செய்திகள்

தீவிரமடையும் அரசியல் நெருக்கடி: அநுர குமாரவுடன் ரணில் இன்று பேச்சு

பிரதமர் ரணில் விக்கிரம சிங்க ஜே.வி.பி தலைவர் அநுரகுமார திசாநாயக்க இருவருக்குமிடையிலான முக்கிய சந்திப்பொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் இடம்பெறவுள்ளது. தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் குறித்தே இச்சந்திப்பின்போது முக்கியமாகப்பேசப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

20 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தற்போதைய நிலையில் நிறைவேற்றப்படுமானால் சிறிய கட்சிகள், சிறுபான்மைக் கட்சிகளுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டதாகவே அமையுமெனச் சுட்டிக்காட்டி இருக்கும் ஜே.வி.பி. தலைவர் அநுரகுமார திசாநாயக்க எதிர்வரக் கூடிய பாராளுமன்றத் தேர்தலை புதிய முறையில் நடத்தக்கூடாது என பிரதமரிடம் வலியுறுத்தவிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

அதேசமயம் 20 ஆவது திருத்தத்தை பாராளுமன்றத்தில் தோற்கடித்து உடனடியாக பாராளுமன்றத்தை கலைப்பதற்கான முயற்சிகளில் இணைந்து செயற்படுவது தொடர்பாகவும் தேர்தலுக்குப் பின்னர் புதிய அரசாங்கத்தின் மூலம் அனைத்துத் திருத்தங்களையும் உள்வாங்கி 20 ஆவது திருத்தத்தை  நிறைவேற்றிக் கொண்டதன் பின்னர் எதிர்க்காலத்தில் வரக்கூடிய தேர்தல்களை புதிய முறையில் நடத்துவது குறித்தும் இன்றைய சந்திப்பில் கவனம் செலுத்தப்படவிருப்பதாக அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

20 ஆவது திருத்தம் தொடர்பில் சிறிய, சிறுபான்மைக் கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்திவரும் நிலையில் திருத்தம் பாராளுமன்றத்துக்கு வருமானால் அதற்கு 2/3 பெரும்பான்மையை பெற முடியாத நிலை ஏற்படலாமெனத் தெரியவருகின்றது. இந்த விடயத்தில் ஜே.வி.பி. சிறுபான்மைக் கட்சிகளின் பக்கம் நின்றே செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது.

இதேவேளை, சிறிய, சிறுபான்மைக் கட்சிகளின் யோசனைகள் உள்வாங்கப்படாமல் வர்த்தமானியில் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் 20 ஆவது திருத்தத்தை உடனடியாக இரத்துச் செய்யுமாறு சிறிய மற்றும் சிறுபான்மைக்கட்சிகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதியை வலியுறுத்தத் தீர்மானித்துள்ளனர்.