செய்திகள்

தீர்வு தொடர்பாக கூட்டமைப்பின் நிலைப்பாடு தெளிவுபடுத்தப்படல் வேண்டும்: டக்ளஸ்

இலங்கை அரசு மட்டுமல்ல இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஏமாற்றுவதாக இருந்தால் தீர்வை அடைவதற்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வழி என்னவாக உள்ளது? என ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பினார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே செயலாளர் நாயகம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை அரசு மட்டுமன்றி இந்திய உள்ளிட்ட சர்வதேச நாடுகள் தீர்வு தொடர்பில் ஏமாற்றுவதாக இருந்தால் தீர்வை அடைவதற்கான வழி என்னவாகவுள்ளது என்றும், அதற்கான வழியை கூட்டமைப்பே தெளிவுபடுத்த வேண்டும்.

அத்துடன், புதிய அரசில் நம்பிக்கையில்லையென்றால் தேர்தல் காலங்களின் போது மக்களை பிழையாக வழிநடத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

0 (1)தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளேயே பல மாறுபட்ட கருத்துக்கள் உள்ளதாகவும், தேசிய அரசியலில் ஒருபோதும் இணையமாட்டோம் என பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ள நிலையில் இதற்கு மாறாக தேசிய அரசியலில் இணைந்து கொள்வதற்கு தயாராக இருப்பதாகவும், இரண்டு வருடங்களுக்குள் உரிய தீர்வை பெற்று விட முடியுமென கூட்டமைப்பின் மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே நீண்ட ஆட்சியில் தான் பிரச்சினைக்கு தீர்வு காண முடியுமென்ற எமது கொள்கைக்கு வாக்களித்த மக்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளும் அதேவேளை, புதிய ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவுடன் பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடி வரும் நிலையில் புதிய அரசிடமும் பல்வேறு விதமான கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளோம்.

முன்னைய அரசின் காலப்பகுதியில் படைத்தரப்பினரிடமிருந்த 2ஃ3 மேற்பட்ட நிலங்களை மக்களிடம் விடுவித்துள்ளோம். அதுமட்டுமன்றி ஒமந்தை சோதனைச் சாவடியில் மக்களின் நலன்கருதி சோதனை நடவடிக்கைகளையும் இலகுபடுத்தியிருந்தோம்.

வடபகுதியில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறுபட்ட அபிவிருத்தி செயற்திட்டங்களை நாம் கடந்த காலங்களில் இணக்க அரசியலூடாக முன்னெடுத்திருந்தோம். நாவற்குழியில் 300 வீடுகள் பிரேமதாஸ அவர்களால் கட்டிக் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் மகேஸ்வரன் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் 130 வீடுகளை விற்றதாகவும் ஏனைய வீடுகளை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினூடாக நான் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பித்து எனது கட்சியின் நிதியினைக் கொண்டு புனரமைப்பு செய்திருந்ததாகவும் செயலாளர் நாயகம் அவர்கள் தெரிவித்தார்.

அத்துடன், முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் அமைச்சினூடாக குருநகர் ஐந்து மாடி கட்டிடத்தொகுதி 100 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டதாகவும் அப்போது அங்கு வைத்து வழங்கப்பட்ட நாவற்குழி வீட்டுத்திட்டம் தொடர்பான பத்திரம் அத்தாட்சிப் பத்திரமே அன்றி காணி உறுதி அல்ல என்றும் தெளிவுபடுத்தினார்.

யாழ்.பல்கலைக்கழக பேரவை தொடர்பில் கேட்கப்பட்டபோது அது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்பதுடன் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இவ்வாறு செயற்படுகின்றனர் என்றும் இதனை அத்தாட்சிப்படுத்தினால் அதனை மறுபரிசீலனை செய்வதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
01

எமது மாற்றுத் தலைமையின் வேலைத்திட்டமானது 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ஆரம்பிக்கும் இலக்கை கொண்டது என்றும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு மற்றும் சர்வகட்சி மாநாட்டுக்கூடாக வடக்கு கிழக்கிற்கு விசேட அதிகாரம் வழங்கப்பட வேண்டுமென்பதும் எமது நோக்காகும்.

எமது அரசியலை விமர்சித்த தமிழ்;த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று அதையே ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்ததுடன் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டிருந்தால் அப்போதே சுயநிர்ணய உரிமையை பெற்றிருக்க முடியும்.

மாற்றத்தை விரும்பும் மக்களுக்கு மாற்றத்தைக் கொடுப்பதற்கு நாம் தயாராகவுள்ளோம் என்பதுடன், தென்னாபிரிக்காவில் உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவின் பொறிமுறை எமது நாட்டிற்கு ஏற்புடையதல்ல என்றும் இந்நாட்டுக்கான வேறொரு பொறிமுறையை கண்டறிய வேண்டுமெனவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதனிடையே யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் இருந்து ஈ.பி.டி.பியை வெளியேற்றுவதாக பிரதியமைச்சர் விஜயகலா தெரிவித்தமை தொடர்பில்; தெரிவிக்கும் போது அது ஜனநாயக விரோத கருத்து என்பது மட்டுமன்றி அவரது அறியாமையின் வெளிப்பாடு என்றும் தெரிவித்தார்.

அத்துடன், அரசியல் படுகொலைகள் குறித்து உண்மையை கண்டறியும் நோக்கில் 70 களிலிருந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென்பதே தமது நிலைப்பாடாகுமென்றும் சுட்டிக்காட்டினார். இவ் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கும் செயலாளர் நாயகம் பதிலளித்திருந்தார். இதன்போது ஈ.பி.டி.பியின் ஊடகப் பேச்சாளர் பசுபதி சீவரத்தினம், ஈ.பி.டி.பியின் ஊடகச் செயலாளர் ஸ்ராலின் ஆகியோர் உடனிருந்தனர்.