜனுக்கும் உள்ள அருட்கொடை. கந்தவேளிற்கு சேவற்கொடிபோல் சூரிய தேவர்கட்கும் சோழ வம்சத்துக்கும் புலிக்கொடி மேன்மையது.

யாம் இங்ஙனம் சிவ மேன்மையுற்ற புலிக்கொடிதனை போற்றிப் பூசிப்பது பூலோக தர்மம் நிலைப்பதற்கு அவசியமானது.

“மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்”