செய்திகள்

தீர்மானம் தொடர்பில் உலகத் தமிழ் மக்களுக்கு வட மாகாண முதலமைச்சர் விடுக்கும் வேண்டுகோள்

வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தின் தாற்பரியத்தை உலகம் முழுவதும் எடுத்துக் கூறுவதுடன் தமிழ் மக்களின் கடந்தகால மற்றும் இக்கால பிரச்சனைகளையும் எடுத்தியம்பி நல்லதொரு அரசியல் மாற்றம் ஏற்பட ஆவன  செய்யவேண்டும் என்றும்  உலகம் பூராகவுமுள்ள தமிழ் மக்களுக்கு வட மாகாண சபை முதலமைச்சர் நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“இன்றைய கால கட்டம் எமது பயணத்தில் ஒரு தங்குமிடம் போன்றது. இதுவரை நடந்தேறியதை இப்பொழுது நாங்கள் ஆவணப்படுத்தியுள்ளோம். இனி நடக்கப்போகின்றவை நன்மையாக நடக்கும் என்று எதிர்பார்க்கின்றோம். இதற்கு சிங்கள பொது மக்கள் எமக்கு ஆதரவு நல்க வேண்டும். இனியும் தமிழ் மக்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதை சிங்கள மக்கள் எதிர்க்க வேண்டும் ” என்றும் அவர் கூறினார்.

வட  மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு உலகம் முழுவதிலுமிருந்து தமிழ் மக்கள் மகிழ்ச்சியும் பாராட்டும்  வெளியிடப்பட்டுவருவது குறித்தும் அவர்களிடம் முதலமைச்சர் எதிர்பார்ப்பது என்ன என்பது குறித்தும் சமகளம் இணையத்தளம் சார்பாக கருத்துக் கேட்டபோதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எங்களுடைய தீர்மானம் உலகத் தமிழ் மக்கள் இடையே நல்ல வரவேற்றைப் ஏற்படுத்தியிருப்பது எனக்குத் தெரியும். ஒரு புறம் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்த மக்கள். மறுபுறம் தென்னிந்தியாவில் இருந்து சென்று வெளிநாடுகளில் வசிக்கும் மக்கள். இருசாராருமே எமது தீர்மானத்தை வரவேற்றிருப்பதை நான் உணருகின்றேன்.

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து சென்ற எமது உறவுகள் எங்களுடைய பிரேரணையில் குறிப்பிட்ட காலகட்டத்தில், அதில் குறிப்பிட்ட காரணங்களுக்காக வெளிநாடு சென்றவர்கள் மற்றும் தென்னிந்தியாவில் இருந்து சென்றவர்கள் தொப்புள் உறவின்காரணமாக இலங்கையில்  தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அவலங்களை உணர்ந்து இந்த எமது பிரேரணைக்கு ஆதரவு தெரித்திருக்கிறார்கள். அத்துடன் தென்னிந்தியாவில் இருக்கும் மக்களும் கட்சிகளும் தலைவர்களும் இந்த பிரேரணையை வரவேற்கின்றார்கள். இதில் இருந்து உலகில் இருக்கும் தமிழ் பேசும் மக்கள் ஒருமித்து இலங்கையில் தமிழ் மக்களுக்கு பல வருடகாலமாக ஏற்பட்ட அவலங்களை எடுத்தியம்புவதை வரவேற்றிருக்கிறார்கள் என்று தெரிகிறது. இவர்கள் அனைவருக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இது சம்பந்தமாக ஜெனீவாவில் என்ன  நடவடிக்கைகள் எடுக்கப்படுவன என்பது பற்றி என்னால் கூற முடியாது.

ஆனால் உலகம் பூராகவும் உள்ள தமிழ் மக்கள் இந்த பிரேரணையை மையமாக வைத்து அதன் தாற்பரியத்தை உலகெங்கும் எடுத்து கூறுவது அவசியம் என்று நான் நினைக்கின்றேன்.

60 வருடங்களுக்கு மேலாக இலங்கை தமிழ் மக்களுக்கு நடந்தது பற்றி பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். அதனை எடுத்துக்காட்ட வேண்டும். சிங்கள மக்களுக்குக் கூட அது பற்றி பலருக்கு தெரியாது. இதனால்தான் எங்களுடைய பிரேரணையை சிங்கள மொழிக்கு மொழிக்கு  மொழி பெயர்க்குமாறு சிலரிடம் கேட்டுள்ளேன். தீர்மானம் மொழிபெயர்த்து வந்ததும் சிங்கள மக்களுக்கு அறிவிக்கப்படும். இந்த தீர்மானம் சிங்கள மக்களுக்கு எதிரானது அல்ல. சிங்கள அரசியல் தலைமைத்துவம் தமது சுய நலத்திற்காக இதுவரை காலமும் நடந்து கொண்ட விதத்தை எடுத்து இயம்பும் ஆவணமே அது.

இன்றைய கால கட்டம் எமது பயணத்தில் ஒரு தங்குமிடம் போன்றது. இதுவரை நடந்தேறியதை இப்பொழுது நாங்கள் ஆவணப்படுத்தியுள்ளோம். இனி நடக்கப்போகின்றவை நன்மையாக நடக்கும் என்று எதிர்பார்க்கின்றோம். இதற்கு சிங்கள பொது மக்கள் எமக்கு ஆதரவு நல்க வேண்டும். இனியும் தமிழ் மக்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதை சிங்கள மக்கள் எதிர்க்க வேண்டும்.

இவற்றை எல்லாம் உலகம் வாழும் தமிழ் உறவுகள் புரிந்து எமது நாட்டில் நல்லதொரு அரசியல் மாற்றம் ஏற்படுவதற்கு ஆவன செய்ய வேண்டும். உலக அரங்கிலும் எமது பிரச்சினைகளை எடுத்து இயம்ப வேண்டும்.

ஆகவே, உலகிலுள்ள எமது தமிழ் உறவுகளே எமது தமிழ் மக்களின் கடந்த கால பிரச்சினைகள் பற்றியும் தற்கால பிரச்சினைகள் பற்றியும் எதிர்காலத்தில் அரசியல் ரீதியாக எமது தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய மாற்றங்களைப் பற்றியும் உலக அரங்குகளில் நீங்கள் எடுத்துக் கூற முன்வரவேண்டும்”. என்று கூறினார்.